Published : 09 Oct 2017 02:24 PM
Last Updated : 09 Oct 2017 02:24 PM

யானைகளின் வருகை 52: கானுயிர்களுக்கு மரண சாசனம் எழுதும் கல்லாறு!

பிறக்கும்போதே இறந்திருந்தது அந்தக் குட்டி. அதை தும்பிக்கையில் சுமந்து கொண்டே அலைந்தது தாய் யானை. அதன் சோகத்தை பகிர்ந்து கொள்வது போல் அதற்கு பாதுகாப்பு அளித்தபடி கூடவே இன்னொரு ஆண் யானை. இது இரவு பகல் பாராமல் ஓயாமல் நடக்க ஒரு கட்டத்தில் குட்டியை தார் சாலையில் போட்டுவிட்டு அங்கேயே நின்று விட்டது பெரிய யானைகள். இதனால் மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியே அல்லோலப்பட்டது. ஊட்டி குன்னூர் போக வேண்டிய வாகனங்கள் செல்ல முடியவில்லை. விஷயம் தெரிந்து வனத்துறையினர் வந்து ஜோடி பெரிய யானைகளை விரட்டி விட்டு இறந்து கிடக்கும் குட்டியை மீட்டு புதைக்க முயற்சிக்க, அதற்கு இடம் கொடுக்கவேயில்லை யானைகள்.

இறுதியில் குட்டியின் உடலைத் தூக்கிக் கொண்டே அங்கிருந்த பாலத்தின் கீழாக நடக்க ஆரம்பித்தன. பொதுவாக பிரசவத்தின்போது இறந்து போகும் குட்டி யானையை தாய் யானை தூக்கிக் கொண்டே திரியும். காடுகளில் உருட்டிக் கொண்டும் அலையும். ஆண் யானையும் கூடவே செல்லும். ஒரு கட்டத்தில் குட்டி நாற்றமெடுக்கத் தொடங்கியதும், எங்காவது குழி தென்பட்டால் அதில் குட்டியின் உடலைக் கிடத்தி மண்போட்டு மூடிவிடும். இந்த யானைகளைப் பொறுத்தவரை அப்படியில்லாமல் நேரே பிரதான சாலைக்கே வந்துவிட்டன. சாலையில் குட்டியை வைப்பதும், போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைப்பதும், பிறகு குட்டியை தூக்கிச் செல்வதும் தொடர்ந்து நடந்தது. இதனால் இந்த பகுதியில் நான்கைந்து நாட்கள் வாகன ஓட்டிகள் பீதியுடனே செல்ல வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் யானைகள் காட்டுக்குள் விட்டுவிட்டு போய்விட அதை எடுத்து புதைத்து ஆசுவாசப்பட்டனர் வனத்துறையினர்.

பிள்ளைப் பாசத்தில் மனிதர்களுக்கு சளைத்ததல்ல யானைகள் என்பதை பல சம்பவங்கள் மூலம் பார்த்திருக்கிறோம். தூவைப்பதி மண்ணுக்காரன் தோட்டத்தில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டிகளை காப்பாற்ற ஓர் யானைக்கூட்டமே போராடிய போராட்டம், முதுமலையில் காந்தி குட்டி யானை வளர்த்தியவர்களை பிரிந்து செல்ல முடியாமல் காட்டுக்குள் விடப்பட்டும் வளர்த்தினவர்களை நோக்கியே பிளிறிக் கொண்டு ஓடி வந்த காட்சி. அதையெல்லாம் மிஞ்சும் வகையில் கடந்த 2003 ஆம் ஆண்டில் இந்த சம்பவம் மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் நடந்தது. இதே கல்லாறு பகுதியில் மற்றொரு ஒரு சம்பவம்.

இங்கே உள்ள ஒரு தனியார் நிலத்தில் ஒரு யானை மின்வேலி பட்டு அதிர்ந்து ஓடி பக்கத்தில் இருந்த அகழியில் சிக்கி உயிரை விட்டது. அந்த யானை பிளிறலையும், அடுத்த நாள் அது இறந்து கிடந்ததையும் பார்த்த அந்த தனியார் நிலத்துக்காரர் தம் ஆட்களை விட்டு பொக்லைன் இயந்திரம் கொண்டு யானையை அங்கிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு போய் சேர்க்க வைத்தார். பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அவர்களும் வந்தார்கள். யானையை போஸ்ட் மார்ட்டம் செய்தார்கள். யானை அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. யானை நோய்வாய்ப்பட்டு இறந்ததாக மருத்துவ அறிக்கை வர பிரச்சனை முடிக்கப்பட்டது.

யானைகள் குட்டி போடுவதும், குட்டியை கூட்டிக் கொண்டு திரிவதும், அது இறந்தால் அதையும் தூக்கிக் கொண்டு அலைவதுமான ஆச்சர்ய சங்கதிகள் நடக்கும் அளவு இந்த கல்லாறு பகுதி காட்டு யானைகளின் முக்கிய வலசைப்பகுதியாக (கல்லாறு கெத்தனாரி பீட்) விளங்குகிறது. அதே சமயம் இந்த இடத்தில்தான் யானைகள் மின்வேலிகள் அல்லது அகழியில் சிக்கி உயிரிழப்பதும், அது நோய் மரண மருத்துவ அறிக்கையாக வந்து முடித்து வைக்கப்படுவதும் சர்வ சகஜமாக உள்ளது என்கிறார்கள் கல்லாறு பகுதியில் காட்டுயானைகளின் வருகையை கண்காணிக்கும்- ஒவ்வொரு முறை நடக்கும் காட்டு யானைகள் மரணத்தை கவனிக்கும் இயற்கை விரும்பிகள்.

அந்த அளவுக்கு இங்கே கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் கடந்த 20 ஆண்டுகளில் நடந்துள்ளது. எப்படி? அதையும் அனுபவத்திலிருந்தே பார்ப்போம்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி செல்ல மேட்டுப்பாளையம் சாலையில் பயணிக்கிறேன். அப்போதுதான் திருச்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர் அங்கே ஒரு ஆசியாவிலேயே பெரிய நீர் விளையாட்டு தீம் பார்க் ஒன்றை அமைத்துக் கொண்டிருந்தார். திரும்பின பக்கமெல்லாம் முழுக்க பாக்குத் தோப்புகள். இதை கடந்து ஒரு கிலோமீட்டர் சென்றால் உலகப் புகழ் பெற்ற ஆன்மீக குருவின் பெயரால் அமைந்துள்ள ஒரு சர்வதேச பள்ளி.

அந்த பள்ளிக்கூடமும் அந்தக் காலகட்டத்தில் இருக்கிற இடம் தெரியாமல் அடர் காட்டுக்குள் முகப்பு மட்டுமே தெரியும் வண்ணம் அமைந்திருந்தது. அதையொட்டியே ஊட்டி மலைரயில் செல்வதற்கான இருப்புப் பாதை. இதை விட்டால் முதல் கொண்டை ஊசி வளைவு தொடங்கும் பகுதியில் தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை பராமரிப்பில் இயங்கும் கல்லாறு பழப்பண்ணை. இதை விட்டால் அங்கே இருளர் இனப் பழங்குடிகள் குடியிருப்பு ஒன்று சிதிலமடைந்த கூரைகள். கட்டிடங்கள். அவ்வளவுதான். அதற்கு பிறகு நான்கு கிலோமீட்டர் மலைப்பாதையில் பயணித்துத்தான் மரப்பாலம் பகுதிகளில் குடிசைகளால் ஆன பழக்கடைகளை, டீ, டிபன் கடைகளை பார்க்க முடியும்.

அதே சாலையில் இப்போது பயணம் செய்கிறேன். மேட்டுப்பாளையம் தொடங்கி கோத்தகிரி சாலை, ஊட்டி சாலை பிரியும் இடத்திலிருந்தே நகர மய ஜொலிப்பை காண முடிகிறது. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுதான் நீர் விளையாட்டு கேளிக்கை பூங்கா. ஏதோ வெளிநாட்டிற்கு வந்து இறங்கின மாதிரியான சூழல் தெரிகிறது. அந்த நீர் விளையாட்டு பூங்காவிற்கு முன்னும் பின்னும் ஏராளமான தங்கும் விடுதிகள்.

அதுவும் எப்படி?

உதாரணத்திற்கு இந்த நீர் விளையாட்டு பூங்காவின் பெயரில் இதையொட்டி அமைந்திருக்கும் ரிசார்ட் (விடுதியை) எடுத்துக் கொள்ளுங்கள். சாலையோரத்தில் முகப்பு பகுதி ஆரம்பித்து விடுகிறது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அழகிய சாலை. இருமருங்கும் சோலை மயமாக காட்சியளிக்கிறது. அதைத் தாண்டி சென்றால் அழகழகாய் ஜொலிக்கின்றன விடுதியின் அறைகள். விளையாட்டுத்திடல், குழந்தைகள் பூங்கா இத்தியாதிகள்.

இதற்கப்பால் ஒரு பெரிய சுற்றுச்சுவர். அதை அடுத்து ஒரு நீண்டதொரு உயரமான சுற்றுச்சுவர். அதையும் அடுத்து சூரிய மின் வேலி. அதற்கும் அப்பால் பெரியதாக வெட்டப்பட்ட அகலி. அதையும் அடுத்து ஒரு முழுக்க காடு. அங்கே சிறிதும் பெரிதுமான வனக்குட்டைகள். அதில் நீர் பருக வரும் யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள். அதை தன் விடுதிக்கு வருபவர்கள் பார்த்துக் களிக்க விடுதிக்கும், சுற்றுச்சுவருக்கும் இடையே அமைக்கப் பட்டிருக்கும் வாட்ச் டவர்.

இந்த ஒரு ரிசார்ட் போலவே இந்த சுற்றுப்பகுதியில் 20 க்கும் மேற்பட்ட விடுதிகளைக் காண முடிகிறது. அது அப்படியே இங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச பள்ளி பகுதியிலும் தொடர்கிறது. இந்த விடுதிகள் எல்லாமே 10 முதல் 20 ஏக்கர் வரையிலான பரப்பளவிலேயே காடுகளுக்குள் விரிந்து கிடக்கின்றன. இதன் நடுநாயகமாகவே நீர் விளையாட்டு பூங்கா 75 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கிறது. நீர் விளையாட்டில் பொழுது போக்க உலகில் எத்தனை விளையாட்டுகள் உண்டோ, அத்தனையும் இந்த பூங்காவில் கொட்டிக் கிடக்கிறது. 50க்கும் மேற்பட்ட கிளர்ச்சியூட்டும், சாகசம் மிக்க, வேடிக்கை விளையாட்டுகளை இப்பூங்கா கொண்டுள்ளது. இங்கு அதிகப் புகழ் பெற்ற சவாரிகள் காட்டாற்று சவாரி மற்றும் மலையுலா சவாரி ஆகியன. உதாரணமாக 42 அடி உயரத்தில் இருந்து நீரில் சருக்கி விளையாடும் வகையில் 6அடி அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'பேமிலி ரேப்ட் ஸ்லைடு!' என்ற விளையாட்டு. ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு பேர் ஒன்றாக பங்கேற்று விளையாடி மகிழும் வகையில் இது ஏற்படுத்தபட்டுள்ளது. இதற்கென அனைத்து பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது,

இதேபோல் மனிதர்களுக்கு இயல்பாக உள்ள அச்ச உணர்வை போக்கி தன்னம்பிக்கை அளிக்கும் ஹாட் ஏர் பலூன் பறக்கும் நிகழ்ச்சியும் அவ்வப்போது நடை பெறுகிறது. 100 அடி உயரம் வரை வானில் பறக்கும் வகையில் இந்த விளையாட்டு நடத்தப்படுகிறது. அனுபவமுள்ள விமானப்படை அதிகாரிகளை கொண்டு இந்த விளையாட்டு நடத்தப்படுவதும் அடிக்கடி நடக்கிறது.

இதன் வளாகத்தினுள் அமைந்துள்ள தங்கும் விடுதியை இரவு தங்க விரும்புபவர்கள் உபயோகித்துக் கொள்ளலாம். பலர் இந்தப் பூங்காவில் தங்குவதை விரும்புகின்றனர். காரணம் அவர்கள் இங்குள்ள சவாரிகளில் விளையடுவதோடு, சுற்றுப்பகுதிகளில் உள்ள இதன் கண்கவர் சூழல்களை ரசிக்கவும் விரும்புகின்றனர். இந்தப்பூங்கா நீலகிரி மலையடிவாரத்தில் இருப்பதால். நீலகிரி மலையழகும், சிலிர்த்து வீசும் கூதல் காற்றும் அழகான காட்சியமைப்பும் இங்கு தங்குபவர்களை குதூகலப்படுத்தி விடுகிறது. இது எல்லாம் இங்கு தங்கும் மனிதர்களுக்கு சுகபோகம். அதுவே இங்கே சுற்றித்திரியும் வனவிலங்குகளுக்கும், வசிக்கும் மக்களுக்கும் கூட மரண சாசனமாகியுள்ளது.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x