Published : 23 Dec 2017 03:01 PM
Last Updated : 23 Dec 2017 03:01 PM

யானைகளின் வருகை 105: வனத்துறை அலட்சியம்; பலியான பிரான்ஸ் பெண்மணி

அந்தப் பெண்மணியின் பெயர் ஹார்னிவெல். 66 வயதாகும் ஹார்னிவெல் பிரான்ஸ் நாட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் பாட்ரிக் ஜவான் லிவிக். 38 வயதாகும் இவருடன் 11.8.2009 அன்று சுற்றுலாவுக்காக இந்தியா வந்துள்ளார். நேரே பெங்களூர் வந்து 2 நாட்கள் சுற்றிப்பார்த்து விட்டு 13-ம்தேதி முதுமலை பகுதிகளுக்கு வந்துள்ளார்கள் அம்மாவும் மகனும்.

முதுமலையைச் சுற்றியுள்ள பொக்காபுரம், மசினக்குடி, மாவனல்லா உள்ளிட்ட கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட தனியார் ரிசார்ட்டுகள் உள்ளன. இவற்றில் சில ரிசார்ட்டுகள் மட்டுமே அரசு அனுமதி பெற்று இயங்குபவை. மற்றவை திடீர் ரிசார்ட்டுகள் என்றே சொல்லலாம். அதாவது ஒரு வீடு இருந்தால் அதற்கு மேல் ஓர் அறையைக் கட்டிக்கூட அதை ரிசார்ட் என்ற பெயரில் ஒரு நாளைக்கு ரூபாய் 2 ஆயிரம், ரூபாய் 5 ஆயிரம் என வசூலிப்பவர்கள் ஏராளமாக உள்ளனர்.

முதுமலையில் சுற்றித்திரியும் மான், கரடி, யானை, செந்நாய், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் இப்பகுதிகளில்தான் நிறைய திரிவதால் அவற்றுக்கு யாரும் ஊறு விளைவிக்கும் வண்ணம் நடந்து கொள்ளக்கூடாது என்பது வனத்துறையின் கட்டளை. போதிய பாதுகாப்பின்றி மலையேற்றம் போவதோ, காடுகளுக்குள் வனவிலங்குகள் பார்க்கச் செல்வதோ கூடாது என்பதையும் அறிவுறுத்தி வருகிறது. அப்படி செல்வதனால் வனத்துறையினரின் அனுமதியோடு, அவர்கள் அனுப்பி வைக்கும் ஆதிவாசி மக்கள் துணையோடுதான் செல்ல வேண்டும். ஆனால் அதை யாரும் கடைபிடிப்பதில்லை.

குறிப்பாக தங்கும் விடுதிக்காரர்கள் இதனை துச்சமாகவே மதிக்கின்றனர். தங்கள் ரிசார்ட்டில் தங்கும் சுற்றுலா பயணிகளிடம், 'உங்களுக்கு வனவிலங்குகளை காட்டுகிறேன்!' என்று அதற்கு ஆயிரக்கணக்கில் பணம் கறந்து கொண்டு, அனுபவமில்லாத கைடுகளோடு சுற்றுலாப் பயணிகளை அனுப்பி வைத்து விடுகிறார்கள். இரவு நேரங்களில்தான் அதிக மிருகங்கள் தென்படும். அப்போது அவற்றை பார்ப்பதற்கு த்ரில்லிங்காகவும் இருக்கும். அதில் ரிஸ்க்கும் அதிகம் என சொல்லி அதற்கு இரண்டு மடங்கு கட்டணமும் வசூலிக்கிறார்கள்.

இப்படித்தான் 14.2.2009 அன்று அதிகாலை பிரான்ஸ் பெண்மணி ஹார்னியையும், அவர் மகன் பாட்ரிக்கைம் ட்ரக்கிங் அனுப்பியிருக்கிறார்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்காரர்கள். அவர்களுடன் ஜார்ஜ், ராஜூ ஆகிய இரண்டு கைடுகளையும் அனுப்பியிருக்கிறார்கள். அந்த கைடுகள் இவர்களை மசினக்குடி அருகில் உள்ள வனப்பகுதிகளுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இங்குள்ள விபூதி மலை அடிவாரத்தில் புதர்காடுகள் உண்டு. அங்கே ஒரு யானைக்கூட்டம் மேய்ந்து கொண்டிருந்திருக்கிறது. அதைப் பார்த்து மகிழ்ச்சிக்குள்ளான பாட்ரிக்கும், ஹார்னியும் அவற்றை படம் பிடிக்க முயன்றிருக்கின்றனர்.

பொதுவாகவே மனித உருவம் தென்பட்டால், அந்த யானைக்கூட்டத்தில் உள்ள ஒரு யானை மட்டும் விழிப்பாகி விடும். தவிர யானை போன்ற மிருகங்கள் உள்ள காடுகளில் வெள்ளை உடை அணிந்து கொள்ளக் கூடாது. பாட்ரிக்கோ வெள்ளை நிறச்சட்டையும், வெள்ளை நிற பேண்டும் அணிந்திருக்க, அவரை யானைக்கூட்டத்திலிருந்த ஒரு யானை துரத்த ஆரம்பித்திருக்கிறது. அதில் அவர் பதறியடித்துக் கொண்டு ஓட, இடையே வந்து மாட்டிக் கொண்டிருக்கிறார் ஹார்னி. யானை அவரை தும்பிக்கையால் தூக்கி ஒரு சுழற்று சுழற்றி வீசிவிட்டுச் சென்றுவிட்டது. ஹார்னியையும், பாட்ரிக்கையும் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்திருக்கின்றனர் உடன் சென்றவர்கள்.

வரும் வழியிலேயே ஹார்னி இறந்து விட்டார். பாட்ரிக் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உடனே விசாரணையில் இறங்கிய வனத்துறை அதிகாரிகள் இவர்களை டிரக்கிங் கூட்டிச் சென்ற இரண்டு கைடுகளையும், ரிசார்ட் மேலாளரையும் வனத்துறை அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வெளிநாட்டவரை அழைத்துச் சென்றதாக குற்றம்சாட்டி கைது செய்தனர்.

பாட்ரிக்கிடம் பேசிய போது, ''அங்கே ஒரு யானைக்கூட்டம் நின்றிருந்தது. அதற்குப் பக்கத்திலேயே ஒரு காட்டுமாடுகள் கூட்டமும் இருந்தது. யானைக்கூட்டம் காட்டு மாடுகளை துரத்த ஆரம்பித்தது. அது தெரியாமல் அங்கே போனதால்தான் யானை எங்களைத் தாக்கியது!'' என தெரிவித்தார்.

''இது ஒரு ஆரம்பம்தான். அனுமதியின்றி இயங்கும் ரிசார்ட்டுகளுக்கும், மாமூல் வாங்கும் வனத்துறையினருக்கும் லகான் போடாவிட்டால் இதுபோன்ற பலிகள் தொடரும்!'' என்றனர் இப்பகுதி மக்கள். அவர்கள் மேலும் பேசும்போது, ''இருபது வருஷங்களில் இங்கே இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை. விலங்குகள் வாழும் பகுதிகளில் ரிசார்ட்டுகள் அமைப்பதே தவறு. அவற்றை திடீர் ரெய்டு நடத்தி, அனுமதியில்லாதவற்றை களையவேண்டும். இங்குள்ள அபாயம் வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு என்ன தெரியும். இங்கே வரும்போதே 'யானைகளைப் பார்க்க வேண்டும்; புலிகளைப் பார்க்க வேண்டும்!' என்றுதான் குதிக்கிறார்கள். இந்த ஆவலை கண்டபடி காசாக்குகிறார்கள் கைடுகள். அதற்கு வனத்துறையினரும் துணை போகிறார்கள்!'' என்றனர் வேதனை பொங்க.

இன்றைக்கு இந்த பிரான்ஸ் பெண்மணி இறந்து 8 வருடங்கள் ஆகிவிட்டன. ஒன்றுக்கு நான்கு மடங்காக இப்போது இந்தச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரிசார்ட்டுகள் பெருகி நிற்கின்றன. அதற்கேற்ப கைடுகளும் பத்து மடங்கு பெருகி விட்டனர். சுற்றுலா பயணிகளும் முன்புக்கு பல மடங்கு வரத்தான் செய்கின்றனர். அவர்கள் மூலமாக என்ன வசூலிக்கலாம்; தம் பாக்கெட்டை நிரப்பலாம் என்றுதான் இங்குள்ள அரசு ஊழியர்கள், வன ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் முயற்சி எடுக்கிறார்களே ஒழிய, சூழலைக் காப்போம், புலிகளை, யானைகளை, இன்ன பிற வனவிலங்குகளை நேசிப்போம். அதற்கு ஊறு விளைவிக்காமல் செல்வோம் என்று யாருமே எண்ணுவதில்லை.

பொதுவாகவே யானை, புலி, சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ரொம்பவுமே சென்சிடிவ் ஆனவை. மனிதர்களைப் பார்த்தாலே ஓட்டமாய் ஓடி மறைவிடங்களில் பதுங்கிக்கொள்ளும் தன்மையுடையவை. ஏதாவது ஒரு எதிர்வினை கிடைத்தால் ஒழிய மனிதர்களை அவை தாக்குவதில்லை. அதிலும் மனிதர்கள் வசிப்பிடங்கள் பக்கமே தலை வைக்காது. காடுகளுக்குள் நிகழ்த்தப்படும் சூழல் சேதமே குடியிருப்புகளுக்குள் இவற்றை திசை மாற்றிவிடுகின்றன. அதில் முக்கிய பங்கு வகிப்பவை வனங்களில் ஏற்படுத்தப்படும் செயற்கை வனத்தீ. வனத்தீ என்பது வேனிற்காலங்களில் காட்டின் சூடு தகிக்காமல், மரங்கள், கிளைகளோடு மோதுவதால் இயல்பாய் ஏற்படுவது. அல்லது இடி மின்னல் தாக்கி பற்றிக் கொண்டு காடே அழிவது. அப்படியல்லாமல் அது என்ன செயற்கை வனத்தீ?

அதிர்ச்சியடைய வைக்கும் அந்த சம்பவங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

முதுமலை சரணாலயத்தின் முக்கியப் பகுதிகளான தெப்பக்காடு, கார்குடி, அபயாரண்யம், தொட்டகட்டி, தொரப்பள்ளி போன்ற பகுதிகள் மட்டுமல்லாது, பாதுகாக்கப்பட்ட நீலகிரி வனப்பகுதிகளான கல்லட்டி, க்ளன்மார்கன், சீகூர் என வரும் இடங்களில் அடிக்கடி வனத் தீ கொளுந்து விட்டு எரிவது வழக்கமான ஒன்றாகவே இருந்திருக்கிறது.

முக்கியமாக இக்காடுகளில் வேனிற்காலங்களில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அங்கங்கே காட்டுத்தீ எழும்புவதும், பிறகு அது வனத்துறையினர் உருவாக்கும் தீத்தடுப்புக் கோடுகளால் (Fire Line) கட்டுப்படுத்தப்பட்டு அணைந்து விடுவதும் சகஜமான விஷயம். தீத்தடுப்புக் கோடுகள் என்பது காடுகளில் நீள வாக்கில் ஓரிரு மீட்டர் அகலத்தில் பூமியில் வெட்டப்படும் பள்ளக்கோடுகள். அல்லது அந்த அகலத்திற்கு நெருப்பு மூட்டி அப்பகுதி வெற்றிடமாக்கப்படும். அதன் விளைவு அந்தப் பகுதியில் காட்டுத் தீ எழுந்தால், காற்று வீசும் திசைக்கேற்ப அந்த பகுதி மட்டுமே எரிந்து அந்த தீத்தடுப்புக் கோட்டை தாண்டாது கட்டுப்பட்டுவிடும்.

இந்த தீத்தடுப்புக் கோடுகள் போடுவதற்கான பணி ஒவ்வொரு வருடமும் டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே ஆரம்பிக்கப்பட்டு விடும். அதற்காக உள்ளூர் பழங்குடியின மக்கள் தற்காலிகப் பணிக்கு எடுத்து பயன்படுத்தப்படுவார்கள். இதற்காக வருடா வருடம் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் மூலமாக வனத்துறைக்கு அரசு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்கிறது.

ஆனால் 2002-2003 ஆம் ஆண்டில் இந்த தீத்தடுப்புக் கோடுகள் வரைய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதனால் இந்தப் பகுதியில் எல்லாம் திரும்பின பக்கமெல்லாம் எழுந்தது. காடுகள் முழுக்க சாம்பலாகிக் கொண்டிருந்தது. அவையெல்லம் இயல்பாக ஏற்பட்ட வனத்தீயா என்றால் அதுதான் இல்லை என்று அப்போது பொங்கினார்கள் மக்கள்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x