Published : 16 Dec 2017 09:42 AM
Last Updated : 16 Dec 2017 09:42 AM

தேர்தல் ஆணையத்துக்கு சவால் விடும் போலி வாக்காளர்களை தடுப்பது எப்படி?- முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் யோசனை

ஆர்.கே.நகரில் மட்டும் 45,000 பேர் நீக்கம்

தேர்தல் ஆணையத்துக்கு சவால் விடும் விதமாக ஆர்.கே.நகரில் மட்டும் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய தேர்தல் நடத்தும் பெருமைக்குரிய ஆணையமாக இந்திய தேர்தல் ஆணையம் விளங்குகிறது. ஒவ்வொரு மக்களவை தேர்தலின்போது சுமார் 45 கோடி பேர் வாக்களிக்கின்றனர். வாக்குப்பதிவின் போது கள்ள ஓட்டை தடுக்கவும், போலி வாக்காளர்களை ஒழிக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த 1993-ம் ஆண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன. வாக்காளர் எண்ணுடன் தொலைபேசி எண்களும் இணைக்கப்பட்டன. இவ்வாறு போலி வாக்காளர்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஆர்.கே.நகரில் மட்டும் தற்போது 45,836 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தது தேர்தல் ஆணையத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவை கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 78 ஆயிரத்து 665 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இறந்தவர்கள் மட்டும் 1 லட்சத்து 68 ஆயிரத்து 785 பேர்.

 

 

போலி வாக்காளர்கள் ஒழிக்கப்படாதது குறித்து இந்திய தேர்தல் ஆணைய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

கிராமப்புறங்களில் நியமிக்கப்படும் வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக, அப்பகுதியில் வசிப்போர் குறித்து நன்கு அறிந்தவராக இருப்பார்கள். பெருநகரங்களில் நியமிக்கப்படும் வாக்குச்சாவடி அதிகாரிகள் வெளியூரைச் சேர்ந்தவர்களாகவும், பெண்களாகவும் இருப்பார்கள்.

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் குறித்து அவருக்கு தெரியாது. அவர்கள் தங்கள் அன்றாட அலுவல் பணியை முடித்துவிட்டு மாலையில் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பர். இருட்டியதும் விரைவாக அவர்கள் வீடு திரும்பவும் வேண்டும். ஒரு வீட்டில் யாரும் இல்லை என்றால், மீண்டும் அதே வீட்டுக்குச் சென்று சரிபார்ப்பது அரிது.

அதனால் இடம்பெயர்ந்த மற்றும் இல்லாத வாக்காளர்களின் பெயர்கள், பட்டியலில் நீக்கப்படாமலேயே இருக்கும். மக்களும் முன்வந்து இத்தகவலை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிப்பதில்லை. இதனால்தான், இல்லாத வாக்காளர்கள், பட்டியலில் தொடர்ந்து நீடிக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டும் போகிறது.

இதை நீக்க கணினி மூலமாக நடவடிக்கை எடுத்தாலும் பெயர், வயதை வைத்து தேடி, அதில் வரும் பல்லாயிரம் பேரில், புகைப்படத்தை ஒப்பிட்டுப் பார்த்து நீக்க வேண்டியுள்ளது. இது மிகவும் சிரமமானது. அதனால், இல்லாத வாக்காளர்களை, பட்டியலில் இருந்து நீக்க வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது மட்டுமே தீர்வாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

தொகுதிகளில் இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள் குறித்து ஆய்வு செய்வதில் சில குறைபாடுகள் உள்ளன. சில நேரங்களில் அரசியல் செல்வாக்கால்கூட வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதனால் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை தேர்தல் ஆணையம் இன்னும் மேம்படுத்த வேண்டும்.

முன்பு போலி வாக்காளர்களை ஒழிக்க, 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் உயிரோடு உள்ளனரா என்று கணக்கெடுப்பு நடத்தினோம். தற்போது அரசால் இறப்பு பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. அதைக் கொண்டும் வாக்காளர் பட்டியலை திருத்தலாம். அனைவருக்கும் ஆதார் எண் வழங்கப்பட்டதை உறுதி செய்தபின், ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x