Published : 06 Nov 2017 08:49 PM
Last Updated : 06 Nov 2017 08:49 PM
கருத்துச் சித்திரம் வரைந்ததற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியான கார்ட்டூனிஸ்ட் பாலா, இதைவிட நாகரிமாக தனது கருத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தியிருக்க முடியாது என தனது நியாயத்தை முன்வைத்திருக்கிறார்.
கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை மையப்படுத்தி தமிழக முதல்வர், நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோரை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த அவரிடம் கைது நடவடிக்கை, கருத்து சுதந்திரம் என பல்வேறு கேள்விகளை 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் முன்வைத்தோம்.
அப்படி ஒரு கார்ட்டூனை வரையக் காரணம் என்ன?
இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் தீயில் கருகி மாண்டு போகின்றனர். பெற்றோரே அந்தக் குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்திருக்கின்றனர். எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அந்த வகையில் அந்த பிஞ்சுகள் தீயில் கருகிய சம்பவம் என்னை மனதளவில் வெகுவாக பாதித்தது. தீக்குளித்த இசக்கிமுத்துவும் அவரது மனைவியும் ஊரெல்லாம் கடன் வாங்கியிருக்கின்றனர் என்று போலீஸ் தரப்பு கூறுகிறது. எத்தகைய கதையை போலீஸ் கூறினாலும் குழந்தைகளுக்கும் தீவைக்க பெற்றோர் துணிந்தனர் என்றால் இனி வாழவே முடியாது என்ற சூழலுக்கு தள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பதே எனது புரிதல். 6 முறை ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததாலேயே அந்த தீக்குளிப்பு சம்பவம் நடந்தது எனத் தெரிந்தபோது எனது கோபம் இன்னமும் அதிகரித்தது. அந்தக் குழந்தைகள் தீயில் எரிந்து சரிந்தது அதிகாரிகளின் அலட்சியத்தின், நிர்வாக சீர்கேட்டின் சாட்சி. அதை உருவகப்படுத்தவே அந்த கார்ட்டூனை நான் வரைந்தேன். அன்றைய தினம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தங்கள் கோபத்தை, ஆற்றாமையை, ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். நான் எனது கார்ட்டூன் மூலம் எனது கருத்தைப் பதிவு செய்தேன்.
ஆனாலும், சற்றே நாகரிகமாக அந்த கார்ட்டூனை வரைந்திருக்கலாம் என பலரும் கருத்து கூறுகின்றனரே?
இதைவிட நாகரிகமாக எனது கருத்தையும் நியாயமான கோபத்தையும் வெளிப்படுத்தியிருக்க முடியாது. இதைவிட சுதந்திரமாக வெளிநாடுகளில் கார்ட்டூன் வரைய முடியும். ஏன் நம் நாட்டிலேயே நெருக்கடி நிலை இருந்தபோது சில ஆழமான சுதந்திரமான கேலிச்சித்திரங்கள் செய்தித்தாள்களில் வெளிவந்திருக்கின்றன. இப்போது நெருக்கடி நிலை ஏதும் அமலில் இல்லை. ஆனாலும் அடக்குமுறை இருக்கிறது. நிர்வாக சீர்கேட்டை உருவகப்படுத்தியே நான் அரை நிர்வாண கோலத்தில் இருக்கும்படி அந்த கார்ட்டூனை வரைந்தேன். எனவே, இதைவிட நாகரிகமாக எனது கருத்தையும் நியாயமான கோபத்தையும் வெளிப்படுத்தியிருக்க முடியாது. அப்படி ஏதாவது நாகரிகம் இருந்தால் எனக்கு யாரேனும் கற்றுத் தரட்டும். நானும் கற்றுக்கொள்கிறேன்.
கருத்து சுதந்திரத்துக்கு எல்லையே இல்லையா?
நிச்சயமாக எல்லை இருக்கிறது. தனிநபரை விமர்சிக்கும் ரீதியாக எனது கார்ட்டூன்கள் இருக்குமானால் அது கருத்து சுதந்திரம் அல்ல. அதேவேளையில் ஒரு பிரச்சினை சார்ந்து தனிநபரை நான் கார்ட்டூனாக வரைந்தால் அது அத்துமீறல் அல்ல.
இதே நெல்லை ஆட்சியரை நான் பலமுறை பாராட்டி கருத்துச் சித்திரம் வரைந்திருக்கிறேன். அவரது 'அன்புசுவர்' திட்டத்தைப் பாராட்டி கார்ட்டூன் வரைந்திருக்கிறேன். அதற்காக அவர் முகநூலில் எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். ஆனால், இங்கே இப்போது இசக்கிமுத்து குடும்பமே தீக்குளித்து பலியானதன் பின்னணியில் நிர்வாக சீர்கேடு இருக்கிறது. அந்த சீர்கேட்டில் ஆட்சியரின் பங்கும் இருக்கிறது. அதன் காரணமாகவே அந்த கார்ட்டூனை வரைந்தேன். ஒருவேளை, அந்த அரை நிர்வாண கார்ட்டூன் ஆட்சியரை வேதனைப்படுத்தியிருந்தால் அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்பேன். ஆனால், அந்த கார்ட்டூனை வரைந்ததற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.
ஞாயிறன்று உங்களை போலீஸார் கைது செய்தபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
எனக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவே முடியாத சூழலே இருந்தது. ஒரு கார்ட்டூனுக்காக நெல்லையில் இருந்து சென்னைவரை வந்து கைது செய்வார்களானால் ஜனநாயகம் என்னவாயிற்று என்றே தோன்றியது. என் வீட்டுக்குள் திடும் என போலீஸார் புகுந்தனர். நிலைமையை உணரும் முன்னரே என்னை கைது செய்வதாகக் கூறினர். எனது மனைவி உடல்நிலை சரியில்லை என்று எடுத்துக்கூறியும் எதையும் அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. எதிர்வீட்டிலிருந்த எனது பத்திரிகை நண்பர் அருள் எழிலன் கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிக்கத் தயாராக இல்லை. மாற்று உடை எடுப்பதற்குக்கூட அனுமதிக்காமல் வேனில் ஏற்றினர். எனது செல்போன், லேப்டாப் ஆகியனவற்றைப் பறிமுதல் செய்துகொண்டனர். வேனில் ஏற்றியதும் ஒரு குரல் ஒலித்தது. "உங்களை சிறையில் அடைப்பதே எங்கள் நோக்கம். நீங்கள் வரைந்த கார்ட்டூனுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். நாங்கள் உங்களை அடிக்க மாட்டோம்" என்றது அந்தக் குரல். இறுக்கமான மனநிலையுடன் வேனில் பயணித்தேன்.
உங்களுக்காக குரல் கொடுத்த சக பத்திரிகையாளர்கள், சமூகப் போராளிகளுக்கு நீங்கள் சொல்ல முயல்வது என்ன?
இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் எனது கார்ட்டூனை பெரிய பேனராக வைத்து எனக்காக குரல் கொடுத்த தோழமைகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைக் கைது செய்ததன் மூலம் எனது ஒரு கார்ட்டூனை ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்டி நிர்வாக சீர்கேட்டை அரசே அம்பலப்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்வேன். இந்தக் கைதுக்கு பின்னணி முழுக்க முழுக்க இந்த ஒரு கார்ட்டூன் மட்டுமல்ல. அண்மைக்காலமாகவே நான் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து கார்ட்டூன் வரைந்துவருகிறேன். அதற்குப் பழிவாங்குவதற்காகவே இந்த கைது நடவடிக்கை. நெல்லை மாவட்ட ஆட்சியரை பயன்படுத்திக் கொண்டனர். அவ்வளவே. எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் என் சமூக அக்கறையை, நியாயமான கோபத்தை, ஆவேசத்தை தொடர்ந்து கார்ட்டூன்களாக வெளிப்படுத்திக் கொண்டுதான் இருப்பேன்.
ஊடகங்கள் அரசுடன் இணைந்து செயல்படவேண்டும் என முதல்வரும் ஊடகங்கள் மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்படவேண்டும் என பிரதமர் மோடியும் இன்றைய தினத்தந்தி பவள விழாவில் பேசியிருக்கின்றனரே?
ஏற்கெனவே ஊடகங்கள் அரசுக்கு ஜால்ரா அடிக்கும் சூழல்தான் நிலவுகிறது இந்த நிலையில் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் கூறியிருக்கிறார் என்றால் எங்களை எதிர்க்காதீர்கள்; எதிர்த்து எழுதாதீர்கள், கருத்துச் சித்திரம் வெளியிடாதீர் என்றே அதற்கு அர்த்தம். தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது. ஜெயலலிதா இல்லாத நிலையில் ஓபிஎஸ்.ஸும், ஈபிஎஸ்.ஸும் பாஜகவும் இங்கு ஒரு பக்கபலமாக இருக்கின்றனர். இந்த சூழலில் பாஜக குளிர்காய்கிறது.
இவ்வாறு பாலா தனது எதிர்கால பயணத்தின் உறுதியுடன் நம்மிடம் பேசிமுடித்தார்.
நாம் பாலாவிடம் பேசிமுடிக்கும் தருவாயில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆவேசமாக சில கருத்துகளைப் பகிர்ந்தார்.
இப்படி ஓர் அத்துமீறலை நான் பார்த்ததே இல்லை: வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
அவர் பேசுகையில், ''பாலா கைது பின்னணியில் அதிகார துஷ்பிரயோகம் இருக்கிறது. பாலா மீது ஐடி சட்டம் 67, ஐபிசி 501 ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிசி 501 என்பது அவதூறு வழக்கு. இது போலீஸார் நேரடியாக புலன் கொள்ளத்தக்கது அல்ல. இத்தகைய வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
அதேபோல் ஐடி சட்டம் 67, கடந்த 2008-ல் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி இதன் கீழும் போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்ய முடியாது. இத்தகைய நிலையில் ஐடி சட்டம் 67, ஐபிசி 501 ஆகியனவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பது அதிகார துஷ்பிரயேகத்தையே காட்டுகிறது.
இரண்டாவதாக, ஒருவரை கைது செய்வதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. அதனை பின்பற்றியே கைது நடவடிக்கை அமைய வேண்டும். கைது செய்யப்படும் நபரின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அது குறித்து உறவினரிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்து கையொப்பம் பெற வேண்டும். ஆனால், பாலாவின் லேப்டாப், மொபைல் போன் இன்னமும் போலீஸாரிடம்தான் இருக்கின்றன. அதில்தான் வங்கி எண் போன்ற பல முக்கிய ஆவணங்கள் இருக்கின்றன. ஒருவேளை வங்கிக் கணக்கில் ஏதாவது மோசடி என எது நடந்தாலும் அதற்கு போலீஸார்தான் பொறுப்பேற்க வேண்டும்.
மூன்றாவதாக, இன்று காலை நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம். நீதிபதி ஜாமீன் வழங்கிய பின்னர்கூட பாலாவை விடுவிக்க போலீஸுக்கு மனமில்லை. எப்படியாவது அவரை மீண்டும் வேறு வலுவான சட்டப்பிரிவில் கைது செய்துவிட வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். நாங்கள் இல்லாவிட்டால் பாலாவை மீண்டும் வேனில் ஏற்றிச் சென்றிருப்பார்கள். நீதிமன்ற வளாகத்தில் நடந்த தள்ளுமுள்ளை கவனித்த நீதிபதி குறுக்கிட்டு போலீஸாரை எச்சரித்ததால் பாலாவை நாங்கள் மீட்க முடிந்தது. எனது வழக்கறிஞர் பணியில் இப்படி ஓர் அத்துமீறலை நான் பார்த்ததே இல்லை’’ என்றார் வாஞ்சிநாதன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT