Published : 09 Nov 2017 10:26 AM
Last Updated : 09 Nov 2017 10:26 AM
‘சி
ல்லறையில்லையா.. பரவால்ல அடுத்த தடவை வரும்போது குடுங்க!’ அரசுப் பேருந்தில் அதுவும் நகரப் பேருந்தில் இப்படிப் பாந்தமாகப் பேசும் நடத்துநரைப் நாம் பார்த்திருக்கவே மாட்டோம். ஆனால், கோவை நஞ்சுண்டாபுரத்து மக்களைக் கேட்டால், “எங்கண்ணன் காளிமுத்து இருந்தாரு.. ஆனா, அவரு நாலு மாசத்துக்கு முந்தி ரிட்டையராகிட்டாரே..!” என்று வருத்தக் குரலில் சொல்கிறார்கள்!
பணி ஓய்வுபெற்றாலும்..
‘அட.. அவரு கண்ணு தெரியாதவரில்லையா.. அந்த கடைசி சீட்டை அவுருக்கு வுடுங்க சார்!, அப்புறம் ஆத்தா, புள்ளைக்கு எப்ப கண்ணாலம்.. எங்களையெல்லாம் கண்ணாலத்துக்குக் கூப்பிடுவியளா?, ஏங்கண்ணு.. படிக்கட்டுல நின்னு விழுந்துட்டின்னா உங்கப்பனாத்தாளுக்கு யாரு பதில் சொல்றது. உள்ளே தான் எடமிருக்கல்லோ.. வா கண்ணு..!’ பயணிகளிடம் இப்படியெல்லாம் பேசிப் பழகி பேருந்தை வழிநடத்திய கே.காளிமுத்து, அண்மையில் பணி ஓய்வுபெற்று விட்டார். ஆனாலும், தான் வழக்கமாக சந்தித்துப் பேசிய மக்களைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை என கண்கலங்கும் இவர், அவ்வப்போது நஞ்சுண்டாபுரத்துக்குச் சென்று அந்த மக்களை நலம் விசாரிப்பதும் அவர்கள் வீட்டு விசேஷங்களில் பங்கெடுத்துக் கொள்வதுமாய் இருக்கிறார்.
ஊர் மரியாதை
“பதினெட்டு வருஷமா எங்க ரூட்டுல ஓடுற 4-எம் பஸ்ல கண்டக்டரா இருந்தவரு. ஒரு நாளும் எங்கள கடிஞ்சு பேசுனதில்லை. குடும்பத்துல ஒருத்தர் மாதிரித்தான் அன்பா பேசுவாரு. தினமும் அவரைப் பார்த்துப் பேசி சிரிச்சுப் பழகிட்ட எங்களுக்கும், இப்ப அவர் முகத்தப் பார்க்காம கவலையாத்தான் இருக்கு” என்று சொல்லும் நஞ்சுண்டாபுரத்து மக்கள், அண்மையில் காளிமுத்துவை தங்கள் ஊர் மாரியம்மன் கோயில் நோன்புக்கு அழைத்து பூரணகும்ப மரியாதை கொடுத்திருக்கிறார்கள்.
“எங்க ஊருல என்ன விசேஷம் நடந்தாலும் காளிமுதுக்கும் கட்டாயம் அழைப்பிதழ் கொடுக்கிறோம். அவரும் வேலையெல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு ஓடோடி வந்து கலந்துக்கிட்டு எங்களோட சந்தோசமா பேசி நலம் விசாரிச்சிட்டுப் போறார்” என்று நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த நிக் ஜெயராமன் என்பவர் சொல்ல.. நாமும் அந்தக் காளிமுத்துவைச் சந்திக்கப் புறப்பட்டோம்.
தமாஷா பேசுவேன்
பழநி அருகேயுள்ள மிடாப்பட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 1985-ல் பணியில் சேர்ந்த இவர், கடந்த 2012-ம் ஆண்டுக்கான சிறந்த நடத்துநராக தமிழக அரசால் விருதளித்துக் கவுரவிக்கப்பட்டவர். மாற்றுத்திறனாளிகளைப் பக்குவத்துடன் வழிநடத்தியமைக்காக இவருக்கு இந்த விருது. இனி, காளிமுத்து பேசக் கேட்போம்.
“பஸ்ல எப்பவுமே கலகலன்னு தமாஷா பேசுவேன். அது பயணிகளுக்கு ரொம்பப் புடிக்கும். நான் டூட்டில இருக்கேன்னாவே மக்களுக்குக் கொண்டாட்டம்தான். நம்ம கடு, கடுன்னு பேசினா பயணிகளும் கடுப்பா வாங்க. அப்புறம், யாராச்சும் மேல புகார் செய்வாங்க. அதிகாரிங்க நமக்கு மெமோ குடுப்பாங்க, அதுக்கு நம்ம பதில் சொல்லிக்கிட்டு இருக்கணும். இதெல்லாம் தேவையா..? அதுக்கு நம்மளே மென்மையா, பக்குவமா நடந்துக்கிட்டா பிரச்சினையே இருக்காதே!
பைத்தியம் பிடிச்சாப்புல இருக்கு
இப்படி நினைச்சுத்தான் பஸ்ல எந்நேரமும் கலகலப்பா இருக்கப் பழகிக்கிட்டேன். என்னோட வண்டியில, ஆரம்பத்துல பொடிசுகளா வந்த புள்ளைங்க பலபேருக்கு இப்ப கல்யாணமாகிருச்சு. அவங்க குடும்பத்தோட வண்டியில வந்ததையும் பார்த்துட்டேன். அதனால, அந்த ஊரு மக்களுக்கு என் மேல தனிப்பட்ட பாசம். அந்த ஊருக்காரங்க பலபேர்க்கிட்ட என்னோட செல் நம்பர் இருக்கும். காலேஜ் புள்ளைங்க, பஸ் வர லேட் ஆச்சுன்னா போன் அடிச்சுக் கேப்பாங்க. அவங்களுக்கு, ‘தோ, வந்துட்டோம்மா’ன்னு பொறுமையா பதில் சொல்லுவேன்.
இப்டியெல்லாம் பழகிப் பேசி தினமும் அந்த ஊர் சனங்களைப் பார்த்துட்டே இருந்துட்டு, இப்ப அவங்கள பார்க்காம இருக்கிறது பைத்தியம் பிடிச்சாப்புல இருக்கு. அதனால, அடிக்கடி அந்த ஊருக்குள்ளே போயி முடிஞ்சவரைக்கும் எல்லோரையும் பார்த்துட்டு வர்றேன்!’’ என்று சொல்லிமுடித்தபோது கண்கலங்கிப் போயிருந்தார் காளிமுத்து!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT