Published : 21 Nov 2017 04:24 PM
Last Updated : 21 Nov 2017 04:24 PM
கண்ணகி எரித்த மதுரையைப் போல, ராமன் படையெடுத்து அழித்த இலங்கையை போலத்தான் அப்போது காட்சியளித்துக் கொண்டிருந்தது முத்தங்கா. மதுரை, இலங்கை விஷயத்தில் தர்மம் வென்றது; அநீதி தோற்றது. ஆனால் முத்தங்கா விவகாரத்தில் அநீதி வென்று தர்மம் நாசக்காடாகியிருந்தது.
அப்படித்தான் இந்த மக்களைப் பார்க்க வந்த பழங்குடி மக்கள் நலம் பேணுபவர்கள், இயற்கை ஆர்வலர்கள், சமூகத்தில் கடையிலும், கடைகோடி மக்களின்பால் அக்கறை கொண்டவர்கள் கரைந்து உருகினார்கள். அந்த அளவுக்கு ஆதிவாசிகளில் பாதிப்பேர் சிறைக்குள் இருந்தார்கள். மீதிப்பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களும் தன்னை சந்தித்தவர்களிடம் தன் வலி மறந்து, 'என் மனைவியை காணோம். என் பெண்ணை காணோம். எங்குழந்தையை காணோம். கொஞ்சம் தேடித்தாங்களேன்!' என்று கெஞ்சி அழுதது அளவு கடந்த வேதனையையே எழ வைத்தது. முத்தங்கா ஆதிவாசிகள் மீது அம்மாநில போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய விதம் பல்வேறு அரசியல் தலைவர்களிடமும் கடும் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.
இந்திய அளவில் இவர்களைப் பார்க்க பார்வையாளர்கள் வந்து கொண்டே இருந்தார்கள். அப்படி வந்த மேதா பட்கர், அருந்ததிராய், மேதா பட்கர், குல்தீப் நய்யார் போன்றவர்கள் கேரள முதல்வர் ராஜினமாக செய்ய வேணடும். துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக மத்திய அரசு நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் உச்சமாகத்தான் இந்த சம்பவத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே டி.ஆர்.பாலுதான் என்ற பேச்சு உலா வந்தது.
கோத்ரா மகா சபா என்கிற கேரள ஆதிவாசிகள் அமைப்பு தலைவியான சி.கே.ஜானு, தலித் சேவா சமிதி ஒருங்கிணைப்பாளர் கீதானந்தனும் நீண்ட காலமாக கேரள அரசுடன் ஆதிவாசிகள் நிலமீட்புப் போராட்டத்தில் மல்லுக்கட்டி வந்தனர். அதன்படிதான் முதுற்கட்டமாக 53 ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஒப்படைப்பதாக கேரள அரசு ஒப்பந்தம் போட்டது. அதற்கான காலக்கெடு டிசம்பர் 31க்குள். குறிப்பிட்டபடி நிலங்கள் வழங்காவிட்டால் ஜனவரி மாதத்தில் முத்தங்கா சரணாலயப் பகுதியானாலும் ஆதிவாசிகள் குடியேறுவார்கள் என அறிவித்திருந்தது கோத்ரா மகா சபா.
கேரள அரசு சொன்னபடி செய்யாததால் ஜனவரி 3 மற்றும் 4 தேதிகளில் முத்தங்காவிற்குள் ஆதிவாசி மக்கள் குடியேறியும் விட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் குடியேறி 45 நாட்கள் முடிவுற்ற நிலையில்தான் பிரச்சினை உருவானது. அதாவது 19.02.2003 அன்றுதான் வனத்துறையினர் முத்தங்காவிற்குள் நுழைந்திருக்கின்றனர். அப்படி நுழைந்தவர்கள் சும்மாயிருக்கவில்லை.
இங்கு குடியேறியிருந்தவர்களை வெளியேற்றும் விதமாக வனத்துறையினர் உலர்ந்த யானைச் சாணத்தை உபயோகித்து காட்டிற்கு தீ வைத்துள்ளனர். காடு எரிந்தால் ஆதிவாசிகள் வாரிச்சுருட்டிக் கொண்டு ஓடி விடுவார்கள் என்பதுதான் அவர்கள் எண்ணமாக இருந்தது. ஆனால் அதை எடுத்த எடுப்பிலேயே கண்டுபிடித்துவிட்ட ஆதிவாசிகள் தீயை அணைத்ததோடு, வனத்துறையினரைம் சிறைப் பிடித்து விட்டனர்.
அதையடுத்து பேச்சுவார்த்தை நடைபெற்று கடைசியில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். ஆதிவாசிகளை விரட்டியடிக்கும் உத்தரவு, முதன்முதலில் மத்திய அமைச்சரிடமிருந்தே புறப்பட்டதாம். இதனால் கேரளத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் முதல்வர் ஆண்டனியை பிடிபிடியென்று பிடிப்பது போலவே மத்திய அமைச்சர் பாலுவையும் குற்றம்சாட்ட ஆரம்பித்தன.
'முத்தங்கா புகழ் பெற்ற சரணாலயம்தான். அதில் ஏராளமான வனவிலங்குகள், உயர்வகை மரங்களும் உள்ளன. அதில் குடியேறியது முழுக்க, முழுக்க ஆதிவாசிகள். அவர்கள் எல்லேருமை முத்தங்காவை சுற்றியுள்ள கிராமங்களில் குடிசை போட்டு வாழ்ந்து வருபவர்கள். நிலமிழந்து வறுமையால் தவிப்பவர்கள். இவர்களுக்கானது ஜீவாதாரப் போர். அதை பேச்சுவார்த்தை மூலமே பேசித் தீர்த்துக் கொண்டிருக்கலாம்.
ஆனால் மத்திய அமைச்சகம்தான் இப்படி ஒரு உத்தரவைப் போட்டு காரியத்தை கெடுத்து விட்டது என்றார் அப்போது முத்தங்கா பகுதியை கள ஆய்வுக்குட்படுத்திய தலித் விடுதலைக்கட்சியின் தலைவர் செங்கோட்டையன். ''வனத்துறை உட்புகுந்து மீண்டு வந்த பின்புதான் அவர்கள் கேரள போலீஸாரின் உதவியை நாடியிருக்கின்றனர். காவல்துறையினர் 18 சுற்றுகள் வரை துப்பாக்கிச் சூடு ஆதிவாசி மக்கள் மீது நடத்தியிருக்கின்றனர். இதில் ஒரு ஆதிவாசி, ஒரு காவலர் மட்டுமே இறந்ததாக சொல்வதும் பொய். குல்தீப் நய்யார் சம்பவ இடத்தில் மட்டும் 16 பேர் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார். குமார் என்ற சமூக ஆர்வலர் இங்கே சென்று ஆய்வு நடத்தி 20 க்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் இறந்துள்ளனர் என குறிப்பிட்டார். இவர்கள் தவிர 200க்கும் அதிகமான ஆதிவாசிகள் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் கூட காவல்துறையினரோ, வனத்துறையினரோ இல்லை. அப்படியானால் இங்கே என்ன நடந்திருக்கும். ஆதிவாசிகள் தற்காப்புக்காக மட்டுமே போராடியிருக்கிறார்கள். அதை ஒரு போர்ப் பிரகடனம் போல் சித்தரித்து பல நாட்கள் உண்மையை வெளிவராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது கேரள அரசு!'' என்றார் செங்கோட்டையன்.
இதில் மரணமடைந்த காவலர் குடும்பத்துக்கு கேரள அரசு உடனடியாக நிவாரணம் ரூ.5 லட்சம் வழங்கியது. காயமடைந்த வனத்துறை சேர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அளித்துள்ளது. ஆனால் மரணமடைந்த ஆதிவாசிகள் முதல் படுகாயமடைந்த நூற்றுக்கணக்கான ஆதிவாசிகள் வரை ஒரு பைசா கூட நிவாரணமோ, மருத்துவச் செலவோ தரவில்லை.
சரணாலய விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மசினக்குடியில் நடந்த தொடர் போராட்டங்கள் நடந்து மூன்று வருடங்கள் கழித்துதான் முத்தங்கா யுத்தம் நடந்தது. முதுமலையின் இடமும் வலமும் உள்ள பகுதியில் இது நடந்தது என்றால், இந்த முத்தங்கா சம்பவம் நடந்து சரியாக பத்து மாதங்கள் கழித்து கூடலூரில் ஒரு மாபெரும் போராட்டம் நடந்தது. அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வு இதோ, தமிழகத்திலும் ஒரு முத்தங்கா என சமூகப் போராளிகள் விமர்சிக்கும் அளவு எல்லை கடந்தது.
மசினக்குடி, முத்தங்கா இரு பகுதிகளும் முதுமலை சரணாலய எல்லைகளில் கிழக்கு மற்றும் மேற்குப் புறங்களில் 5 கிலோ மீட்டர் மற்றும் 15 கிலோமீட்டர் இடைவெளியிலேயே உள்ளது. அதேபோல் கூடலூர் நகரம் முதுமலை சரணாலய எல்லையிலிருந்து தெற்கே 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. முதுமலையின் முப்புறத்தில் முதல் புறம் சரணாலய விஸ்தரிப்புக்கு எதிராகவும், இரண்டாம் புறம் பழங்குடியின நில மீட்பு விவகாரமாகவும் வெடித்திருக்க, மூன்றாம் புறமாக வரும் கூடலூரில் என்ன பிரச்சனை? அதுவும் நிலம் சம்பந்தமானதுதான். அதுதான் ஜென்மி நிலங்கள் எனப்படும் செக்கஷன் -17 (பிரிவு 17) நில விவகாரம்.
2003 நவம்பர் மாத இறுதியில் கூடலூரில் 'ஏழை விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வனக் கொள்ளையர்களை வெளியேற்று!' என்ற முழக்கத்துடன் அந்த பெருங்கூட்டம் திரண்டிருந்தது. கூடலூர் பகுதிகளான பாரதி நகர், அய்யப்ப மட்டம், செல்வபுரம், காந்திநகர், திருவள்ளுவர் நகர், பந்தலூர் பகுதிகளிலில் பல தலைமுறைகளாய் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் விவசாயம் செய்து பிழைத்துக் கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், அவர்கள் நிலங்களிலிருந்து அடித்து விரட்டப்பட்டிருந்தனர்.
அவர்கள் வீடுகளோ, விவசாயம் செய்து பிழைக்கத் துண்டு நிலமோ இல்லாமல் தெருவுக்கு வந்திருந்தனர். அதற்கு வனத்துறையினரே காரணம். இது போல சுமார் 30 ஆயிரம் குடும்பங்களை அவரவர் நிலங்களை விட்டு வெளியேற்றப் போவதாக வனத்துறை சொல்லிக் கொண்டிருக்கவேதான் மக்கள் கொந்தளித்துப் போராட்டத்தில் குதித்திருந்தனர். சிறு விவாசாயிகள் வாழ்வுரிமைப் பாதுகாப்புக் குழு, விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் கட்சிப் பாகுபாடின்றி இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தன.
''கூடலூர் காடுகள் காப்பாற்றப்பட வேண்டுமென்பதிலும், அதில் வசிக்கும் கானுயிர்களுக்கு துன்பம் நேரக்கூடாது என்பதில் எல்லாம் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் காடழிக்கும் பெரும் வனக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, ஏழை எளிய மக்களை இப்படி வதைப்பது ஏன்? முப்பது நாற்பது ஆண்டுகளாக நாங்கள் பயிர் செய்திருக்கும் தேயிலை, காபி, மிளகு போன்ற பயிர்களை எல்லாம் எங்கள் கண் முன்னாடியே வெட்டி அழிக்கும் வனத்துறையினர் ஆயிரம், ஐயாயிரம் ஏக்கர் காடுகளை ஆக்கிரமித்து, எஸ்டேட்டுகளாக வைத்து கொழுக்கிறார்களே. வனவிலங்குளையும் வேட்டையாடிக் கொல்கிறார்களே அவர்களை போய் விரட்ட வேண்டியதுதானே?'' என்பதுதான் அங்குள்ள மக்களிடம் வெளிப்பட்ட கோபாவேசம்.
மீண்டும் பேசலாம்.
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT