Published : 02 Nov 2017 02:07 PM
Last Updated : 02 Nov 2017 02:07 PM
அந்த கரடுமுரடான சாலையின் இடது பக்கம். ஒரு பெரிய மரத்தடியில் உடம்பு முழுக்க செம்மண் பூசிய நிலையில் அந்தக் காட்டு யானை. அங்கு நின்ற மரங்கள் பெரியதா? அந்த யானை பெரியதா என்றே புரிபடாத தோற்றம். மினுங்கும் நீண்ட கொம்பு. எண்ணி பத்தடி தூரத்தில் அந்த பிரம்மாண்ட உருவம். பின்புறம் தள்ளி ஆடாமல், அசையாமல் நிற்கும் காதுமடல்கள். அது பார்க்கும் பார்வையே தாக்கத்தயாராகி விட்டது போல் இருந்தது. காரை ஓட்டிய வக்கீல் பாண்டியராஜன் சற்றே தடுமாறி விட்டார்.
'பாண்டி, பாண்டி போயிடுங்க. வண்டியை நிறுத்தாதீங்க!' சீனியர் ஞானபாரதியின் குரல். 'கொஞ்சம் நிறுத்து. நல்லா பார்ப்போம்!' என செல்வராஜின் பதட்டம். 'நிறுத்தினா எல்லோரும் பரலோகம் போக வேண்டியதுதான். வண்டியை நிறுத்தாம ஓட்டுங்க!' என்கிறார் வண்டியில் இருந்த மற்றொருவர்.
குண்டும் குழியுமான சாலையில் அந்த காரை வேகமெடுத்தும், எடுக்காமல் ஒரு கிலோமீட்டர் தூரம் கொண்டு வந்து நிறுத்திவிட்டுத்தான் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார் பாண்டியராஜன். 'இப்படி காட்டுசாலையில், அதிலும் காட்டு யானைகள் மிகுந்த சாலையில் நாம் வாகனம் ஓட்டுவது ஆபத்தானது. இனிமேல் இப்படி வரும்போது மலைப்பகுதியில் வாகனம் ஓட்டி பழகியிருக்கும் டிரைவரை அமர்த்திக் கொள்வது நல்லது!' என்று அவர்கள் பேசிக் கொண்டனர்.
பில்லூரு, மானாரு, மஞ்சூரு, அவலாஞ்சி என பல்வேறு பகுதிகளில் 15-20 ஆண்டுகளுக்கு முன்பு செய்திக்களுக்காக பயணித்த காலங்களிலும் சரி, காட்டு யானைகளை பார்க்க வேண்டும் என புறப்பட்டு சென்ற காலங்களிலும் சரி யானைகளுடனான, யானைகளுடன் வாழும் மக்களுடனான பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அப்போதெல்லாம் இந்த சுற்றுவட்டார கிராமங்களில் திரும்பின பக்கமெல்லாம் யானைகள் காணப்பட்டன. ஆனால் யானைகளுக்கு எதிரான சமாச்சாரங்கள் எதுவும் காணப்படவில்லை. எங்கும் மின்வேலி போடப்படவில்லை. அகழிகள் வெட்டப்படவில்லை.
ஆனால் இப்போது அப்படியில்லை. சில மாதங்களுக்கு முன்பு சி. மகேந்திரனுடனான பில்லூர் பயணத்தின் போது பார்க்கிறேன். தேவையில்லாத இடங்களில் கூட அகழிகள் கடைவிரித்தன. அதிலும் காரமடை - பில்லூர் சாலையில் குண்டூர், மானாரு உள்ளிட்ட வழியோர மலைக் கிராமங்களில் வெட்டப்பட்டிருக்கும் அகழி யானைகள் சறுக்கு விளையாடவே ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இங்கு வாழும் மக்களிடம் கேலிக்குள்ளாக்கப்பட்டு வந்தது.
பொதுவாக மலையை மறைத்து யானை இறங்கும் பகுதியில்தான் அகழிகள் வெட்ட வேண்டும். இதுதான் வனத்துறையின் வழிகாட்டுதல். ஆனால் இங்கு அகழிகள் மலைக்கு தடுப்பு போல் ஒரு பக்கம் தோற்றம் கொண்டிருந்தது. அதையே இன்னொரு திசையிலிருந்து பார்த்தால் மலையின் மீதிருந்து சறுக்கு விளையாட அமைக்கப்பட்ட பாதைபோலவும் காணப்பட்டது. அதை மலை, மேலிருந்து பார்த்தால் கீழாக இறங்கும் நீரோடை பள்ளம் போலவும் இருந்தது. இப்படிப்பட்ட அகழியில் காட்டு யானைகள் சறுக்கிக் கொண்டே ஊருக்குள் வந்து விடுகின்றன என்று கிண்டல் ததும்பப் பேசினர் மக்கள்..
இங்கே ஆதிமாதையனூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, கண்டியூர் தேக்கம்பட்டி என 20க்கும் மேற்பட்ட காரமடை வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் எல்லாம் இப்படித்தான் யானைகள் தடுப்பு அகழிகள் வெட்டப்பட்டுள்ளன. இவற்றால் துளி கூட பிரயோஜனமில்லை. யானைகள் முன்பு வந்ததை விட தற்போது அதிகமாகவே வருகின்றன. அவை காலை கொஞ்சம் அழுத்தி இந்த அகழிக்கு அருகில் வைத்து மண்ணைத் தள்ளி அதில் சறுக்கிக் கொண்டே ஊருக்குள் வந்து விடுகிறது. யானைகள் வராமல் இருக்க அகழி வெட்ட வேண்டுமானால் குறைந்தபட்சம் 7 அடி ஆழ குழி வெட்டி குறுகலான அகலத்தில் V வடிவத்தில் அகழியைக் கொண்டு போயிருக்க வேண்டும். அந்த நுட்பத்தை இதில் செய்யவில்லை.
எனவே இந்த அகழிகளை ஜாலியாக சறுக்கு விளையாட்டு போல் யானைகள் கடந்து வருகின்றன. இந்த அகழிகள் எல்லாம் 3 வருடங்களாக உள்ளூர் மக்களின் கேலிக்குரிய விஷயமாகவும், வெளியூர் மக்களின் காட்சிப் பொருளாகவும் மாறிவிட்டது.இந்த யானைகள் அகழி அமைத்திருப்பது எல்லாம் வீண் என்பதை அப்போதே பலமுறை ஆட்சியர் விவசாய குறைகேட்பு நாளன்று விலாவாரியாக எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அதற்கு மாற்று ஏற்பாடு செய்யச் சொல்லியும் பல முறை மனு அளித்துள்ளோம். தற்போது யானைகளுக்கு மலைக்கு மேலேயே தண்ணீர் இல்லை. எனவே கீழே வந்து விடுகிறது. அதற்காக வனத்தில் உள்ள தொட்டிகளில் அவ்வப்போது தண்ணீர் நிரப்புகிறார்கள். அதையும் சரிவரச் செய்வதில்லை.
ஆகவே அங்கே தண்ணீர் இல்லாவிட்டால் உடனே யானைகள் ஊருக்குள் வந்து விடுகிறது. சோலார் மின் வேலிகளும் பயனளிப்பதில்லை. அந்த மின்சாரத்திற்கெல்லாம் அது அசைந்து கொடுப்பதில்லை. அப்படி வரும் யானைகளை விரட்ட, காட்டுக்குள்ளிருந்து வராமல் தடுக்கவும் வனத்துறையில் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் போதுமான அளவு இல்லை. ஏழெட்டு பேர் இருப்பதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது; 30- 40 பேராவது புதிதாக பணியில் அமர்த்த வேண்டும் என்றெல்லாம் புலம்பித் தள்ளினர் இங்குள்ள மக்கள்.
இப்படியான புலம்பலுக்கு மத்தியில்தான் தன் தோட்டத்தில் யானைகள் வராமல் இருக்க ஓர் விநோத உத்தியை கையாண்டிருப்பதாக தெரிவித்தார். அது விநோத உத்தி என்பதை விட விபரீத உத்தி என்றே சொல்வது தகும்.
இந்த விவசாயி தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. எல்லையில் மின்வேலி, அகழி என எல்லாம் அமைத்தும் பயனில்லை. எனவே தன் வீட்டு செப்டிக் டேங்க் கழிவுகளை ஒருநாள் அந்த அகழியில் விட்டார். குறிப்பாக அந்த செப்டிக் டேங்க் கழிவுகள் அன்றாடம் யானைகள் எந்த அகழியில் எந்தப் பக்கம் இறங்கி வருகிறதோ, அதே இடத்தில் விட்டிருக்கிறார்.
அந்த வாசம் அந்தப் பகுதியையே தூக்கியிருக்கிறது. அது கொட்டின நாளிலிருந்து அந்த வழியை எட்டிக் கூட பார்க்கவில்லை யானைகள். பிறகு தன் தோட்டத்து பகுதியில் எல்லையோரம் இருக்கும் அகழியில் சில லாரிக்காரர்களிடம் பேசி வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் செப்டிக் டேங்க் கழிவுகளைக் கொண்டுவந்து விடச் சொன்னார்.
''அதுக்கப்புறம் எந்தோட்டத்து பக்கம் தலைவைத்துக் கூட வைக்கவில்லை யானைகள். அதையே பக்கத்து தோட்டத்துக் காரங்ககிட்டவும் செய்யச் சொன்னேன். அவங்க நாற்றம் தாங்கலைன்னு சில பேர் அலறி மறுத்துட்டாங்க. சில பேர் அதையே பின்பற்றினாங்க. இந்த நரகல் போடற இடத்தில் யானைகள் வர்றதே இல்லை. இது நான் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை. அதை மற்ற ஊர்களில் யானை தொந்தரவு இருக்கிற இடங்களில் மற்றவங்களையும் செய்யச் சொல்லலாம்!'' என்றார். அவர் சொன்னது மேலோட்டமாக சரி. அதையே அனுபவப்பூர்வமாக பார்த்தால் அந்த உத்தி எவ்வளவு அபாயகரமானது; ஆபத்தானது என்பதை உணரமுடியும்.
கோவை தீத்திபாளையத்தை சேர்ந்த விவசாயி தன் தோட்டத்தில் தொடர்ந்து காட்டு யானைகள் தொந்தரவால் அவதிப்பட்டார். அங்குள்ள கிணற்றடி தொட்டியில் தண்ணீர் அருந்த வரும் யானைகள் அப்படியே தன் தோட்டத்தில் உள்ள வாழைகளை, சோளப் பயிர்களை சேதப்படுத்தி சென்றன. அதைத் தடுப்பதற்காக சில விவசாயிகள் சொன்ன உத்தியை கேட்டு, அங்குள்ள தொட்டித்தண்ணீரில் மாட்டுச்சாணத்தை கலந்து வைத்து விட்டார். அடுத்தடுத்து அங்கே வந்த யானைகள் தண்ணீர் குடிக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக அங்கிருந்த கிணற்றடி தடுப்புச் சுவர், மின் கம்பங்கள், எல்லாம் உடைத்து தள்ளிவிட்டுச் சென்றன.
ஒரு நாள் அதிகாலை தன் தோட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த விவசாயியை புதர் மறைவில் பதுங்கியிருந்த காட்டு யானை ஒன்று தூக்கி வீசியது. இதேபோல் எட்டிமடை ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் மற்றொரு சம்பவம். தினசரி தன் தோட்டத்திற்கு வரும் ஒற்றை யானை தண்ணீரை அருந்துவதோடு, பயிர்களையும் வழக்கம் போல் நாசம் செய்துவிட்டுச் சென்றது. அந்த யானை வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் அங்கேயே சுற்றித்திரிவதுதான்.
அந்த காலகட்டங்களில் தென்படும் தோட்டங்களில் எல்லாம் புகுந்து பயிர்களை கபளீகரம் செய்வதும் அடிக்கடி நடக்கும் ஒன்று. அந்த யானை தன் தோட்டத்திற்கு வராமல் இருப்பதற்காக தன் தோட்டத்து கிணற்றடி தொட்டி தண்ணீரில் சாணத்தை கலந்து வைத்தார் ஒரு பெண்மணி. தினசரி அங்கே தண்ணீர் குடிக்க வந்த யானை தண்ணீர் குடிக்க முடியாமல் அவதிப்பட்டது. சில நாட்கள்தான்.
அன்று பகல் 11 மணி. அந்தப் பெண்மணியின் தோட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் விளைந்து நின்ற சோளத்தட்டு பயிரை அறுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு மத்தியில் யானைக்கு சாணம் கரைத்து வைத்த பெண்ணும் சோளத்தட்டு வெட்டிக் கொண்டிருந்தார். திடீரென்று அந்த பக்கம் கரிய உருவம் மலைக்குன்று போல் வேகமாக நடந்து வந்தது. சோளத்தட்டு அறுத்துக் கொண்டிருந்தவர்கள் பிரமிப்புடன் 'யானை, யானை!' என கத்தும் நேரம் கூட இல்லை.
அடர்ந்த வெண் மினுக்கத்துடன் கூடிய தன் கொம்பினால் ஒரே குத்து துதிக்கையால் ஒரே தூக்கு. காலில் போட்டு ஒரு மிதி. பெண்மணியின் உடலை ஒரு புரட்டு புரட்டி, 'மூச்சில்லை!' என்பதை உணர்ந்ததுபோல் பார்த்துவிட்டு வந்த் வழியே திரும்ப நடந்து சென்று காட்டுக்குள் மறைந்தது. இப்போதும் இந்தப் பகுதிக்கு சென்று வேளாண்தொழிலில் ஈடுபடும் மக்களை சந்தித்துக் கேட்டால் குறிப்பிட்ட அந்த பெண்மணியின் மரணம் குறித்து கதை, கதையாக சொல்கிறார்கள் மக்கள்.
''யானை நுண்ணறிவு மிக்கது. அதற்கு அந்தத் தண்ணீர் தொட்டியில் யார் சாணத்தை கரைத்து வைத்திருக்கிறார்கள் என்பது அதன் மோப்ப சக்தி மூலமே நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. அதனால்தான் ஆத்திரம் தாளமுடியாமல் முப்பது பேருக்கு மேல் வேலை செய்து கொண்டிருந்த நிலையிலும், அந்த குறிப்பிட்ட பெண்ணை குறிவைத்தே பட்டப்பகலில் வந்து தூக்கிப்போட்டு மிதித்துக் கொன்று விட்டு சென்றுள்ளது. அந்த நாளிலிருந்து இந்தப் பகுதியில் யானைகளுக்கு தண்ணீரில் சாணத்தை கரைத்து வைப்பதில்லை!'' என தெளிவாகவே பேசுகின்றனர்.
மாட்டுச்சாணம் தண்ணீரில் கலந்ததற்கே அப்படியான விளைவு என்றால் தான் வரும் பாதையில் குழியில் மனிதக் கழிவான நரகலை கொட்டி வைத்தால் அந்த காட்டு யானைகள் என்ன பாடுபடும்? அதனால் ஏற்படும் பின்விபரீதங்கள் என்னவாக இருக்கும்? அது தன் கோபத்தை மனிதர்கள் மீது எப்படியெல்லாம் காட்டும், எத்தனை ஊர்களில் காட்டும் என்பதெல்லாம் ஊகிக்க முடியாதுதானே?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT