Published : 28 Nov 2017 03:13 PM
Last Updated : 28 Nov 2017 03:13 PM

யானைகளின் வருகை 88: வயல்நாடு பிரிவினை அரசியல்!

 

வயநாடு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இங்கு வளம் தரும் நிலங்கள் இருந்தன. இன்று நீலகிரி மாவட்டம் 2543 சதுர கிலோ மீட்டர் பரப்பு உள்ளது. இது குன்னூர், ஊட்டி, கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் என ஆறு வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் நான்கு வட்டங்கள் சற்றேறத்தாழ ஒரே மாதிரியான இயற்கை அமைப்பை, சூழல் தன்மையை கொண்டிருக்கிறது. ஆனால் பந்தலூர், கூடலூர் வயநாட்டின் தன்மையோடு ஒத்துப் போகிறது. இந்த கூடலூர், பந்தலூர் நகருக்கு சுவாரஸ்யமான வரலாற்றுப் பின்னணி உண்டு.

கேரளம், கன்னடம், தமிழகம் மூன்று மாநிலங்களுக்கு நடுவே அமைந்துள்ள இந்தப் பகுதியை மைசூர் பேரரசும், கேரள குறுநில மன்னர்களும் மாறி, மாறி ஆண்டிருக்கிறார்கள். மைசூரை வென்ற திப்புசுல்தான் ஆதிக்கம் 1799-ல் முடிவடைந்தது. அதன்பிறகு ஆங்கிலேயேருக்குச் சொந்தமானது. என்றாலும் இந்த வயநாடு மக்கள் (கூடலூர், பந்தலூர் உள்பட) ஆங்கில ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் இறுதியாக உரிமை கோரியவர் பந்தலூர் நெல்லியாளம் ராணியும், நம்பாலக்கோட்டை அரசரும் ஆவார்கள். இவர்களை 1805-ல் ஆங்கிலேயர் சிறைபிடித்து சிரச்சேதம் செய்து தம் ஆட்சி உரிமையை நிலைநாட்டினார்கள்.

அப்படி என்ன இந்த இடத்திற்கு முக்கியத்துவம் என்றால் இங்கு கொழித்த பொருளாதாரம். நீர்வளமும், நில வளமும் மிகுந்த காடடர்ந்த பூமியாக இருந்த வயநாட்டில் தங்கம் கிடைக்கிறது என்ற நம்பிக்கை தொன்றுதொட்டு நிலவி வந்திருக்கிறது. ரோம சாம்ராஜ்யம் காலந்தொட்டே இங்கே தங்கச்சுரங்கங்கள் இருந்துள்ளதாக வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அக்காலத்திலிருந்தே ரோம அரசோடு இப்பகுதிக்கு வாணிக உறவு இருந்துள்ளது என்பதை இங்கு கண்டெடுக்கப்பட்ட ரோம நாணயங்கள் உறுதிப்படுத்துகின்றன.

நீண்ட காலத்திற்குப் பிறகே கோயமுத்தூரிலிருந்து இங்கு குடியேறிய ஒரு சமூகப்பிரிவினர் விவசாயத்தில் ஈடுபட்டனர்.

1845க்குப் பிறகு ஆங்கிலேயேர்கள் காட்டு நிலங்களை விவசாயத்திற்காக விற்றனர். குறிப்பாக பழைய ராணுவ வீரர்களுக்கே இந்த நிலங்கள் அளிக்கப்பட்டன. அவுச்சர்லோனி என்ற ராணுவ அதிகாரிக்கு ஏராளமான கன்னிக்காடுகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் அங்கு தேயிலை, காப்பி, சின்கோனா ஆகிய பணப்பயிர்கள் விளையும் பெருந்தோட்டங்கள் பெருகின. இப்பகுதிதான் தற்போது ஓவேலி என்று அழைக்கப்படுகிறது. ஓவேலி என்றால் அவுச்சர்லோனிக்கு வழங்கப்பட்ட பள்ளத்தாக்கு என்று அர்த்தமாம். மிகப்பெரிய பெருந்தோட்டங்களில் பயிர் செய்ய பகுதி மக்கள் போதாமையால் கேரளத்திலிருந்தும், மைசூரிலிருந்தும் தொழிலாளர்கள் இங்கு குடியேற்றப்பட்டனர்.

1979, 1882 ஆகிய காலகட்டங்களில் இங்கே திடீரென்று தங்கம் திரட்டும் தொழில் மீண்டும் தீயாய் பற்றிக் கொண்டது. தேவாலாவில் பெருமளவு தங்கம் இருப்பதை ஆய்வில் அறிந்து இத்தாலியிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் தங்கம் தோண்டும் கம்பெனிகள் இங்கே வந்து இறங்கின. முதலில் வந்த கம்பெனிகள் ஏராளமாக லாபம் சம்பாதிக்க, அதைப் பார்த்து மேலும் பல கம்பெனிகள் இங்கே வந்து இத்தொழிலில் ஈடுபட ஆரம்பித்தன. இக்காலகட்டத்தில் பல ஐரோப்பியர்கள் இங்கு குடியேறினர். பந்தலூர்தான் அவர்களது தலைமை நகரமாக விளங்கியது. ஐரோப்பிய செல்வந்தர்களும், தங்கச்சுரங்க தொழிலாளர்களும், வணிகர்களும் நிறைந்து நடமாடும் ஒரு பெரும் வணிக நகரமாகவே பந்தலூர் அந்த காலகட்டத்தில் மாறியுள்ளது.

ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப மக்கள் தொகை இங்கு பெருகவில்லை. அதற்குக் காரணம் மலேரியா காய்ச்சல். இக்காட்டுப்பகுதியில் இந்த காய்ச்சல் பல ஆயிரக்கணக்கானோரை பலி கொண்டது. உதாரணமாக தற்போது பெரும்பான்மையாய் நீலகிரியில் வசிக்கும் ஒரு இன மக்களை அப்போது ஆங்கிலேயர்கள் இங்கே வந்து குடியேறுமாறு வற்புறுத்தினர். சலுகைகள் அறிவித்தனர். அவர்கள் கொலையே செய்தாலும் அங்கே குடியேற மாட்டோம் என்று கர்நாடகா பகுதியிலிருந்து வர மறுத்ததாக ஒரு நிர்வாகக்குறிப்பு கூறுகிறது.

1950 ஆண்டில்தான் மலேரியா நோய் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பிறகுதான் கீழ்நாட்டு மக்களின் வருகை அதிகரித்தது. அதில் கேரள மக்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். நிரந்தரமான மக்கள் தொகை பெருகியது. அதற்கேற்ப அரசியல் மாற்றங்களும் ஏற்பட்டது.அப்போது இது கூடலூர் பந்தலூரின் நிலை. நீலகிரிக்கு தமிழகத்திலிருந்து வடகிழக்கு வழியாக ஒரு வாகனப்பாதை ஏற்படும் வகையில் கூடலூர்தான் நீலகிரிக்கு நுழைவாயிலாக இருந்தது. அதனால்தான் மைசூர், கேரள ஆதிக்கம் நீலகிரியில் அதிகமாகியது.

ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் நீலகிரி கோவை மாவட்டத்தோடு (ஜில்லா) இணைக்கப்பட்டது. அதற்கும் பல காரணங்கள் உண்டு. மூல காரணம் ஜான் சல்லீவன் என்ற ஆங்கிலேய அதிகாரி. அவர் 1811 முதல் 1830 வரை நீலகிரி உள்ளிட்ட கோவை ஜில்லா கலெக்டராக இருந்தார். 1819ல் முதன் முதலாக நீலகிரிக்கு (கோத்தகிரி) வந்தார். இந்த மலையையும், இதன் கம்பீரத்தையும், அதன் இயற்கை அழகையும், அதன் வளத்தையும், அதன் இதமான காற்றையும் கண்டு தன்னையே இழந்தார். தனக்கென ஒரு சொந்தமான கல்வீட்டை கோத்தகிரியில் கட்டினார். அவர் 1822-ல் தான் ஊட்டியில் கட்டிடங்கள் கட்ட ஆரம்பித்தார். அக்காலகட்டத்தில் படுகர் இனமக்களும் அங்கே குடியேறியிருந்தார்கள். சல்லவீனின் விவசாய முயற்சி, வீடுகட்டும் பணிகளுக்கெல்லாம் அவர்கள் உறுதுணையாக இருந்துள்ளார்கள். இருப்பினும் தொதவர்களிடம்தான் சல்லீவன் நிலம் விலைக்கு வாங்கியிருக்கிறார்.

1820-ல் ஆங்கிலேயர்களுக்கு ஒரு நிர்பந்தம் இருந்தது. ஆங்கிலேயே ராணுவ அதிகாரிகள் பலர் அடிக்கடி சுகவீனம் அடைந்தார்கள். தாழ்நிலப்பகுதிகளின் வெப்பம் தாங்காமல் துன்புற்றார்கள். பலர் இறந்தர்கள். ஆகவே இதமான சுவாத்தியும் உள்ள இடங்களில் குடியேற அவர்கள் ஆசைப்பட்டார்கள். வட இந்தியாவில் சிம்லா, டார்ஜிலிங் நகரங்களைப் போலவே தென்னகத்தில் இடம் உண்டா என தேடினார்கள். அதில் ஊட்டி உருவானது. முக்கியமாக ராணுவத்திற்கு இந்த சூழ்நிலை அவசியமானதாக இருந்தது. அப்படித்தான் அருவங்காட்டில் ஆங்கிலேயேர் ஆயுத தொழிற்சாலையையும், குன்னூரில் ராணுவப்படைத் தளத்தையும் நிறுவினர்.

இந்த காலகட்டத்தில் இங்கு வாழ்ந்த பூர்வீகக்குடிகளுக்கும், வந்தேறிய கீழ்நாட்டுக்குடிகளுக்கும் நல்லிணக்கம் இல்லாத நிலை இருந்தது. ஒரு இனம் மாந்திரீகத்தில் சிறந்து விளங்கினார்கள். அவர்களை கண்டு மற்றவர்கள் பயந்தார்கள். இப்படி பயந்தவர்கள் பதிலுக்கு அந்த மாந்திரிகர்களை அச்சுறுத்த அவர்கள் வாழ்ந்த காடுகளுக்கு தீ வைத்தனர். இப்படி தீ வைத்ததில் வனங்களும், வனவிலங்குகளும் எரிந்தது மட்டுமல்ல, ஒரு முறை 58 வீடுகளே எரிந்து அதில் இருந்தவர்கள் உயிரோடு எரிந்து கரிக்கட்டையானார்கள்.

அதைப் பார்த்து ஆங்கிலேயே அரசு சகித்துக் கொள்ளவில்லை. அதற்காக நீலகிரி காடுகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை உதகை ராணுவ அதிகாரிக்கு வழங்கியது.

இப்படியான ரசாவாத மாற்றம் 1860க்குப் பிறகு காடடர்ந்து, பழங்குடிகள் மட்டுமே வாழ்ந்த நீலகிரியின் சூழலையே மாற்றியமைத்தது. காப்பி, தேயிலை பயிர் செய்தல் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விஸ்வரூபம் எடுத்தது. இப்பயிர் செய்கையை பரப்புவதற்காக ராணுவ வீரர்களுக்கும், ஆங்கிலேயே கம்பெனிகளுக்கும் ஏராளமாக ஆதிவாசிகளுக்குரிய வனநிலங்களை அரசு ஏறக்குறைய மானியமாகவே வழங்கியது. பயிர் செய்யப்படாத நிலங்களை 'பால் நிலங்கள்' என்று பிரகடனப்படுத்தி குறைந்த விலைக்கோ, இலவசமாகவோ, தொள்ளாயிரம் ஆண்டு குத்தகைக்கோ கொடுத்து வந்தார்கள்.

தேயிலை பயிர் செய்கையின் வளர்ச்சியோடு சாலை அபிவிருத்தியும், ரயில் பாதை வளர்ச்சியும் கூட ஏற்பட்டது. தாழ்நிலங்களில் இருந்த ஏராளமான மக்கள் பால் நிலங்களுக்கு குடியேறினார்கள். சுதந்திரம் கிடைத்து மொழி வாரி மாநிலங்கள் பிரியும்போது நீலகிரியை கேரளத்தோடு இணைப்பதா, தமிழகத்தோடு சேர்ப்பதா என்ற சர்ச்சை கிளம்பியது. அதற்கு முழு தடையாக விளங்கியது நீலகிரியின் தென் மேற்குப்பகுதியில் உள்ள கூடலூர், பந்தலூர். நீலகிரியின் தொங்கு சதைபோல் கேரளத்தின் வயநாட்டு சூழலை தாங்கி நிற்கும் கூடலூர், பந்தலூர் பெருந்தனக்காரர்கள் தங்கள் நிலத்தை கேரளத்துடன் சேர்க்கக்கூடாது என்பதையே தன் விருப்பமாகக் கொண்டார்கள். ஆனால் இயற்கை அமைப்பும், சராசரி மக்களும் கேரளத்துடன் இணைப்பையே வரவேற்றார்கள். அதில்தான் ஜென்மி நிலங்கள் எனப்படும் செக்சன் 17 பிரிவு நிலங்கள் அகப்பட்டன. இதற்கும் பெரும் பின்னணி உண்டு.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x