Last Updated : 28 Nov, 2017 10:34 AM

 

Published : 28 Nov 2017 10:34 AM
Last Updated : 28 Nov 2017 10:34 AM

தன்னை உயர வைத்தவர்களின் பெயர்களை தனது மருத்துவமனைக்குச் சூட்டிய பல் மருத்துவர்

ன்னைப் படிக்க வைத்து ஆளாக்கிய மனிதர்களுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விசுவாசத்தைக் காட்டுவார்கள். பல் மருத்துவரான அ.சங்கர், தான் இந்த நிலைக்கு உயரக் காரணமாக இருந்த இருவரது பெயரில் மருத்துவமனை தொடங்கி விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார்.

கும்பகோணம் மடத்து தெரு சாலை. இங்கு தான் இருக்கிறது மருத்துவர் சங்கரின் ‘பணீந்திர ரெட்டி - ராஜ்குமார் லேசர் பல் மருத்துவமனை’. பணீந்திர ரெட்டி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆயிற்றே.. அவர் பெயரில் எப்படி இந்த மருத்துவமனை.. என்ற சந்தேகத்துடன் மருத்துவமனையின் உள்ளே எட்டிப் பார்த்தோம். அங்கு, நோயாளி ஒருவருக்குச் சிகிச்சையளித்துக் கொண்டிருந்த பல் மருத்துவர் சங்கர், நம்மை அழைத்துப் பேசினார்.

முட்டுக்கட்டை போட்ட அப்பா

“உங்களது ஊகம் சரிதான். பணீந்திர ரெட்டி ஐ.ஏ.எஸ். தான் நான் பல் மருத்துவம் படித்து முடிக்கக் காரணமானவர். அதேபோல், புரொபஸர் ராஜ்குமார் எனது படிப்புக்கு புத்தகங்களை வாங்கித் தந்து வழிகாட்டியவர். அதனால் தான் இவர்களின் பெயரில் மருத்துவமனையைத் தொடங்கினேன்” என்று நமது சந்தேகத்தைப் போக்கிய சங்கர், தொடர்ந்து பேசினார்.

“அரியலூர் மாவட்டம் அனைக்குடம்தான் எங்க ஊரு. எங்க குடும்பம் விவசாயக் குடும்பம். அப்பா இன்ன மும் விவசாயம் செய்கிறார். அம்மா இப்ப உயிரோடு இல்லை. தம்பி சஞ்சீவிகுமார் கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்.

வயல் வேலை பார்த்துக்கிட்டும், ஆடுமாடுகளை மேய்ச்சுக்கிட்டும் தான் என்னோட பள்ளிப் படிப்பை முடிச்சேன். எங்க வீட்டுல அப்ப மின்சார வசதிகூட இருக்காது. சிம்னி விளக்கு வெளிச்சத்துல தான் நானும் என் தம்பியும் படிப்போம். 2000-மாவது ஆண்டில் பனிரண்டாம் வகுப்பு முடிச்சேன். நான் எடுத்திருந்த மார்க்குக்கு எஸ்.ஆர்,எம். கல்லூரியில பல் மருத்துவம் படிக்க இடம் கிடைச்சுது. ஆனா, ‘டாக்டருக்கு படிக்க ரொம்பச் செலவாகும்’னு சொல்லி எங்க அப்பா அதுக்கு முட்டுக்கட்டை போட்டார்.

செம்பட்டு கிராம மக்கள்

அதைக்கேட்டு, என்னோட டாக்டர் கனவு பலிக்காம போயிருமோன்னு பயந்தேன். அந்த நேரத்துல, எங்க அம்மாதான் எனக்கு ஆறுதலா இருந்தாங்க. அவங்க குடுத்த தைரியத்துல, மருத்துவக் கல்லூரியில சேர நானே பணம் திரட்டினேன். திரட்டிய பணத்தை எடுத்துக்கிட்டு காலேஜுக்குப் போனப்ப, கூடுதலா ஐயாயிரம் கட்டணும்னு சொல்லீட்டாங்க. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போயிருமோன்னு பதறிட்டேன். ஒருவாரம் அவகாசம் கேட்டு வாங்கிட்டு ஊருக்குத் திரும்பினேன்.

இதுக்கிடையில, என்னோட பரிதாப நிலையைப் பற்றி பத்திரிகையில் செய்தி வந்துருச்சு. அதைப் பார்த்துட்டு, நான் படிச்ச ஸ்கூல்ல இருந்து கொஞ்சம் பணம் குடுத்தாங்க. திருச்சி அருகே இருக்கிற செம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், வீட்டுக்கு வீடு 100 ரூபாய் போட்டு 8 ஆயிரம் ரூபாய் குடுத் தாங்க. என் இறுதி மூச்சு வரைக்கும் அந்த ஊர் மக்களை நான் நெஞ்சில் வைத்துப் போற்றணும்.

பணீந்திர ரெட்டி சிபாரிசு

அப்ப, பெரம்பலூர் மாவட்ட கலெக்டரா இருந்த பணீந்திர ரெட்டியும் பத்திரிகை செய்தியைப் படிச்சுட்டு என்னை ஆபீஸுக்கு வரச்சொன்னார். எனது நிலையைக் கேட்டு பரிதாபப்பட்ட அவர், கையோடு ஒரு கடிதத்தைக் கொடுத்து அதைக் கொண்டு போய் மருத்துவக் கல்லூரியில் கொடுக்கச் சொன்னார். அவர் தந்த கடிதத்தைப் பார்த்த கல்லூரி நிர்வாகத்தினர், பெரம்பலூர் கலெக்டரின் சிபாரிசில் இவர் படிக்க வந்திருக்கிறார். இவரது படிப்புச் செலவுக்கும் கலெக்டரே உத்தரவாதம் கொடுத்திருக்கிறார் என்று சொல்லி என்னைப் பற்றிய விவரங்களை நோட்டீஸ் போர்டில் வைத்தார்கள்.

நான் தமிழ் வழியில் படித்தவன் என்பதால் கல்லூரியில் சகமாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்தார்கள். எனக்கும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட் டது போலத்தான் இருந்தது. ஆனால், கலெக்டர் சிபாரிசில் படிக்கிறேன் என்பதால் பேராசிரியர்கள் எனக்கு அக்கறை எடுத்து சொல்லிக் கொடுத்தனர். அதனால், சீக்கிரமே பிக் அப் பண்ணிக்கிட்டேன். ஒரு வழியா பல் மருத்துவப் படிப்பை முடிச்சுட்டு ஊருக்குத் திரும்பினேன். எதிர்பார்த்த மாதிரி வேலை கிடைக்கல. சொந்தமா க்ளினிக் வைக்கவும் எனக்குத் தைரியம் இல்லை. அதனால, பழையபடி விவசாய வேலைக்கே போனேன்.

அம்மாவின் ஆசை

ஆனா, எங்க அம்மாவுக்கு இது பிடிக்கல. இவ்வளவு பாடுபட்டுப் படிச்சுட்டு மறுபடியும் இந்த சேத்துக்குள்ள வந்து கெடக்குறதான்னு அவங்க ரொம்பக் கவலைப் பட்டாங்க. அவங்களோட வறுபுறுத்தலால மன்னார்குடியில ஒரு டாக்டர்கிட்ட அசிஸ்டென்டா வேலைக்குப் போனேன். மாசம் பத்தாயிரம் சம்பளம். கும்பகோணத்துல தங்கிக்கிட்டு தினமும் மன்னார்குடிக்குப் போக வர இருந்தேன். இதுக்கப்புறம், ஒருவழியா எம்.டி.எஸ் படிச்சு முடிச்சேன்.

‘எவ்ளோ காலம் இன்னொருத்தருக்கிட்ட வேலை பார்ப்பே.. நீயும் எப்படியாச்சும் ஒரு ஆஸ்பிட்டல் தொடங்கணும்’னு என்னோட புரொபஸர் ராஜ்குமார் சார் அடிக்கடி என்னைய தூண்டிக்கிட்டே இருந்தார். ஒருகட்டத்துல அவரே பேங்க் லோனுக்கு ஏற்பாடு செஞ்சு, பல் மருத்துவமனைக்கான எக்யூப்மென்ட்ஸ் எல்லாத்தையும் வாங்கிக் குடுத்துட்டார். அவரோட விருப்பத்துக்கு ஏற்ப நானும் இந்த ஆஸ்பத்திரிய தொடங்கிட்டேன்.

கிராமப்புற மக்களுக்கு சேவை

இன்றைக்கு நான் இந்த உயரத்துக்கு வந்துருக்கேன்னா பணீந்திர ரெட்டி சாரும் ராஜ்குமார் சாரும் தான் அதுக்குக் காரணம். அதனால, நான் தொடங்குன ஆஸ்பத்திரிக்கு அவங்க ரெண்டு பேரோட பெயரையே வெச்சுட்டேன். இந்த மருத்துவமனையை அவங்க ரெண்டு பேருமே வந்து திறந்து வெச்சாங்க” என்றார் சங்கர்.

சங்கருக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது. இவரது மனைவி விமலா, சென்னையில் மருத்துவப் படிப்பில் எம்.டி. படித்துக் கொண்டிருக்கிறார். வறுமையின் வழி கடந்து வந்தவர் என்பதால் தனது மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை சங்கர். கிராமப்புறத்து மக்க ளுக்கு சேவை செய்வதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டிருக்கும் இவர், மாதத்தில் இரண்டு நாட்கள் கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்குச் சென்று மருத்துவ முகாம்களை நடத்துகிறார். கூடவே, தான் வளர்ந்த கதையும் சொல்லி, படிப்பின் அவசியத்தையும் அந்த மாணவர்களுக்கு புரியவைத்து வருகிறார் சங்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x