Published : 17 Nov 2017 06:00 PM
Last Updated : 17 Nov 2017 06:00 PM
இந்தியா முழுவதும் 37 புலிகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் ஆகியவை உள்ளன. இதில் ஆனைமலை புலிகள் காப்பகம் கோவை மாவட்டத்திலும், முதுமலை புலிகள் காப்பகம் நீலகிரியிலும் வருகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகம் இதற்கு முன்பு இந்திராகாந்தி வன உயிரின சரணாலயம் என்றும், முதுமலை வன உயிரின சரணாலயம் என்றே பெயர் வழங்கப்பட்டது. சரணாலயம் என்றால் சங்கமித்து வாழ பாதுகாப்பான இடம் என்றும், வனச் சரணாலயம் என்றால் வனவிலங்குகள், பறவைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கான இடம் என்றும் பொருள் கொள்ளலாம்.
காப்பகம் என்றால் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள இயலாதவர்களை பொறுப்பேற்று கவனிக்கும் இல்லம் அல்லது பகுதி என கொள்ளலாம். அதுவே புகலிடம் என்றால் அடைக்கலம், தஞ்சமடையும் இடம் என்றும் சொல்லலாம். பறவைகள் புகலிடம் என்றால் அவை பறவைகள் பாதுகாப்பாக தஞ்சமடையும், அடைக்கலமாகும் இடம் என்றும், யானைகளின் புகலிடம் என்றால் யானைகள் பாதுகாப்பகாக வாழும் அல்லது அடைக்கலமாகும், தஞ்சமடைய ஏதுவான இடம் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
அதுவே 'வலசை' என்றால் இடம் பெயர்தல், தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப பறவைகளோ, விலங்குகளோ, ஓரிடம் விட்டு மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்தல் என அறியலாம். இதில் வன விலங்குகள் சரணாலயம், புலிகள் காப்பகமாக மாறியது ஏன் என்பதை விரிவாக பின்னர் தேவையான இடங்களில் காண உள்ளோம்.
ஆனால் யானைகளின் வலசைக்கும், யானைகளின் புகலிடத்திற்குமான வித்தியாசம் என்ன என்பதை கொஞ்சம் யோசித்துவிட்டு அடுத்த இடத்திற்கு நகர்வது, இதுவரை நாம் வாசித்த அத்தியாயங்களுக்கும், இனி வாசிக்கப்போகும் அத்தியாயங்களுக்குமான புரிதலை எளிதாக்கும்.
யானைகள் ஓரே இடத்தில் வசிக்காது, அது சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, தன் வழிப்பாதையில் பயணித்துக் கொண்டே இருக்கும். அதே சமயம் அவை கருவுற்று, குட்டியை ஈன்றெடுக்கும் சமயம் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே மையம் கொள்ளும். உதாரணமாக வயநாடு, சைலண்ட்வேலி, அட்டப்பாடி என சுற்றும் காட்டு யானைகள், கோவை மாவட்டம் சிறுவாணி காடுகளில் புகுந்து கோவை குற்றாலம், பூண்டி, போலாம்பட்டி, காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, பவானி சாகர், தெங்குமராஹாடா, மாயாறு, முதுமலை என பயணிக்கும்.
இதிலேயே ஒரு பிரிவு யானைகள் பவானி சாகரில் வேறு திருப்பத்திற்கு மாறி சத்தியமங்கலம், கடம்பூர் என சென்று திம்பம், சாமராஜ்நகர், மைசூர், பந்திப்பூர், முதுமலை என மையம் கொள்ளும். பிறகு திரும்ப அதே வழித்தடத்தில் வரும். வால்பாறை ஆனைமலையை எடுத்துக் கொண்டால் கேரளக் காடுகளில் புறப்படும் யானைகள் பரம்பிக்குளம், வால்பாறை, டாப் ஸ்லிப், ஆனைமலை, திருமூர்த்தி மலை, சின்னாறு, கொடைக்கானல் என நுழைந்து கேரளப் பகுதியான மூணாறு பகுதிகளை அடைந்து களக்காடு முண்டந்துறை வரை செல்லும்.
இப்படி யானைகள் பெருங் கூட்டமாக, அதில் அடங்கின பல்வேறு குழுக்களாக, அதிலும் உட்பிரிவுக் குடும்பங்களாகவே நகர்வதைக் காணலாம். சில இடங்களில் நூற்றுக்கணக்கான யானைகள் கூட்டம் தென்படுவதையும், அதுவே குறிப்பிட்ட வேறு இடங்களில் 5 முதல் 10 மற்றும் 20 யானைகள் வரை காணப்படுவதும் அதன் வெவ்வேறு கூட்ட, குழு, குடும்ப வடிவங்களையே நமக்கு காட்டுகிறது.
குறிப்பிட்ட இடங்களில் ஒரு யானைக் குடும்பத்திற்கு ஏதுவான உணவும், தண்ணீரும் தென்பட்டால் அவை அங்கேயே 10 -20 நாட்கள் தங்கி விடுவதும், அந்த கூட்டத்தை சேர்ந்த மற்ற குழுக்கள், குடும்பங்கள் மற்றொரு பகுதியை தனக்கான உணவு, தண்ணீருக்கான இடமாக தேர்ந்தெடுத்துக் கொள்வதும், யானைகளின் பண்பு, மற்றும் வழிவழியாக வந்த குடும்ப மரபுகளையுமே ஒத்திருக்கிறது.
இப்படியாக தன் வலசையில் நகரும் காட்டு யானைகள் முழு சினைப்பருவத்தில் ஓரிடத்தில் தங்குவதும், அதன் குடும்பமே அதனுடன் இருப்பதும், குட்டி ஈன்று இரண்டு மாதங்கள் வரையிலும் அந்தப் பகுதியையே அவை தன் இருப்பிடமாகவே கொள்வதும் வழக்கமாக உள்ளது. அந்த இருப்பிடத்தை ஆறேழு மாதங்களுக்கு தன் உணவுத் தேவையை, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் இடமாகவே அவை தேர்ந்தெடுக்கின்றன.
''அதற்கு தோதாக முதுமலை, முத்தங்கா, பந்திப்பூர், ஆனை மலை வனச் சரணலாயங்கள் அமைந்திருக்கின்றன. முதுமலையைப் பொறுத்தவரை கோடையில் வறண்டு கிடக்கும் சோலைகள் ஜூன், ஜூலை மாதங்களில் பசுமை பூத்துக்குலுங்க தொடங்கி விடும். அது ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரை நீடிக்கும் என்பதால் இங்கே காட்டுயானைகளை மூலைக்கு மூலை காணமுடியும். அதற்குப் பிறகே மழை வாசம், பசுமை வாசம் எங்கே வீசுகிறதோ, அதை நோக்கிப் பயணிக்கிறது.
அந்த வகையில் முதுமலையிலிருந்து நகரும் யானைகள் குழுக்களின் ஒரு பிரிவு பந்திப்பூர் காடுகள் வழியே கர்நாடகா, ஆந்திரா என பயணித்து ஒரிசா வரை கூட சென்று திரும்புகிறது. இன்னொரு பிரிவு மாயாறு, மசினக்குடி, சீகூர், தெங்குமராஹடா, சத்தியமங்கலம் என சென்று வருகிறது. இன்னொரு பிரிவு கேரளாவின் முத்தங்கா காடுகளில் ஊடுருவி, வயநாடு, கர்நாடகாவிற்குள்ளும், நீலம்பூர், சைலண்ட் வேலி, அட்டப்பாடி, பில்லூர், பவானி சாகர் என்றும் செல்கிறது. இதில் சில யானைகள் நிறைமாத கர்ப்பணியாக இருக்கும் பட்சத்தில் பவானி சாகர், பில்லூர் அணை என நீர் உள்ள பிரதேசங்களை தன் கர்ப்பகால இடமாக தேர்ந்தெடுத்து தங்கி குட்டி போடவும் செய்கிறது.
ஆக, எந்த இடத்தில் யானைகள் சில நாட்கள் தங்காமல், மாதக்கணக்கில் தங்கி தன் வாரிசுகளையும் பெற்றெடுக்கிறதோ, அவையெல்லாம் யானைகள் புகலிடங்கள் எனப்பட்டன. அந்தப் புகலிடங்களில் முக்கியமான ஒன்றாக விளங்குவதுதான் முதுமலை. இந்த முதுமலை எந்த அளவுக்கு வனவிலங்குகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அந்த அளவுக்கு இது அமைந்திருக்கும் சுற்றுப்பகுதிகளும் அதி முக்கியமான உயிர்ச்சூழல் மண்டலமாக விளங்குகிறது.
அதை முன்னிட்டே இங்கே வளர்ப்பு யானைகள், கோயில் யானைகள் முகாமை நடத்தலாகாது, அது சூழல் பாதிப்பையும் இங்கே சுற்றித்திரியும் பல்வேறு வனவிலங்குகளுக்கும் பாதகங்களை ஏற்படுத்தும் என ஏற்கெனவே விவரித்திருந்தோம். அதையொட்டியே காந்தி குட்டி யானையின் வருகை, அதன் இறப்பு, மக்னா யானையின் அவலம், சீகூர் - தெங்குமராஹாடா சாலைக்கு சூழலியாளர்களின் எதிர்ப்பு போன்றவற்றை அதில் சுட்டிக் காட்டியிருந்தோம்.
இப்போது அதையும் தாண்டி இங்கே நடந்திருக்கும் சூழல் சேதங்கள், வனவிலங்குகளுக்கான எதிர்நிலை மனோபாவங்கள், இந்த நிலத்தையே பூர்வீகமாக கொண்ட பழங்குடிகளுக்கான தொடர் ஹிம்சை, தொடர்ந்து இந்த நிலங்களை தன் வசம் வைத்திருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளின் நயமான மோசடித்தனங்கள் என அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு முதலில் செக்சன் -17 எனப்படும் நிலம்பூர் ஜென்மி நிலங்களை முன்வைத்தே விவரித்தாக வேண்டியிருக்கிறது.
அதை முதுமலை புலிகள் காப்பகமாக ஆக்கப்படுவதற்கு முன்பு, அதன் அருகே அமைந்துள்ள மசினக்குடி நகரில் மக்களிடம் புறப்பட்ட கொந்தளிப்பிலிருந்தே ஆரம்பிக்கிறேன்.
அது அக்டோபர் மாதம், 1998-ம் வருடம். மசினக்குடி மக்கள் மட்டுமல்ல, அதன் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் பல்வேறு பழங்குடியின மக்களும் அப்போதைய அரசு போட்ட புது உத்தரவால் கொதித்துப் போயிருந்தனர். தொடர் போராட்டம், தர்ணா என்று இறங்கிய மக்களால் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தது தமிழக அரசு. இந்த மக்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது வனத்துறை. விவகாரம் இதுதான்.
முதுமலை வனவிலங்குகள் சரணாலயத்துடன் (அப்போது புலிகள் காப்பகமாக மாறவில்லை) அதனருகே அமைந்திருக்கும் சீகூர், சிங்காரா ஆகிய வனச்சரகங்களை (240 சதுர கிலோமீட்டர் பரப்பளவு) இணைத்து சரணாலயத்தை விஸ்தரிக்கும் அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்தது தமிழக அரசு. சீகூர், சிங்காரா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வருபவைதான் என்றாலும், இங்கே வசிக்கும் கிராம மக்கள், சுற்றுப்புற பழங்குடி மக்களுக்கு ஜீவாதாரமே இந்த வனப்பகுதிதான்.
அவர்களின் பல்லாயிரக்கணக்கான ஆடு, மாடுகள், எருமைகளின் மேய்ச்சல் நிலமாக இவையே இருந்தன. பழங்குடி மக்களின் பூர்வீகத் தொழில்களான தேன் எடுத்தல், நெல்லிக்காய், கடுக்காய், பூச்சக்காய் சேகரித்தல் போன்றவற்றுக்கு உகந்த பிரதேசமாகவும் இருப்பதும் இந்தப் பகுதிகள்தான். இப்போது இந்த 240 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை முதுமலை சரணாலயத்துடன் இணைத்துவிட்டால், அது வனத்துறையின் முழுக் கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியாகவே மாறிவிடும். கிராமவாசிகளின் தொழில் நின்றுவிடும். உணவுக்கு வழியற்றுப் போய்விடும் என்பதுதான் மக்களின் கோபம். அப்போது இங்கே செய்தி சேகரிக்கும் முகமாக களத்தில் இருந்தேன். பாதிக்கப்படுபவர்கள் பலரும் தன் கோப தாபங்களை வெளிப்படுத்தினர்.
''இங்கே ஆடு மாடுகளின் பால் மட்டுமல்ல; அதன் சாணம்தான் மக்களின் வருமானத்தின் பெரும்பகுதி. இங்கு பொறுக்கப்படும் சாணம் நல்ல உரமாக பயன்பட்டு கேரளாவிற்கு அனுப்பப்படுகிறது. இந்த சரணாலய விஸ்தரிப்பினால் உடனடியாக சாணம் பொறுக்குவது தடை செய்யப்படும். கால்நடைகளையே பெரிதும் வருமானத்துக்கு நம்பியிருக்கும் இப்பகுதி கிராம மக்களுக்கு, இதை நீங்கள் மேய்ச்சல் நிலமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு ஏதும் ஒதுக்கித் தராததே பிரச்சினையின் ஆரம்பம்!'' என விளக்கினார் அப்போதைய கூடலூர் பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் வர்கீஸ்.
மீண்டும் பேசலாம்.
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT