Published : 04 Nov 2017 02:39 PM
Last Updated : 04 Nov 2017 02:39 PM
நீர்மின் உற்பத்திக்காக அணை காமராஜர் காலத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும், கோவைக்கு அத்திக்கடவு முதலாம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை 1991-ல் ஜெயலலிதா அரசு நிறைவேற்றிக் கொடுத்தது. கேரளப் பகுதியில் அமைந்திருக்கும் சிறுவாணி பகுதியிலிருந்து கோவையின் நகரப் பகுதிகள் குடிநீர் பெற்றுக் கொண்டிருக்க, கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஒரு கட்டத்தில் இந்தத் திட்டம் காங்கயம், வெள்ளகோயில் வரையிலும் விரிவுபடுத்தப்பட்டது. சிறுவாணியில் நீர் வரத்து குறைவு, கேரள அரசுடன் பிரச்சினைகள் காரணமாக எந்த நேரமும் சிறுவாணி குடிநீருக்கு முட்டுக்கட்டை வரலாம் என்று யோசித்த கோவை மாநகராட்சி பில்லூர் இரண்டாம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தியது. இந்த இரண்டு குடிநீர் திட்டங்களுக்கான நீரும் பில்லூர் நீரேற்று மின்நிலையத்தின் அருகிலிருந்தே எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த நீர் குழாய்கள் வழியே அங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளியங்காடு கிராமத்தில் அமைந்துள்ள இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டு, பிறகே ராட்சஷக் குழாய்கள் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் மக்கள் பயன் பெறுகின்றனர். முதலாம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை பில்லூருக்கு தெற்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள அத்திக்கடவு கிராமத்தில் ஒரு நீர்த்தேக்கம் கட்டியே முதலில் திட்டமிட்டது அரசு.
அதற்காகவே அத்திக்கடவு கூட்டுக்குடிநீர் திட்டம் என்ற பெயரை அதற்குச் சூட்டியது. ஆனால் இந்தக் கிராமத்தில் அணை கட்டி நீர் தேக்கினால் அந்த நீர் கேரளாவின் கோட்டத்துறை வரை தேங்கும். நமக்கான நீர் அங்கே நிலத்தடிநீராக ஊற வேண்டுமா என்பது ஒரு பக்கம். நிர்வாக ரீதியிலான வேறு பிரச்சினைகளும் வரும். எனவேதான் அந்த திட்டத்தை பில்லூர் அணைப்பகுதிக்கே ஒரேயடியாக கொண்டு சென்றுவிட்டனர் அதிகாரிகள்.
இதற்கு பிறகு பில்லூர் தொடங்கி அதற்கு கீழே செல்லும் பவானி ஆற்றில் மேட்டுப்பாளையம் நகராட்சி, திருப்பூர் மாநகராட்சி, மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார கிராமங்களுக்கான குடிநீர் திட்டங்கள் எல்லாம் புதிதாக உருவாக்கப்பட்டன. செயல்வடிவமும் கண்டது. அதில் கோவை மாவட்டத்தின் 3-ம் குடிநீர் திட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்படி மட்டும் பவானி நதியில் பில்லூர் தொடங்கி பத்து கிலோமீட்டர் தொலைவிற்குள் 17 குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் தற்போது உள்ளன. இதற்கான குழி தோண்டல்கள், ராட்சஷ குழாய் பதிப்பு, நீரேற்று நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், இன்னபிற உதிரிப் பணிகள் எல்லாமே காட்டு விலங்குகள், குறிப்பாக காட்டு யானைகள் நடமாடும் பகுதிகளிலேயே நிகழ்ந்தேறியிருக்கின்றன.
கற்றவன் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது அந்தக் காலத்திய பொன்மொழியாக இருக்கலாம். இன்றைய நிலைமைக்கு மனிதன் சென்றவிடமெல்லாம் சூழல் கேடு, இயற்கை அழித்தல்தானே நடந்து கொண்டிருக்கிறது. அது இங்கும் சிறப்பாகவே நடந்துள்ளது.
ஒரு பக்கம் நீரேற்று மின்நிலையம், இன்னொரு பக்கம் கூட்டுக்குடிநீர் திட்டங்கள், அது சார்ந்த குடிநீர் வடிகால் வாரிய அலுவலர், ஊழியர் குடியிருப்புகள் உருவாக அதற்கேற்ப பில்லூர் கிராமமும் ஒரு ஊராக உருமாற்றம் கண்டது. இதற்காக கடைகள், பள்ளிக்கூடம், காவல் நிலையம், கிராம நிர்வாக மற்றும் ஊராட்சி அலுவலகங்கள் வந்தன.
இந்த வளர்சிதை மாற்றத்தை ஒட்டி வேளாண்மைத் தொழிலிலும் மாற்றங்கள் வந்தது. வெறும் காய்கறிகள், கம்பு, சோளம், ராகி, வரகு என தங்கள் தேவைக்கு, கால்நடைகளின் தேவைக்கு பயிர் செய்து வந்த விவசாயிகள் கரும்பு, வாழை, பாக்கு, தென்னை என பணப்பயிர்களை பயிரிடத் தொடங்கினர். புதிய மனிதர்களின் வருகை, கிராம மக்களின் வேளாண் மாற்றம் கண்ட இந்தக் கிராமத்தை சுற்றியுள்ள பழங்குடியினர்களின் வாழ்வியலிலும் மாற்றம் வந்தது.
தேன், கடுக்காய், பூச்சக்காய், நெல்லிக்காய், மூங்கில், இலவம் என காட்டுப் பொருட்கள் சேகரித்து வயிற்றுப்பாட்டை தீர்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு பக்கம் வனத்துறையினரின் கெடுபிடிகளாலும் அவதிப்பட்டனர். எனவே வேகமாக இந்த மக்களின் வாழ்வியல் ஓட்டத்தோடு இரண்டறக் கலந்தனர். எங்கோ ஆற்றில், சுணைகளில், சிறு குட்டைகளில் தேங்கியிருக்கும் நீரைப் பருகி வந்த காட்டு விலங்குகளிடமும் இதையொட்டி மாற்றங்கள் வந்தது.
பெரிய அணை. அதில் விரிந்து பரந்து கிடக்கும் நீர்வெளி. அதையொட்டி ஏராளமாய் வளர்ந்து நிற்கும் தென்னை, பாக்கு, வாழை, கரும்பு. போகிற போக்கில் நீரைக் குடித்துவிட்டு தோட்டங்களுக்குள் புகுந்தது. வேண்டிய அளவு சாப்பிட்டது. தன் வலு தனக்குத் தெரியும்தானே. தன்னை எதிர்த்தவர்களை- எதிரில் வந்தவர்களை, பட்டாசு வெடித்து, கொட்டடித்து விரட்டியவர்களை வாரி சுருட்டி வீசி மிதித்துக் கொல்லவும் ஆரம்பித்தது.
அநேகமாக தமிழ்நாட்டிலேயே யானைகளுக்காக ஒரு போலீஸ் ஸ்டேஷன் எங்காவது இருக்கிறதா? சந்தேகம்தான். இதோ, இந்த பில்லூர் கிராமத்திற்கு வாருங்கள். இங்கே என்ன வழக்குகள் எல்லாம் பதிவாகிறது என கேளுங்கள்.
காவலர்கள் யாவரும். 'யானை மிதித்து செத்தவர்கள், யானைகள் மின்வேலியில் சிக்கி இறந்தது. இதுதான் 90 சதவீதம் எப்ஐஆர் போடுகிறோம்!' என கண்ணை மூடிக் கொண்டு சொல்வதை நீங்கள் நீக்கமற கேட்கலாம். இதில் இன்னொரு வேடிக்கையான விஷயம்.
இந்த சிறு கிராமத்தில் அமைந்துள்ள போலீஸ் ஸ்டேஷன். காரமடை போலீஸ் ஸ்டேஷனின் துணைக்காவல் நிலையமாகவே செயல்படுகிறது. ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 13 காவலர்கள் பணியில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் அச்சம் ததும்பவே பணியில் இருப்பதை காணமுடிகிறது. ஏனென்றால் மாலை ஐந்து மணிக்கெல்லாம் இங்கே காட்டு யானைகள் வந்து விடுகின்றன. இந்த காவல் நிலையத்தையும், ஒரு வழி செய்து விடுகின்றன.
காவல்நிலையம் குடியிருப்புகளோடு குடியிருப்பாக வாடகைக் கட்டிடத்தில் இயங்குவதால் இங்கே சுற்றிலும் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. அதைச் சாப்பிட வரும் யானைகள் வெகு நேரமானாலும் நகருவதில்லை. சில சமயங்களில் காட்டு யானைகளில் இரண்டு குழுக்கள் ஒரே நேரத்தில் வந்து சண்டை போட்டுக் கொள்வதும் நடந்திருக்கிறது. இந்த நேரங்களில் எல்லாம் போலீஸார் கதவைப் பூட்டிக் கொண்டு காவல் நிலையத்திற்குள்ளேயே முடங்கிக் கொள்கின்றனர். சில சமயங்களில் மூர்க்கமான யானைகள் அந்தக் குடியிருப்புகளின் கூரைகளைப் பிரித்து வீசியெறிந்து விடுகின்றன. இதிலிருந்து தப்பிக்கவே பெரும்பாலான போலீஸார் மாவோயிஸ்ட் பெயரால் வாகனங்களை எடுத்துக் கொண்டு ரோந்து சென்று விடுகின்றனர்.
'பனிஷ்மெண்ட் டியூட்டி என்றால் தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்துவாங்கன்னு எங்க டிபார்ட்மெண்ட்ல ஓயாம சொல்றதை நீங்க கேட்டிருப்பீங்க. ஆனா தண்ணியுள்ள காடு தண்ணியில்லா காட்டை விட மிக மோசமாக இருக்கும்னு இங்கே வந்து பார்த்தவங்களுக்குத்தான் தெரியும் சார்!' என்று இங்குள்ள போலீஸ்காரர் ஒருவர் வேடிக்கையாக சொன்னது யோசிக்கவே வைத்தது.
இந்த ஸ்டேஷனுக்கு முன்பாக பொட்டல்வெளியாக காட்சி தரும் இடத்தில் புதிதாக போலீஸ் ஸ்டேஷனுக்கென்றே ஒரு சொந்தக் கட்டிடம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ''அந்தக் கட்டிடம் எப்படியும் ஒண்ணு ரெண்டு மாசத்துல முடிஞ்சிடும். அதுக்குள்ளே நாங்க குடிபோயிட்டா கொஞ்சம் நிம்மதியாயிருவோம். புது கட்டிடம் கான்கிரீட் கட்டிடம்ங்கிறதால, தினம் தினம் அங்கே யானைக கூரையை பிய்ச்சு வீச முடியாதல்லீங்களா?'' என கேட்கவும் செய்கிறார்கள்.
மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்புகள் இதற்கு முன்னதாகவே அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அவற்றில் 90 சதவீதம் பூட்டப்பட்டே உள்ளது. அதில் முழுக்க புதர்களும், சீமைக்கருவேல மரங்கள் முளைத்துக் கிடக்கின்றன.
அதற்குள் செல்ல முற்பட்டால் ஐயோ போயிடாதீங்க சார். ''அதுக்குள்ளே ராஜநாகம் இருக்குமோ, கரியன் (காட்டு யானை) இருப்பானோ தெரியாது. ஆறுமாசம் முன்னாலதான் அதுக்குள்ளே ஒரு ஆளை அடிச்சுப் போட்டுச்சு!'' என தடுத்தார் இப்பகுதிவாசி ஒருவர்.
இந்த பில்லூரை சுற்றியுள்ள குண்டூர், அத்திக்கடவு, சுரண்டி, புதுக்காடு, கூடப்பட்டி, மாயாறு, கொத்துக்காடு, போரப்பதி, வீரகல்லு, பரளி பவர் ஹவுஸ், பரளிக்காடு, நீராடி என வரும் கிராமங்களில் (பெரும்பாலும் பழங்குடிகளே வசிக்கின்றனர்) மாவோயிஸ்டுகள் உலா வருவதாகவும், அங்குள்ள இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அரசியல் பயிற்சி அளிப்பதாகவும், அதற்காக ரோந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் போலீஸார்தான் சொல்லுகின்றனர். அதை அப்படியே மீடியாக்களும் எழுதுகின்றனர்.
ஆனால் நாம் சென்ற போது ''போலீஸ்காரங்க வாயிலதான் மாவோயிஸ்ட் என்கிற வார்த்தையைக் கேட்கிறோம். எந்த இடத்திலும் மாவோயிஸ்ட்டுகளை பார்த்ததில்லை. ஒரு காலத்தில இப்படி வீரப்பன் பேரச் சொல்லி திரிஞ்சாங்க. அதுல என்ன கிடச்சுதோ என்னவோ. இப்ப என்ன கிடைக்குதோ தெரியலை மாவோயிஸ்ட்னு தேடிட்டு திரியறாங்க. எங்களோட கஷ்டம் நஷ்டம் எல்லாமே யானைகளால்தான்!'' என பொங்கினர் சிலர். நான் சென்ற கிராமங்களில் ஏல்லாம் யாராவது ஒன்றிரண்டு பேராவது யானையிடம் தப்பித்தவர்கள், யானை மிதித்து இறந்தவர்கள் கணக்கு இருந்தது.
''அந்த வழக்கைப் பதிவு செய்தால்தான் அவர்களுக்கு வனவிலங்குகள் தாக்கப்பட்டு இறந்ததற்கான அத்தாட்சி கிடைக்கும். எனவே இந்த விஷயத்திற்கு உதவி செய்வதே எங்கள் போலீஸ் ஸ்டேஷனின் முக்கிய பணியாக இருக்கிறது!'' என்கின்றனர் இங்குள்ள காவலர்கள்.
இந்த காவல் நிலையத்திற்கு அருகிலேயே ஒரு தொடக்கப்பள்ளி. அதில் 22 மாணவ- மாணவியர் படிக்கின்றனர். 10-ம் வகுப்பு, பிளஸ் டூ படிக்க வேண்டும் என்றால் இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள வெள்ளியங்காடு, அல்லது காரமடைதான் செல்ல வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வது மட்டுமல்ல; மக்கள் அன்றாடம் டவுனுக்கு பொருட்கள் வாங்கச் செல்வதும், வேலைக்குச் செல்வதும் கூட ஒரு கொடுமையான விஷயமாகவே உள்ளது.
அதற்குக் காரணம் இங்கு காணப்படும் கரடு முரடு சாலை. இங்கிருந்து வெள்ளியங்காடு வரை சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் குதித்துக் குதித்தே செல்ல வேண்டியிருக்கிறது. அந்த அளவு ரோடுகள் மோசம். 25 ஆண்டுகளுக்கு முன்பு போட்டது. இன்னமும் யாரும் நடவடிக்கை எடுக்கவேயில்லை.
''குந்தா, கெத்தை, பரளிக்காடு, பில்லூர், பைக்காரா, மோயாறு என நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் மின்நிலையங்களுக்கான சாலைகளை எல்லாம் நன்றாகவே போட்டு விட்டார்கள். ஆனால் இங்கே மட்டும்தான் இப்படியே கிடக்கிறது. இந்த சாலை மின்சாரத்துறையினுடையது. அவர்கள் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் சாலை போட வனத்துறை ஒப்புதல் தரவில்லை என்று பேசுகிறார்கள். ஆனால் உண்மை நிலையை எந்த அதிகாரிகளும் வெளிப்படுத்துவதில்லை. இதனால் துன்பத்தில் ஆழ்பவர்கள் இங்கே பணியில் உள்ளவர்கள்தான். இங்கே பணியாளர்களுக்கென 60 குடியிருப்புகள் உள்ளன. அதில் 10 க்கும் குறைவான பணியாளர்களே தங்கியுள்ளனர்.
அவர்கள் எல்லோரும் திருமணமாகாதவர்கள். அப்படியே திருமணம் ஆகியிருந்தாலும் அவர்கள் குடும்பம் கீழே காரமடையிலோ, மேட்டுப்பாளையத்திலோ வசிக்கும். வாரத்திற்கு ஒரு முறை, 15 நாளைக்கு ஒரு முறை சென்று வருவார்கள். அப்படியொரு கொடுமையான ஏரியா இது. அவசர ஆத்திரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு கூட செல்ல முடியாது. அதனால பெரும்பான்மையோர் டிரான்ஸ்பர் ஆர்டர் வாங்கிக் கொண்டார்கள். ஆனால் அவர்களை மாற்றி அனுப்ப ஆட்கள் வருவதில்லை. அப்படியே யாராவது மாறுதல் பெற்று வந்தாலும் ஒருநாள் வந்து இங்கே சுற்றிப் பார்ப்பார்கள். அன்றைய தினமே நகரப்பகுதிக்கு சென்று யாரையாவது பிடித்து மாறுதல் உத்தரவை மாற்றிக் கொண்டு சென்று விடுவார்கள்.
இங்கே மட்டும் 22 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மாறுதல் உத்தரவு வாங்கியிருக்கிறார்கள். அவர்களில் மாறுதல் உத்தரவு வாங்கியும் 2 ஆண்டுகள் கடந்து இடம் மாற முடியாமல் தவிப்பவர்கள் நிறைய உள்ளார்கள். எங்கள் துறை விதிமுறையின்படி என்னதான் மாற்றல் உத்தரவு வந்துவிட்டாலும், மாற்றி விட வேண்டியவர் வந்து அவர்களிடம் சார்ஜ் ஒப்படைத்து விட்டத்தான் செல்ல வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதனாலேயே இங்கே பலரும் நீண்ட நாட்களாக துன்பப்பட்டு கிடக்கிறார்கள்!'' என்பது இங்குள்ள மின் ஊழியர்களின் தீரா புலம்பலாக உள்ளது.
காலையிலிருந்து இரவு வரை 3 முறை காரமடை, கோவையிலிருந்து பேருந்து வருகிறது. அதுவும் எந்த நேரம் எங்கே மக்கர் செஞ்சு நிற்கும். காட்டு யானைகள் வழிமறித்து நிற்கும். அதனால் எந்த நேரத்தில் அது வரும் என்பதெல்லாம் சொல்ல முடியாத நிலை உள்ளது. வெள்ளியங்காடு முதல் சாலை நன்றாக இருந்தால் 1 மணி நேரத்தில் இங்கே வந்துவிடலாம். அது குண்டும் குழியுமாக கிடப்பதால் அதே பேருந்து வருவதற்கு 2 மடங்கு காலம் எடுத்துக் கொள்கிறது என்கிறார்கள் பொதுமக்கள்.
இந்த ஊரில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் கூறும்போது , ''இது நெல்லித்துறை ஊராட்சிக்கு கீழே வரும் கிராமம். அணை கட்டின காலத்திலிருந்தே இந்த ஊருக்கு எதுவுமே செய்யல அதிகாரிகள். அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்துல ஓட்டுக் கேட்டு வருவாங்க. அப்புறம் திரும்பி பார்க்க மாட்டாங்க. ஓரே ஒரு முறை கலெக்டர் வந்து பார்த்தார். உடனே புது ரோடு போட ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்கள். ஒண்ணும் நடக்கலை. ரெண்டு மாவட்டத்துக்கே இங்கிருந்துதான் குடிக்கத்தண்ணி கொண்டு போறாங்க. கரண்டு கொண்டு போறாங்க. ஆனா எங்களுக்கு ஒரு ரோடு போட்டுத்தர மாட்டேங்கறாங்க. இங்கே நீராடி, பரளிக்காடு, நெல்லிமரத்துார், பூய்க்க மரத்தூர், காடியூர், சேத்துமடை, கீழ்பில்லூர்ன்னு ஏகப்பட்ட பழங்குடியின கிராமங்கள் இருக்கு. அவங்களை திரட்டி போராட்டம் செய்யலாம்னு இருக்கோம்!'' என்றனர் ஆவேசம் பொங்க.
அவர்கள் போராடுவார்கள்தான். சாலையும் போடலாம்தான். அதைப் போட்டால் நிலைமை என்னவாகும்? அது அவர்களுக்குத் தெரியுமா?
மீண்டும் பேசலாம்.
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT