Published : 10 Nov 2017 03:41 PM
Last Updated : 10 Nov 2017 03:41 PM
காடுகளுக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் இந்த அளவு சேதம் விளைவிக்கப்படுகிறதோ, மனித வளர்ச்சிக்காக அவை அழிக்கப்படுகிறதே; இதை ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு என்று நிறைய வாசகர்கள் ஆவேசம் பொங்க கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அதில் இளைஞர்களே அதிகமாக இருப்பதும், அவர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியில் இருப்பவர்கள் என்பதும் ஆச்சர்யமூட்டும் விஷயங்கள்.
தமிழில் சூழல் சம்பந்தமான கட்டுரையை வாசிப்பவர்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள்; அவர்களுக்குள்ளும் சமூக அநீதிகளை எதிர்த்து பொங்கும் கோப தாபங்கள் மிகக்கூடுதலாக இருக்கிறது; தமிழ் வாசிக்க முடியாவிட்டாலும், அவ்வளவு சுத்தமாக எழுத முடியவில்லையே என்று வாளாவிருக்காமல், தனக்குள் எழும் தம் உணர்வுகளை மூட்டை கட்டி வைத்துக் கொள்ளாமல் ஆங்கிலத்திலும், தங்கிலீஸிலும் மாறி, மாறி எழுதும் வல்லமையுடன் அவர்கள் இருக்கிறார்கள் அந்த இமெயில் கடிதங்கள் மூலம் அறியும் போது ஏற்படும் நெகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அதில் ரூபா திலகன் என்னும் வாசகர் யானைகளுக்கான காவலனாகவே மாறி விட்டார். ''யானைகளுக்குப் பின்னாடி இவ்வளவு பெரிய அரசியல் இருக்கிறது என்று நினைக்கும் போது மனம் வலிக்கிறது. சமூகத்தின் உயிர் சூழலையும், உணவுச் சங்கிலியையும் அறுத்தெறிந்து கொண்டிருக்கிறோம். வேதனையே மிஞ்சுகிறது!'' எனப் பேசுகிறது அவரின் முதல் கடிதம்.
இன்னொரு கடிதம் ''அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து குப்பைக் கழிவுகளை தினசரி இறக்குமதி செய்தது. இப்படி 2006- 2007 ஆம் ஆண்டில் மட்டும் இந்த கம்பெனி இறக்குமதி செய்த குப்பையின் எடை மட்டும் 1 லட்சத்து 8 ஆயிரம் டன்கள். . . . . .வெள்ளத்தோல் காரனுங்க பொய் சொல்ல மாட்டாங்க, ஏமாத்த மாட்டாங்கன்னு நம்மில் பல பேர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இனிமேலாவது நமது அரசாங்கம் விழித்துக் கொள்ளுமா?'' என்கிறது ஒரு கடிதம்.
அடுத்தது, ''வனங்களைக் காக்கவேண்டிய வனத்துறையினரே இப்படி மருத்துவக் கழிவுகளை வனங்களில் விட்டுச் சென்றுள்ளனரே. இது நியாயந்தானா? அருமையான தொடர். சம்பந்தப்பட்டவர்கள் உணருகிறார்களா ?'' என்கிறது.
இதை விட பெங்களூருவில் பணியாற்றும் டி.ஆர். ஹரிஹரசுதன் தன் கடிதம் மூலம் எப்படி பொங்குகிறார் பாருங்கள்.
''எனக்கு சமூக நோக்கம் மட்டும் அல்ல... காடும் காணுயிரும் இந்த பூமிக்கு வேண்டும்... என் தலைமுறை மட்டும் அல்ல எனக்கும் பின் உள்ள 7 ஏழு தலைமுறையும் இந்த கானுயிரையும் காட்டையும் கண்டு வியக்க வேண்டும் ... மகிழ்ச்சியடையவேண்டும். காடும் காட்டு விலங்குகளும் இல்லை எனில், நமக்கு மலை / மழை இல்லை... மனிதனின் பேராசை இவைகளை அழித்து தான் மற்றும் வாழ நினைத்தால் .... மீண்டும் ஆழி பேரலை தாக்கும், பூகம்பம் தாக்கும். இவைகளை நினைக்கும் போது, கீதையில் கண்ணபிரான் சொன்ன வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றது. 'எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்கின்றதோ, அப்பொழுது நான் பூமியில் மனிதனாக அவதரிப்பேன்' என்றார்.
நான் கடவுளை நம்புபவன்... ஆகையால் இது நடக்கும் என்று எனக்கு தோன்றுகின்றது. தங்களுக்கு ஒரு புதியதொரு வெளிச்சம் கிடைக்கும். அந்த வெளிச்சத்துளிகள் நம்மைப் போன்ற சமூக ஆர்வலர்களை அந்த பாதையில் நடக்கவும் செய்யும் என நம்புகிறேன். இந்த உத்வேகம் போதும். எங்களால் முயன்ற அளவு நாங்களும் உங்களுடன் மற்ற நண்பர்களுடன் போராட முனைவோம்.இது உறுதி.
நாம் போராடப் போனால் நமக்கு அரசியல் முத்திரையோ அல்லது நாட்டுக்கு எதிரானவன் என்றோ முத்திரை குத்திவிடுவர் (அரசியல்வாதி ) என்று எண்ணித்தான் நம் நண்பர்களும் மற்றவர்களும் வரவில்லை. இனி என்ன ஆனாலும் நாம் நம்முடைய கானகத்தை / கானக உயிரினத்தை காக்கவேண்டும்!'' என்கிறார்.
அடுத்து சு.செந்தில்குமார் என்பவர் இப்படி எழுதுகிறார்:
கட்டுரையை படித்தும் புரிந்தும் வருகிறன். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வரை, வருடத்திற்கு ஒரே ஒரு முறை தான் எங்கள் கிராமத்திற்கு யானை வரும். கார்த்திகை அல்லது மார்கழி மாதம் சுவாமி அய்யப்பன் ஊர்வலத்தில். இன்றோ அது தினம் தினம் நடக்கும் ஒரு விசயமாகிப்போனது. வருத்தம்தான். எங்கள் கிராமமான கோவை நஞ்சுண்டாபுரம், சின்ன தடாகம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் ஒரு காலத்தில் யானைகளுக்கு சம்பந்தமே இல்லாமல் இருந்தது. இன்று நிலமை தலைகீழ்.
எங்கள் பகுதி யானைகள் வழித்தடமே அல்ல. ஆனால் இன்று யானைகளுக்கு இது மிக முக்கியமான வழித்தடம் மட்டுமல்ல, உணவுக்கூடமும் தான். எதனால் இப்படி? நீலகிரி மற்றும் வயநாடு மலைப்பகுதிகளில் கட்டப்பட்டுவரும் அதீத கட்டிடங்களே யானைகள் வழித்தடம் மாறியதன் காரணம். சோளம், அவரை போன்ற மானாவரி பயிர்களும், கரும்பு வாழை போன்ற தோட்டப்பயிர்களும் மிக முக்கியமான விவசாயம். ஆனால் இன்று யானைகளின் வருகையால் அழிந்தே போய்விட்டது. யார் யாரோ, எங்கேயோ செய்த தவறுக்கு, எங்கள் பகுதி மக்கள் சம்பந்தமே இல்லாமல் தண்டனை அனுபவிக்கிறார்கள்.
வந்த கடிதங்களில் சில கடிதங்களை மட்டுமே நம் வாசகர்களுக்கு விரித்துள்ளேன். இதேமாதிரியான இதை மீறிய உணர்ச்சி ததும்பல்களுடன் ஏராளமான வாசகர்கள் இந்த தொடரை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுவும், இணையத்தில் இந்தப் பக்கங்கள் புரட்டப்படும் வேகமே உணர்த்துகிறது.
இந்த கடிதங்கள் எல்லாமே இதற்கு ஒரு தீர்வை உடனே சொல் எனக்கு அன்புக்கட்டளையிடுகிறது. ஒரு வாசகர் இன்னமும் ஒரு படி மேலே போய், 'யானைகள் வருவதற்கான விஷயங்கள் ஆராயப்படுகிறது. உடனே தீர்வு வேண்டும்!' என்கிறார்.
அவர்களின் அவசரமும், உணர்ச்சி வேகமும் புரிகிறது. அந்த உணர்ச்சி ததும்பலில் உள்ள இதன் வாசகர்கள் இங்கே ஒன்றே ஒன்றை மட்டும் அறிந்து கொள்ள வேண்டும்.
நம் உலக வரைபடத்தைப் பாருங்கள். இந்த பூமிப்பந்தில் யானைகள் எங்கெல்லாம் வாழ்ந்திருக்கின்றன. தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை கூகுளில் சென்றால் அறிந்து கொள்ளலாம். அதில் முக்கியமாக ஆப்பிரிக்க, ஆசிய யானைகள், அவற்றின் வாழ்விடங்கள், அவற்றின் தன்மைகளை பற்றியும் நாம் வண்டி, வண்டியாக வாசிக்கலாம். அந்த பூகோள சுழற்சியில் ஆசிய யானைகள் வலம் வந்து கொண்டிருக்கும் 16 நாடுகளில் ஒன்றான இந்தியாவை பார்க்கிறோம். அதிலும் தமிழ்நாட்டை கவனிக்கிறோம். அதற்குள்ளும் சிறியதாக உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளை ஊடுருவுகிறோம்.
அதிலும் மிகச்சின்னதாக இருக்கும் வாளையாறு, மதுக்கரை, கோவை, ஆனைகட்டி, பெரியநாயக்கன் பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளின் யானைகளின் வலசைகளை மட்டுமேதான் நம் அனுபவத்திலான ஆராய்ச்சிக்கு உட்படுத்தி இந்த தொடரில் நகர்ந்திருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் இதுவரை நாம் பார்த்திருப்பது யானைகளின் குறிப்பிட்ட வலசைப்பகுதிகளை மட்டும்தான்.
இந்த சின்ன வலசையில் மட்டும் இத்தனை மனித தேவைக்காக, மனிதகுலத்தின் சுயநலமிக்க வளர்ச்சிக்காக பூமிப்பந்தில் அருகி, அபூர்வமாகி வரும் அரிய பெரிய விலங்கான யானைக்கு இன்னின்ன கேடுகள் நடந்திருக்கிறதென்றால், அது ஒட்டுமொத்த மாநிலத்தில், ஒட்டுமொத்த நாட்டில், ஒட்டுமொத்த உலக நாடுகளில் எத்தகையதொரு சோதனையை சந்தித்திருக்கும் என்பதுதான். சிறிய வலசைப்பகுதியிலேயே இப்படியென்றால் யானைகளின் புகலிடம் என்றும் வனவிலங்குகளின் சரணாலயம் என போற்றப்படும் இந்த வலசைகள் சேரும் முக்கோனப்பகுதியான முதுமலை, பந்திப்பூர், முத்தங்கா பகுதிகளில் எந்த அளவு நிலைமை மோசமாக மாறியிருக்கும்?
இதற்குத் தீர்வு என்பதை ஒரு சில வரிகளிலோ, ஓரிரு அத்தியாயத்திலேயோ சொல்லுவது சாத்தியமா? ஒரு பகுதி விவசாயிகளுக்கு ஆலோசனைகள் சொல்லலாம். அதிகாரிகளை ஊழலுக்கு இரையாகாதீர்கள் என எடுத்தியம்பலாம். ஆட்சியாளர்களிடம் இதற்கு கடுமையான சட்டங்கள் இயற்றுங்கள் என கோரிக்கை வைக்கலாம். இங்கே இப்படி யானை செத்தது/கொல்லப்பட்டது என்றும், இங்கே இப்படி யானை மிதித்து மனிதன் இறந்தான் என்றும், இங்கே யானைகள் புகுந்து விளைநிலங்கள் சேதம் என்றும் எத்தனை செய்திகளை வாசித்து விட்டோம்.
அதேபோல் இந்த யானை மனித மோதலை தடுக்க வனத்துறை/ விவசாயிகள்/சமூக ஆர்வலர்கள்/சூழலியாளர்கள்/ இயற்கை ஆர்வலர்கள்/ வனஉயிரின நேசர்கள் நடத்திய/நடத்திக் கொண்டிருக்கிற விழிப்புணர்வு முகாம்கள், பிரச்சார இயக்கங்களையும் பார்த்தும்/பார்த்துக் கொண்டும்தானே இருக்கிறோம். அவையெல்லாம் வீழலுக்கு இரைத்த நீராகத்தானே போய்க் கொண்டிருக்கிறது.
எனவேதான் ஒற்றைக் கட்டுரையில், ஒற்றை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நம் புத்தியில் ஏறக்கூடிய விஷயமல்ல என்பதை உணர்ந்து இந்த யானைகளின் வருகையை, அவை உயிர் வாழும் சில ஆயிரம் சதுர கிலோ மீட்டர் அளவுள்ள ஒரு துண்டு நிலத்தை எடுத்துக் கொண்டு, அங்குலம் அங்குலமாக, அணு, அணுவாக விரிந்துபட்ட அளவில் விவரித்து வருகிறேன். அப்படியானால் அதற்கான தீர்வு?
அதற்கான தீர்வுகளையும் நாம் விரிந்து பட்ட அளவில்தான் சொல்லியாக வேண்டும். எப்படி?
மீண்டும் பேசலாம்.
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT