Last Updated : 25 Nov, 2017 09:29 AM

 

Published : 25 Nov 2017 09:29 AM
Last Updated : 25 Nov 2017 09:29 AM

பாலி: அழகிய தீவும்.. அன்பான மக்களும்..

டலுக்கு மிக அருகில் கடற்கரையையொட்டி விமானம் மெதுவாக கீழே தரையிறங்கியது. உள்ளிருந்து பார்க்கும்போது கடலில் இறங்குவதுபோலவே இருந்தது. ஆனால், கடலையொட்டி உள்ள ஓடுதளத்தில் விமானம் லாவகமாக இறங்கி தனது வேகத்தைக் குறைத்து கொண்டு நின்றது.

அது தென்பசார் சர்வதேச விமான நிலையம். இந்தோனேசியாவின் அழகிய தீவுகளில் ஒன்றான பாலித் தீவின் தலைநகர்தான் தென்பசார்.

இந்தோனேசியா 33 மாகாணங்களைக் கொண்டது. பெரும்பான்மை மக்களாக முஸ்லிம்கள் இருந்தாலும் இது ஒரு குடியரசு நாடு. மொத்தம் 17 ஆயிரத்துக்கும் மேலான குட்டி குட்டித் தீவுகளை உள்ளடக்கிய நாடு. தலைநகர் ஜாகர்த்தா. இதன் ஒரு மாகாணம்தான் பாலித் தீவு. முழுக்க முழுக்க சுற்றுலா பயணிகளின் வருகைக்காகவே காத்திருக்கும் ஒரு தீவு. இங்கு பெரும்பான்மை மக்கள் இந்துக்கள்தான் (95 சதவீதத்துக்கும் மேல் என்கின்றனர்). பாலிக்கு முழு சுதந்திரம் அளித்திருக்கிறது இந்தோனேசிய அரசு. முஸ்லிம்களும் இந்துக்களும் இங்கு ஒருவர் மதத்தை ஒருவர் மதித்து நடந்துகொள்கின்றனர். பாலி மொழி பேசுகின்றனர்.

விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்ததும், எங்களுக்காகவே காத்திருந்தார் வழிகாட்டி டோனோ. சிரித்த முகத்துடன் வரவேற்றார். அங்கிருந்து உபுடு என்ற இடத்தில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். வழிநெடுகிலும் இயற்கை கொட்டிக் கிடந்தது. காட்டுப் பகுதியில் வாகனம் சென்றது. இருபுறமும் வானுயர்ந்த மரங்கள். வாழை, தென்னை மரங்கள் ஏராளமாக காணப்பட்டன. நேர்த்தியான சாலை. மிகவும் தூய்மையாக இருந்தது. வாகனங்கள் நிறைந்து காணப்பட்டாலும் ஓட்டுநர் ஒலி எழுப்பாமல் வாகனத்தை ஓட்டினார். போக்குவரத்து விதிகளை யாரும் மீறுவதில்லை. வாகனங்களில் புகை இல்லை. காற்று மாசுபாடு இல்லை. தூய்மையான காற்றை சுவாசிக்கும்போதே புத்துணர்ச்சி ஏற்பட்டது.

பாலி முழுவதுமே சுற்றுலா பயணிகளுக்கானது. சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. பாலியின் பாரம்பரிய ஓவியங்கள், கலைப்பொருட்கள் நிறைந்த புரி லுகிசான் அருங்காட்சியகம், உபுட் மன்னர் குடும்பத்தின் அதிகார அரண்மனை, அதன் அருகில் பாரம்பரிய ஆர்ட் மார்க்கெட் (இங்கு கைவினைப் பொருட்கள் உட்பட பலவும் கிடைக்கின்றன.) 186 வகை மரங்கள் கொண்ட குரங்கு காடு, யானை சவாரி, கனன்று கொண்டிருக்கும் எரிமலைகள், மனதைக் கொள்ளை கொள்ளும் அருவிகள், பைக் சாகம், கடலில் ‘ஸ்னார்கலிங்’ எனப்படும் சாகசம் என இன்னும் பல பல அம்சங்கள் நிறைந்துள்ளன. ஏரிகள், புத்த கோயில்கள், மாலையில் சூரியன் அந்தி சாயும் அழகு, பாரம்பரிய பாலி நடனங்கள், வண்ணத்துப்பூச்சி பூங்கா இப்படி பல வகையான இடங்கள் உள்ளன.

பாலியைச் சுற்றி பல குட்டித் தீவுகள் உள்ளன. ஒரு தீவை சுற்றிப் பார்க்க ஒரு நாளாவது வேண்டும். சனூர் கடற்கரையில் இருந்து எங்களை நுசா பெனிடா என்ற குட்டித் தீவுக்கு அழைத்துச் சென்றார்கள். கடலில் 40 நிமிடம் பயணம். படகில் செல்லும்போது கடலின் பிரம்மாண்டம் அதிசயிக்க வைத்தது. தீவு முழுவதும் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். ஏராளமான கடற்கரை ஹோட்டல்கள் உள்ளன.

செமியாங்க் பகுதியில் கடற்கரை ரெசார்ட்கள் உள்ளன. மாலைப் பொழுதில் அங்கு பாலியின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடத்துகின்றனர். அந்த அந்திவேளையில் மேகங்கள் நிறம் மாறிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் பாலி கடற்கரையில் இசை, நடன நிகழ்ச்சியுடன் உணவருந்துவதற்கு ஏராளமான வெளிநாட்டினர் வருகின்றனர்.

பாலி முழுவதும் சுற்றிப்பார்க்க வேண்டுமானால் எத்தனை நாட்கள் தேவைப்படும் என்று தெரியாது, ஆனால், ஒருநாள் முதல் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சுற்றிப் பார்ப்பதற்கேற்ப பல சுற்றுலா திட்டங்களை வடிவமைத்து இங்கு சேவை வழங்குகின்றனர்.

அன்பான மக்கள்

சுற்றுலா பயணிகளுக்கு பாலி மக்கள் தரும் மரியாதை, அன்பு மிகவும் பாராட்டத்தக்கது. இந்தியர்கள் என்றால் இந்து மதத்தைப் பற்றியும், இந்தியாவில் உள்ள வழிபாட்டு முறைகள் பற்றியும் கேட்டறிகிறார்கள். எங்கு சென்றாலும் சிரித்த முகத்துடன் வணக்கம் சொல்கின்றனர். இந்த மாகாணத்திலும் அரசு உண்டு. ஆளுநர் இருக்கிறார். அரசியல் இருக்கிறது. ஆனால் போராட்டங்கள் இல்லை, சாலை மறியல் இல்லை. வேறு தொழில்கள் இல்லாததால் சுற்றுலாவை மட்டுமே நம்பி இருக்கின்றனர். அதனால் போராட்டங்கள் நடத்தினால் தங்களுக்குதான் இழப்பு என்பதை நன்கு உணர்ந்திருக்கின்றனர்.

பாரம்பரிய உடைகளை அணிகிறார்கள். ராமாயணம், மகாபாரதத்தை வெகுவாகப் போற்றுகின்றனர். இந்து மதத்தில் சைவம், வைணவம் இருப்பது போல் இங்கு இல்லை. பாலியில் சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்தி வழிபாடுதான் உள்ளது.

பாலி முழுவதும் சிறியது முதல் பெரியது வரை ஏராளமான கலை அம்சங்கள் நிறைந்த கோயில்கள் உள்ளன. ஆனால் உருவ வழிபாடு இல்லை. விநாயகர் சிலைகளை மட்டும் ஆங்காங்கே வைத்துள்ளனர். முன்னோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஒவ்வொரு வீட்டு முன்பும் அவரவர் சக்திக்கு ஏற்ப முன்னோர்களுக்கு ஒரு தூண் வைத்து வழிபடுகின்றனர்.

இங்கு வீடுகளைக்கூட கோயிலைப் போலவே கட்டி வைத்துள்ளனர். அவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகள். எங்குப் பார்த்தாலும் சிறு சிறு கோயில்கள். பாலியில் தபனான் ரீஜென்சி பகுதியில் கடல் அலைகள் வந்து மோதும் குன்றின் மீது டனா லாட் என்று அழைக்கப்படும் அழகிய சிவன் கோயில் உள்ளது. அதைப் பார்க்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு தினந்தோறும் முக்கால பூஜைகள் எல்லாம் இல்லை. பண்டிகை காலங்களில் மட்டும் பூஜை நடத்தப்படுகிறது. ஆனால் இந்து மதத்தின் மீது அளவு கடந்த பற்றுதலும், பக்தியும் வைத்துள்ளனர்.

மக்களின் மனநிலை, செயல்கள் ஒரு நாட்டின் மதிப்பை உயர்த்துகிறது என்பதற்கு இந்தோனேசியா சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அதனால்தான் மக்களின் நம்பிக்கை பெற்ற அரசு உள்ள நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்துக்கு அடுத்த 2-வது இடத்தை இந்தோனேசியா பிடித்துள்ளது. இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது.

தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமன்றி எல்லோருமே வாழ்நாளில் ஒருமுறையாவது பாலித் தீவைப் பார்க்க வேண்டும். ஏனெனில், அது இந்து சமயத்தின் தீவு, கடவுள்களின் தீவு, அமைதி தீவு, அன்பின் தீவாக அழைக்கப்படுகிறது.

பாலி சுற்றுலாவை, மலிண்டோ விமான நிறுவனமும் இந்தோனேசிய சுற்றுலா துறையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதை சென்னையில் உள்ள ‘சேலஞ்ச் அட்வர்ட்டைசிங்’ நிறுவனம் ஒருங்கிணைத்திருந்தது. தமிழ்நாடு, கேரளா பத்திரிகையாளர்கள், சுற்றுலா இணையதளத்தைச் சேர்ந்தவர்களை பாலிக்கு அழைத்துச் சென்றது மலிண்டோ நிறுவனம்.

மலேசியா – இந்தோனேசியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக லயன் குழுமத்தின் பட்டிக் ஏர் (இந்தோனேசியா) மற்றும் மலிண்டோ ஏர் (மலேசியா) ஆகியவை சென்னையில் இருந்து விமானங்களை இயக்குகின்றன. மற்ற தமிழக நகரங்களுக்கும் இந்நிறுவனங்களின் விமான சேவை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x