Last Updated : 25 Oct, 2017 08:07 PM

 

Published : 25 Oct 2017 08:07 PM
Last Updated : 25 Oct 2017 08:07 PM

வடகிழக்கு பருவமழையால் சென்னைக்கு நல்ல மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் சென்னைக்கு நல்ல மழை வாய்ப்பு இருக்கிறது எனக் கூறுகிறார் வானிலை பதிவர் 'தமிழ்நாடு வெதர்மேன்' என்றழைக்கப்படும் பிரதீப் ஜான்.

வடகிழக்கு பருவமழை நாளை (அக்.26) தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் மக்கள் நம்பகத்தன்மையைப் பெற்றுள்ள தமிழ்நாடு வெதர்மேனிடம் பருவமழை தொடர்பாக சில கேள்விகளை 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பாக முன்வைத்தோம்.

நம்மிடம் அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள்:

வடகிழக்கு பருவமழை.. எளிமையான வார்த்தைகளில் சொல்லுங்கள்?

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என இரண்டு மழைக்காலங்கள் உள்ளன. இந்தியாவுக்குத் தென்மேற்குப் பகுதியிலிருந்து வீசும்காற்று, தென்மேற்கு பருவமழையைக் கொண்டுவருகிறது (south west monsoon), வங்காள விரிகுடாப் பகுதியிலிருந்து வீசும் காற்று வடகிழக்குப் பருவமழையைக் கொண்டு வருகிறது. இந்திய தீபகற்பத்தின் தென் பகுதிக்கான பெரும்பான்மை மழை இந்த பருவ பெயர்ச்சிக் காலத்தில்தான் பெறப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஓராண்டுக்கான சராசரி மழையளவில் சுமார் 48% மழையளவு இந்த பருவத்தில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, வடகிழக்கு பருவமழை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த வடகிழக்கு பருவமழை முன்பெல்லாம் 'விடைபெறும் தென்மேற்கு பருவமழை' (Retreating southwest Monsoon Season) என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

இந்த வடகிழக்கு பருவமழை தமிழகத்துக்கு எப்படி இருக்கும்?

தென்னிந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவக் காற்று முற்றிலுமாக விலகிவிட்டதால் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க மிக அதிகமான வாய்ப்பிருக்கிறது. 15 நாட்களுக்கு முன்னர்வரை வடகிழக்கு பருவமழை நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை. ஆனால், இப்போதைய சூழலைப் பார்க்கும்போது இந்த ஆண்டு தமிழகத்துக்கு வடகிழக்கு பருவமழையால் நல்ல ஆதாயம் இருக்கிறது.

இந்த மாதக்கடைசியில் வடகிழக்கு பருவமழை சூடுபிடிக்கும். முதல் 15-ல் இருந்து 20 நாட்கள் பெய்யும் மழைதான் முக்கியமானதாக அமையப் போகிறது. வடகிழக்கு பருவமழையின் சராசரியைத் தாண்டிகூட அதிகமான அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

அடுத்த 15 முதல் 20 நாட்களுக்கு கடலோரப் பகுதிகள். தென் தமிழகம், குறிப்பாக குன்னூர் பகுதி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமர், நீலகிரி, கடலூர், டெல்டா மாவட்டங்களிலும் திருவள்ளூரிலும் உள்மாவட்டங்களில் நல்ல மழை வாய்ப்பு இருக்கிறது.

சென்னைக்கு மழை வாய்ப்பு எப்படி?

சென்னைக்கு நல்ல மழை வாய்ப்பு இருக்கிறது. இன்றைய தலையாயப் பிரச்சினையான தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்கும் அளவுக்கு சென்னையில் நல்ல மழை வாய்ப்பு இருக்கிறது. வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் நல்ல மழை பெய்ய சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

அப்படி என்றால் கடந்த 2016 வடகிழக்கு பருவமழையை ஒப்பிட்டால் இந்த ஆண்டு வளமானதுதானே?

நிச்சயமாக. வடகிழக்கு பருவமழையால் தமிழகத்துக்கு 438 மி.மீ. மழை கிடைக்க வேண்டும். கடந்த ஆண்டு 61% குறைவான அளவே மழை பெய்தது. இது 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த அளவிலான மழைப்பதிவு. சென்னையில் 2003-க்கு பின்னர் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை மிக மோசமானதாக இருந்தது. இந்த ஆண்டு நிலைமை சாதகமாக இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

இந்த ஆண்டும் லாநினா பாதிப்பு இருக்கிறதா?

வெப்பநிலை ஏற்றத்தாழ்வான லாநினாவின் தாக்கம் இந்த ஆண்டு மிதமாகவே இருக்கிறது. அதனால் கடந்த 2015 டிசம்பர் பெருமழை போல் சென்னைக்கு பெரும் பாதிப்பு இருக்காது. சென்னையில் காலை, மாலை நேரங்களிலும், மற்ற உள்மாவட்டங்களில் மதிய வேளைகளிலும் மாலை நேரங்களிலும் மழை பெய்யும்.

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பிருக்கிறதா?

அப்படி பொத்தாம் பொதுவாக மக்களை அச்சுறுத்தும் வகையில் புயல் உருவாகும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், வடகிழக்கு பருவமழை என்பது காற்றழுத்த தாழ்வுகள் சார்ந்ததே என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், புயல் உருவாகலாம். ஆனால் அதன் போக்கு எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது.

மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலை, தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல், சூப்பர் சைக்ளோன் என்ற வரிசையில்தான் மாற்றங்கள் நிகழ்கின்றன, எனவே எடுத்த எடுப்பிலேயே புயல் பற்றிய பேச்சு தேவையற்றது.

2015 சென்னை பெருமழைக்குப் பின்னர் தமிழக மக்கள் மத்தியில் வானிலை தொடர்பான விழிப்புணர்வு எப்படி இருக்கிறது?

பாராட்டத்தக்க அளவு வளர்ந்திருக்கிறது. 2015 டிசம்பரில் 200 செ.மீ., மழை பெய்யப்போகிறது என்ற வதந்தியைக்கூட நம்பும் அளவிலேயே மக்கள் மனநிலை இருந்தது. ஆனால், இன்று மக்கள் மத்தியில் அப்படியான வதந்திகளை அவ்வளவு எளிதாகப் பரப்பிவிட முடியாது. வானிலை தொடர்பான புரிதல் மக்களுக்கு அதிகமாகவே உள்ளது. அப்படியான தகவல் தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தைத் தொடர்பு கொண்டோ இல்லை என்னைப் போன்ற பதிவர்களை தொடர்பு கொண்டோ தெளிவுபெறும் அளவுக்கு விழிப்புடன் இருக்கின்றனர்.

வாட்ஸ் அப் வதந்திகள் குறித்து?

மிகவும் வேதனையாக இருக்கிறது. சில நேரங்களில் சமூக விரோதிகள் மீது வரும் கோபம் இத்தகைய வதந்திகளைப் பரப்புபவர்கள் மீதும் வருகிறது. சென்னையை நோக்கி புயல் வருகிறது என அண்மையில் வெளியான தகவலைப் பல முன்னணி ஊடகங்களும் பதிவு செய்தன. புயல் எச்சரிக்கை போன்ற தகவலை பொதுமக்களும், ஊடகங்களும் மிகக் கவனமாக கையாள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் ஏன் விவசாயிகளுக்கு என வானிலை முன்னறிவிப்புகளையும் பகிரக் கூடாது?

பகிரலாம்தான். ஆனால், என அலுவலக பணிக்குப் பின்னர் இந்த அளவிலான மழை கணிப்புகளையே செய்ய நேரம் இருக்கிறது. அப்படி, பிரத்யேகமாக விவசாயிகளுக்கென முன்னறிவிப்புகளை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாமல், இப்போது நிறைய செயலிகள் வந்துள்ளன. அவற்றில் நம்பகமான முன்னறிவிப்புகளை பிரத்யேகமாக வழங்கும் செயலிகள் பல இருக்கின்றன.

மக்களுக்கு ஏதாவது ஆலோசனை சொல்ல விரும்புகிறீர்களா?

வடகிழக்கு பருவமழையை ரசித்து மகிழுங்கள். வழக்கம்போல் இந்த பருவமழை காலத்திலும் ஒன்றிரண்டு நாட்கள் கனமழை பெய்யலாம். அன்றுமட்டும் சற்று கவனத்துடன் பணிகளைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். தினமும் குடை வைத்துக்கொள்ளுங்கள். மழை தொடர்பாக நம்பகமான தகவல்களை சமூக அக்கறையுடன் பகிருங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x