Published : 31 Oct 2017 10:21 AM
Last Updated : 31 Oct 2017 10:21 AM

‘விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை’: இதுதான் இவர்களின் இல்லற ரகசியம்!

‘பு

துக்கோட்டையில் வசிக்கும் சண்முகம் - சரோஜா தம்பதியர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். இன்றைய தலைமுறைக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்கும் அவர்களின் அனுபவத்தைக் கேட்டு எழுதலாமே!’ திருச்சியிலிருந்து சுசிலா என்பவர், ‘தி இந்து - இங்கே.. இவர்கள்.. இப்படி!’ பகுதிக்கான அலைபேசி (044 42890013) எண்ணில் இப்படிப் பேசியிருந்தார்.

புதுக்கோட்டை காமராஜபுரம் ஆசிரியர் காலனியில் சண்முகம் - சரோஜா தம்பதியரின் வீட்டைக் கண்டு பிடித்தோம். சின்னதாய் ஒரு குடிசை வீடு அது. சண்முகத்துக்கு இப்போது வயது 78. அவரை விட இரண்டு வயது இளையவர் சரோஜா. எழுபதைக் கடந் தாலும் இருவரும் இன்னமும் இளமை மாறாக் காதலுடன் வாழ்க்கையை ரசிக் கிறார்கள்.

ஏழையைக் காதலித்து..

ஏழையைக் காதலித்து.. அதற்காக வீட்டுச் சிறையில் அடைபட்டு.. அங்கிருந்து தப்பி ஓடிவந்து சில காலம் தலைமறைவாக வாழ்ந்து.. பிறகு, ஒரு வழியாய் காதலனை கைபிடித்தது என சினிமாவை விஞ்சும் தங்களது காதல் சரித்திரத்தை விவரித்தார் சரோஜா.

“புதுக்கோட்டையில் செல்வாக்கான குடும்பம் எங்களுடையது. சின்ன வயசுல நான் சினிமா நடிகையாட்டம் கொஞ்சம் அழகா இருப்பேன். பள்ளிக்கூடம் போறப்ப என்னைய பார்க்கிறதுக்காவே பசங்க காத்துக் கிடப்பாங்க. அது எனக்கு கர்வமா இருந்தாலும் அவங்கள்ல யாரும் என்னை ஈர்க்கவில்லை. ஆனா, என்னைத் திரும்பிக்கூட பார்க்காம இருந்த இவர் மீது அப்படியொரு காதல்!

காதலுக்கு தூது அனுப்பினேன்

அவ்வளவாக படிக்காத இவர், அப்ப சுமை தூக்கும் தொழிலாளி. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு உத்தரவாத மில்லாத இவர் மீது எனக்கு எப்படித்தான் காதல் வந்தது என்றே தெரியவில்லை. பக்கத்து வீட்டில் வசித்த இவரை நான் விழுந்து விழுந்து சைட் அடிப்பேன்; கூப்பிட்டு வைத்து வம்பிழுப்பேன். ஆனால் இவரு, என்னை திரும்பிக்கூட பார்க்கமாட்டார். இவரது சகோதரியையே காதலுக்கு தூது அனுப்பினேன். அப்படியும் சம்மதிக்கவில்லை. ஒருநாள், நேராவே ஆளை மடக்கி, ‘என்னை கல்யாணம் செஞ்சுக்க’ என்றேன். அப்பவும், ‘உங்களுக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது. நீங்க பேசாம, வீட்டுல பார்க்கிற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருங்க’ன்னாரு.

அத்தோட நிக்காம, இவரே எனக்கு தீவிரமா மாப்பிள்ளையும் பார்த்தார். ஆனா நான், வந்த மாப்பிள்ளைகளை எல்லாம் தட்டிக் கழிச்சேன். இதுக்குக் காரணம் பக்கத்து வீட்டு சண்முகம் தான்னு தெரிஞ்சுக்கிட்ட என் பெற்றோர், ஆசிரியர் கல்வி படிக்கிறதுக்காக என்னைய தஞ்சாவூருக்கு அனுப்பி வெச்சாங்க. அதனால, இவரு மேல இன்னும் காதல் அதிகமாச்சு. ‘சண்முகத்தைத் தவிர வேற யாரையும் நான் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்’னு பிடிவாதமா சொல்லிட்டேன்.

என்னை வெட்டிப் பொலி போட

சாதி, அந்தஸ்து எல்லாம் பார்த்த எனது பெற்றோர், என்னை திருச்சியில் எங்க மாமா வீட்டுல சிறை வெச்சாங்க. குடிகாரரான எனது உறவுக்காரர் ஒருத் தருக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்கவும் பிளான் போட்டாங்க. இது தெரிஞ்சதால, ஒரு நாள் நடுராத்திரியில அந்த வீட்லருந்து தப்பிச்சு புதுக் கோட்டையில இவரோட மாமா வீட்டுக்குப் போனேன். ‘நான் இனிமே இங்கதான் இருப்பேன். என்னைய போகச் சொன்னீங்கன்னா இங்கேயே செத்துருவேன்’னு சொன்னேன். அதுக்கப்புறம்தான் இவரு என்னைய கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சாரு.

இதுக்கு நடுவுல, என்னை வெட்டிப் பொலி போடணும்னு எங்க வீட்டு ஆளுங்க வெறியா துரத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதனால வாரக் கணக்குல தலை மறைவா இருக்க வேண்டியதாப் போச்சு. இனி சமாளிக்கவே முடியாதுன்னதும்தான் இவரு என் கழுத்துல தாலி கட்டுனாரு. ஒரே வாரத்துல எனக்கு புதுக்கோட்டையில டீச்சர் வேலை கிடைச்சுது. இவரும் டிரைவிங் கத்துக்கிட்டு லாரி ஓட்ட ஆரம்பிச்சாரு.

இன்னமும் காதல் இருக்கு

குடும்ப வாழ்க்கை சந்தோசமா நகர்ந்துச்சு. அதுக்கு சாட்சியா 7 பெண், 3 ஆண் என பத்துக் பிள்ளைகளுக்கு தாயும் ஆனேன். எல்லாரையும் அவங்க விரும்புன படிப்பைப் படிக்க வெச்சோம். பிள்ளைங்க காதலிச்சா அதை எதிர்க்கக்கூடாதுன்னு நாங்க இருவருமே தீர்மானமா இருந்தோம். ஆனா, ஒரு பிள்ளையத் தவிர மத்த எல்லாரும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கிற பொறுப்பை எங்கக்கிட்ட விட்டுட்டாங்க.

பிள்ளைகளுக்கு நாங்க செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் சரியாச் செஞ்சுட்டு இப்ப நாங்க ரெண்டு பேரும் தனிக்குடித்தனம் நடத்துறோம். இன்னமும் எங்களுக்குள்ள காதல் இருக்கு. ஆனா, இந்தக் காலத் துல காதல் உண்மையான அன்பு இல்லாம பாசாங்குத் தனமாக வர்றதால காதல் திருமணங்களும் தோத்துடுது” என்றார் சரோஜா.

பேசாமல் இருந்ததில்லை

தொடர்ந்து பேசிய சண்முகம், “நான் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவன். சரோஜாவுக்கு கடவுள் பக்தி அதிகம். இருந்தாலும் இந்த விஷயத்துல எங்க ரெண்டு பேருக்குள்ள எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. பகுத்தறிவாளர் கூட்டங்களுக்கு சரோஜாவும் வருவார். அதுபோல, இவங்க கோயிலுக்குப் போறப்ப நானும் கூடப் போவேன்; கோயிலுக்கு வெளியில நின்னு நடக்குறத கவனிப்பேன். திருமணமான இத்தனை வருசத்துல நாங்க ரெண்டு பேரும் ஒரு நாள்கூட சண்டை போட்டுட்டு பேசாம இருந்ததில்லை. சரோஜா என்னைய தனியா விட்டுட்டு ஒருநாள்கூட சொந்தக்காரங்க வீட்ல தங்கியதில்லை” என்றார்.

புதுமண தம்பதிகள் பலரும் வீடுதேடி வந்து இவர்களிடம் ஆசிபெற்றுச் செல்கின்றனர். அவர்களுக்கெல்லாம் இனிய இல்லறத்தின் ரகசியமாக இவர்கள் சொல்லி அனுப்புவது, ‘விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை’ என்ற தாங்கள் கடைபிடிக்கும் அந்த தாரக மந்திரத்தைத் தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x