Published : 29 Nov 2017 04:54 PM
Last Updated : 29 Nov 2017 04:54 PM
சென்னை, சேத்துப்பட்டில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனைக்கு அன்று காலை 10 மணிக்கு மாத்திரை வாங்க வந்திருந்தார் விசாலாட்சி (62). டிபன் சாப்டீங்களா என்ற கேள்வியோடு ஹெல்த் விசிட்டர் விஜயகுமாரி கொடுத்த மாத்திரையை கொஞ்சம் சிரமப்பட்டே உட்கொண்ட அந்தப் பாட்டியை அப்படியே பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்று பேச்சு கொடுத்தேன்.
என்ன பாட்டி இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு? என்றேன்.
"சிறிய தயத்துக்குப் பின்னர். இருக்கேன் மா.. எம் பையனுக்குதான் மொதல்ல டிபி வந்துச்சு. அவன் பெண்ஜாதி புள்ளைங்க கிட்ட வரல. நான் தான் மொத 15 நாள் அவன்கிட்ட இருந்து முழுசா பார்த்துக்கிட்டேன். அப்பவே சொன்னாங்க நீங்களும் உடனே பரிசோதனை பண்ணிக்கோங்கன்னு. நான் விட்டுட்டேன். இப்ப எனக்கும் வந்துருச்சி. மொதல்ல ரெண்டு மாசம் ஒழுங்கா மாத்திரை சாப்ட்டேன். அப்புறம் நிறுத்திட்டேன். அதுக்கப்புறம் ரொம்பவே கஷ்டப்பட்டேன். இதோ இந்த விஜயகுமாரிதான் வீட்டுக்கே ஆட்டோவச்சு வந்திச்சு. நல்லா திட்டி கூட்டியாந்துச்சு. இப்ப திரும்ப மாத்திரை சாப்பிடுறேன். ஆனா.. இனி 8 மாசம் சாப்பிடணும்மா" என்றார் சோர்வாக.
பாட்டி.. ஒழுங்கா சாப்பிடுங்க என்றேன். நான் மாத்திரையைக் குறிப்பிட்டுச் சொல்ல அவர் உணவு எனப் புரிந்துகொண்டார் போலும்.
எங்கம்மா.. இந்த மாத்திரைக்கு சாப்பிட பிடிக்கல. இங்க ஆஸ்பத்திரில என்னான்னா நல்லா முட்டை, கவிச்சி சாப்பாடெல்லாம் அடிக்கடி சாப்பிட சொல்றாங்க. நம்மலால அம்புட்டு துட்டெல்லாம் முடியாது. ஏதோ.. தர்மத்துக்கு இந்த ஆஸ்பத்திரில மாத்திரை தராங்க சாப்பிடுறேன். வகை.. வகையா சோறும் கறியுமா தருவாங்கன்னு சொல்லிக்கிட்டே.. மழ வரும்போல நான் போறேன்னு கிளம்பிப் போய்டாங்க விசாலாட்சி பாட்டி.
ஆம், காசநோயாளிகள், பால், முட்டை, பருப்பு, பயறு, ஆட்டுக்கறி, எலும்பு சூப் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவம் சாப்பிடாதவர்கள் பருப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
இதில், வேதனை என்னவென்றால், வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கே காசநோய் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது என்கிறது புள்ளிவிவரம். சேத்துப்பட்டு மருத்துவமனையில் நான் அன்றைய தினம் (நவம்பர் 27 காலை 10 மணி முதல் 11.20 மணி வரை) பார்த்தவர்களில் 10-ல் 8 பேர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.
ஒரு மருத்துவமனையிலேயே இப்படி என்றால் நாடு முழுவதும் இதுபோல் எத்தனை எத்தனை விசாலாட்சி பாட்டிகள் இருப்பார்கள்?!
காசநோய் ஒழிப்பில் வெவ்வேறு படிநிலைகள் உள்ளன. முதலாவது நோய்த்தொற்றை ஆரம்பநிலையில் கண்டறிதல், இரண்டாவது காசநோய் ஒழிப்பு மருந்துகள் எளிதாக கிடைக்க வழிவகை செய்தல், மூன்றாவது மருந்து வேலை செய்கிறதா என கண்காணித்தல் 4-வது காசநோயாளி முழுமையாக சிகிச்சை எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்துதல். ஆனால்.. இதையும்தாண்டி ஒரு முக்கியமான விஷயம் காசநோய் ஒழிப்பில் பெரிதும் கண்டுகொள்ளப்படாமால் போய்விடுகிறது. அதுதான், காசநோயாளிகளுக்கு ஆரோக்கியமன உணவு கிடைப்பதை உறுதி செய்தல்.
சானட்டோரியங்களின் முக்கியத்துவம்:
19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவில் காசநோய் வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. நோயாளிகளுக்கு கொடுக்கும் அளவுக்கு காசநோய் மருந்துகள் இல்லை. மருந்துத் தட்டுப்பாடு தலைவிரித்தாட நோயாளிகள் பலரும் சானட்டோரியங்களுக்கு (மருத்துவ இல்லங்கள்) அனுப்பப்பட்டனர். அங்கே அவர்களுக்கு தினசரி ஆரோக்கியமான உணவு வழங்கப்பட்டது. நல்ல காற்றோட்டமான இடத்தில் முழு நேர ஓய்வு எடுக்கவைக்கப்பட்டனர். விளைவு.. சிறிது காலத்தில் அவர்கள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சானட்டோரியங்களின் முக்கியத்துவம் என்னவென்பது ஐரோப்பா உணர்ந்த தருணம் அது.
நம் தமிழகத்தில் சென்னை தாம்பரம், மதுரை தோப்பூர் (ஆஸ்டின்பட்டி), தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, சிவகங்கை மாவட்டத்தில் சோமநாதபுரம் போன்ற இடங்களில் உள்ள சானட்டோரியங்களுக்கு தீவிர காசநோயாளிகளை மீட்டெடுப்பதில் பெரும் பங்கு இருக்கிறது.
காசநோயாளி உட்கொள்ள வேண்டிய சமச்சீர் உணவு..
காசநோயாளிக்கு அன்றாடம் தேவைப்படும் ஊட்டச்சத்தில் 45 முதல் 65% வரை மாவுச்சத்தாக இருத்தல் வேண்டும். 25 முதல் 35 சதவீதம் கொழுப்புச் சத்தாக இருத்தல் வேண்டும். 15 முதல் 30% புரதச்சத்தாக இருத்தல் வேண்டும். இதுதவிர வைட்டமின்கள் ஏ, பி-6, சி, டி, இ, ஃபோலிக் அமிலம், துத்தநாகம், இரும்புச்சத்து, செலேனியம் போன்ற நுண்சத்துகளும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அன்றாடம் மருந்து மாத்திரைகளோடு ஓரளவேனும் ஊட்டச்சத்தான உணவை உட்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருக்கிறது.
சமுதாயத்தில் ஏழை, எளியவர்களையே இந்நோய் அதிகமாக தாக்கும் சூழலில் சானட்டோரியங்கள் இன்னும் முழுவீச்சில் செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. தீவிர நோயாளிகளுக்காக மட்டுமல்லாது வறுமை கோட்டுக்கு கீழே உள்ள காசநோயாளிகளுக்காகவும் இத்தகைய சானட்டோரியங்கள் செயல்பட வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ், சுகாதார அமைச்சகமானது காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5000 நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்து சில காலம் பரிசீலித்தது.
இப்போதும்கூட சில மாநிலங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள காசநோயாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
தமிழகத்திலும் காசநோயாளிகளுக்கு அவர்களது சிகிச்சை முடியும் வரையில் ரூ.1000 மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
ஆனால், அவ்வாறு பணம் வழங்கும்போது இரண்டு விஷயங்களை கண்காணிக்க நேர்கிறது. ஒன்று பணம் முறையாக பயனாளிக்கு சென்று சேர்கிறதா? மற்றொன்று, அந்தப் பணத்தை தனக்கான ஆரோக்கிய உணவுக்காகவே அந்த நோயாளி பயன்படுத்துகிறாரா என்பது?
இது மீண்டும் காசநோய் ஒழிப்புப் பணியில் சில சிக்கல்களையே ஏற்படுத்தும். எனவேதான், தீவிர நோயாளிகளுக்காக மட்டுமல்லாது வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள முடியாத காசநோயாளிகளுக்காகவும் சானட்டோரியங்கள் செயல்பட வேண்டியது மிக மிக அவசியமாகிறது என்பதை பலதரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து மதுரை தோப்பூரில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜெய்கணேஷிடம் பேசினோம்.
காசநோய் ஒழிப்பில் ஆரோக்கிய உணவின் பங்கு குறித்து சொல்லுங்கள்..
மனித உடலில் நகம், முடியைத் தவிர மற்ற எல்லா பகுதிகளிலும் காசநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், நுரையீரலில் ஏற்படும் காசநோய் தொற்றுதான் பரவக்கூடியதாக உள்ளது. அவ்வாறு நுரையீரல் காசநோய் பாதிப்புக்குள்ளாகியவர்கள் முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் இரண்டு வாரங்களிலேயே அவர்கள் மற்றவர்களுக்கு நோயைப் பரப்பும் அபாயத்திலிருந்து விடுபட்டுவிடுகிறார்கள்.
ஆனால், சிலர் அவ்வாறு மருந்துகளை ஒழுங்காக உட்கொள்வதில்லை. அப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு மட்டும் தீங்கு இழைத்துக்கொள்ளவில்லை சமுதாயத்திற்கும் அதிக அளவில் நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கின்றனர்.
இங்கே தோப்பூரில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவமனை மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையின் விரிவாக்கமே. 207 படுக்கைகள் வசதி கொண்டது இந்த மருத்துவமனை. உள்ளூர்வாசிகள் மட்டுமல்ல வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள்கூட இங்கே சிகிச்சை பெறுகின்றனர்.
காசநோய் சிகிச்சையை முறையாக மேற்கொள்ளாதவர்களை நாங்கள் 'டீஃபால்டர்ஸ்' (Deaulters)என்று அழைக்கிறோம். அவர்களைத்தான் பொதுவாக இங்கு அனுமதிக்கிறோம். இங்கு மட்டுமல்ல எல்லா சானட்டோரியங்களிலும் அப்பட்டித்தான். காரணம் அவர்களால்தான் நோய் பரவ அதிக வாய்ப்பிருக்கிறது.
மற்றபடி, காசநோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இத்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் அவரது நோயின் தீவிரத்தைப் பொறுத்து 5 முதல் 8 மாதங்கள்வரை சிகிச்சை வழங்கப்படுகிறது. அந்த வகையில் காசநோயாளி சிகிச்சையை முடிக்கும்வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனை நெறிமுறைப்படுத்த ஆதார் எண் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்தத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், அந்தத் தொகையை அந்த நோயாளி தனது உடல்நல மேம்பாட்டுக்காக மட்டுமே செலவிடுகிறாரா என்பதை நம்மால் உறுதி செய்ய முடியாது.
காசநோய் ஒழிப்பில் ஆரோக்கியமான உணவுக்கும் நிச்சயம் பங்கு இருக்கிறது. சளி மூலம் புரதம் வெளியேறுவதால் புரதச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதை சமன் செய்யும் விதத்தில்தான் இங்கே உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. சுண்டல், பாசிப்பயறு, பேரீச்சம்பழம், பால், வாழைப்பழம், முட்டை, கீரைவகைகள் வழங்குகிறோம்.
தமிழகத்தில் தாம்பரம் சானட்டோரியத்துக்குப் பிறகு இந்த தோப்பூர் மருத்துவமனைதான் 2-வது சிறந்த சானட்டோரியமாக விளங்குகிறது. இதேபோல், புறநோயாளிகளும் ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துவதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்றார்.
இங்கேதான், காசநோய் ஒழிப்பில் ஆரோக்கியமான உணவின் பங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது அவசியமாகிறது. காசநோய் ஏற்படுவதை தடுப்பதிலும், காசநோயினால் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துவருகிறது. இந்தநிலையில், காசநோய் ஒழிப்பு நடவடிக்கையில் நோயாளிகளின் ஊட்டச்சத்து மீதும் கவனம் செலுத்துவதையும் ஒருங்கிணைக்க வேண்டியது அவசியமாகிறது.
சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் மட்டும் சானட்டோரியங்கள் முழுவீச்சில் இயங்கினால் போதாது. இது இன்னும் விரிவடைய வேண்டும்; வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள காசநோயாளிகளுக்கும் சானட்டோரியங்களில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று ஆரோக்கியமான உணவை அவர்கள் உட்கொள்ள வழிவகை செய்யப்பட வேண்டும் என்பதையே காசநோய் ஒழிப்பில் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வலியுறுத்துகின்றன.
2025-க்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் முனைப்புடன் செயல்படும்போது, காசநோய் ஒழிப்பில் ஆரோக்கிய உணவின் பங்களிப்பையும் அரசு கருத்தில் கொண்டு திட்டங்களை வகுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT