Last Updated : 23 Oct, 2017 05:17 PM

 

Published : 23 Oct 2017 05:17 PM
Last Updated : 23 Oct 2017 05:17 PM

#happyplatechennai - ஐயமிட்டு உண் பாத்திமாவின் புதிய முயற்சி: அக்.28-ல் காஞ்சியில் முகாம்

நடப்பது அக்டோபர் மாதம். சர்வதேச உணவு தினத்தைக் கொண்டாடும் இதே மாதத்தில்தான் உலக அளவில் வளரும் நாடுகளின் பட்டினி அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் மொத்தம் உள்ள 119 நாடுகளில் இந்தியா 100-வது இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 97-வது இடத்தில் இருந்து தற்போது மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

ஒருபுறம் பட்டினி, மறுபுறம் வீணாகும் உணவு. சர்வதேச அளவில் உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 20 கோடிக்கும் மேலானோர் இரவு உணவு இல்லாமலேயே உறங்கச் செல்கின்றனர். கிட்டத்தட்ட 7000 பேர் பட்டினியால் பலியாகின்றனர். இப்படியாக பசிக்கும் உணவு வீணாவதற்கும் உள்ள இடைவெளியை சிறிதளவேனும் நிரப்பக்கூடும் என்ற எண்ணத்தில்தான் 'ஐயமிட்டு உண்' என்ற சமுதாய குளிர்சாதனப் பெட்டியை நிறுவியிருக்கிறார் டாக்டர் இசா பாத்திமா.

'அறம் செய்ய விரும்பு' வரிசையில் 'ஐயமிட்டு உண்' என்று பள்ளியில் நாமெல்லாம் சேர்ந்திசைத்ததோடு நின்றுவிட்டோம். ஆனால், பல் மருத்துவ நிபுணரான இசா பாத்திமா ஜாஸ்மின் அதை செயல்படுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

'ஐயமிட்டு உண்' சமுதாய குளிர்சாதனப் பெட்டி குறித்து ஏற்கெனவே நிறைய தகவல்கள் வெளியாகிவிட்ட நிலையில் தற்போது தான் துவங்கியிருக்கும் #happyplatechennai  குறித்து 'தி இந்து' தமிழ் இணையதளத்துடன் சில தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

அது என்ன #happyplatechennai?

சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு இந்த ஹேஷ்டேகை தொடங்கியுள்ளேன். நீங்கள் சாப்பிடும்போது உணவை வீணாக்காமல் சாப்பிடுங்கள். பின்னர் அந்த காலி தட்டை ஒரு புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றுங்கள். இதுமாதிரியாக பதிவாகும் ஒவ்வொரு காலி தட்டுக்கும் ஒரு ஏழைக் குடும்பத்துக்கு சிறிய அளவில் மளிகைப் பொருளை வாங்கித் தர திட்டமிட்டுள்ளேன்.

இதற்காக வரும் சனிக்கிழமை (28 அக்டோபர்) காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருளர் சமுதாயத்தினர் வசிக்கும் 10 கிராமங்களைத் தேர்வு செய்துள்ளேன். அங்கே உள்ள பஞ்சந்தீர்த்தி, குன்னப்பட்டு, திருக்கழுகுன்றம், காயாறு, பாண்டூர், ஆலத்தூர், ஹனுமந்தபுரம், நாவலூர், திருநிலை ஆகிய கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள வறுமைகோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு இந்த உதவியைச் செய்ய இருக்கிறோம்.

இதுவரை எந்த அமைப்பினராலும் உதவி பெறாத மக்களாக இருக்க வேண்டும் எனத் தேடினோம். அப்போதுதான் எங்களுக்கு இந்த கிராமங்களில் வாழும் இருளர் சமுதாயத்தினரைப் பற்றித் தெரியவந்தது. அதனடிப்படையில் இந்தக் கிராமங்களைத் தேர்வு செய்து சர்வதேச உணவு தினத்தைக் கடைபிடிக்கும் வகையில் வரும் சனிக்கிழமை உணவுப் பொருள் வழங்குகிறோம்.

 

(உதவிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமம்)

'ஐயமிட்டு உண்' தொடங்க உங்களுக்கு எது உந்துதலாக இருந்தது?

அன்றாடம் வீட்டில் வீணாகும் உணவே என்னை இதை செய்யத் தூண்டியது. நாம் அனைவரும் வீட்டில் மிச்சமாகும் உணவை குளிர்சாதனப் பெட்டியில் வைப்போம். ஆனால், பெரும்பாலும் அதை மறுநாள் பயன்படுத்துவது இல்லை. மூன்றாவது நாள் அதை குப்பையில் வீசி விடுகிறோம். ஒருநாள் அதை சேமித்துவைத்துவிட்டு தூக்கி எரிந்துவிடுவதால் தேவையற்றதையே எறிந்ததாக நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். ஆனால், அன்றே எறிந்தாலும் இல்லை இரண்டு நாட்கள் கழித்து எறிந்தாலும் சரி. அது உணவை வீணடிப்பதுதான்.

இந்தியா போன்ற நாட்டில் பட்டினி மரணங்கள் சர்வ சாதாரணமாக நடக்கும் வேளையில் இத்தகைய செயலை சிறிய அளவிலாவது தடுக்க வேண்டும் என நினைத்தேன். 'ஐயமிட்டு உண்' சமுதாய குளிர்சாதனப் பெட்டி சேவையைத் தொடங்கினேன்.

'ஐயமிட்டு உண்' - இந்தப் பெயரை எப்படித் தேர்தெடுத்தீர்கள்?

யாசிப்பவர்களுக்கு கொடுத்துவிட்டு பிறகு உண் என்பதே நமக்கு ஓதப்பட்ட போதனை. இல்லாதோர்க்கு உணவு வழங்கும் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க இதைவிட நல்ல பெயர் இருக்க முடியும் என எனக்குத் தோன்றவில்லை. அதன் காரணமாகவே இந்தப் பெயரைச் சூட்டினேன்.

இதற்கான இடத் தேர்வு, செலவு குறித்து சொல்லுங்கள்?

இடத் தேர்வு சற்று கடினமாகவே இருந்தது. சென்னை, பெசன்ட் நகர் பகுதியில் இப்படியான சேவை தேவைப்படும் இடத்தை முதலில் இறுதி செய்தேன். அங்கே அருகில் நடைபாதையில் வசிப்பவர்கள், கோயில்களில் யாசகம் வாங்கிப் பிழைப்பவர்கள் அதிகம் இருக்கும் பகுதியாக அது இருந்தது. பின்னர் அந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதி பெற்றேன். அதன் பின்னர் சமுதாய குளிர்சாதனப் பெட்டியை நிறுவியதோடு அதற்கு ஒரு பாதுகாவலரையும் நியமித்தேன். இவற்றையெல்லாம் என் சொந்த செலவிலேயே மேற்கொள்கிறேன்.

இங்கே வைக்கப்படும் உணவு, இன்னும்பிற பொருட்களை அனுமதிப்பதில் ஏதாவது நடைமுறை பின்பற்றப்படுகிறதா?

நிச்சயமாக. நாங்கள் இதற்காக தனியாக தகவல் பதிவேடு ஒன்றை பயன்படுத்தி வருகிறோம். அந்தப் பதிவேட்டில், உணவு அல்லது பொருட்களை வைப்பவர்கள் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண்ணைப் பதிவு செய்வர். அதேபோல் ஃப்ரிட்ஜுக்குள் வைக்கப்படும் உணவை லேபிள் செய்கிறோம். உதாரணத்துக்கு தயிர் சாதம், சாம்பார் சாதம் என்று லேபிள் செய்கிறோம். இதன்மூலம் உணவை எடுக்க வருபவர்கள் அவர்களுக்கு விருப்பமான உணவைத் தேர்வு செய்துகொள்ள ஒரு வாய்ப்பு வழங்குகிறோம்.

இப்படி உணவு, உடை என எல்லாம் இலவசமாக கிடைக்கும் என்றால்.. சிலர் சோம்பேறியாகவும் வாய்ப்பு இருக்கிறதே?

இதை நான் இத்திட்டத்தை தொடங்குவதற்கு முன்னதாகவே யோசித்துவிட்டேன். அதன் காரணமாகவே பாதுகாவலரை நியமித்தோம். அவர், அதுபோன்று தினமும் வரும் நபர்களிடம் விசாரிப்பார். உழைக்கும் திறனிருந்தும் சோம்பேறித்தனமாக உணவு எடுக்க வருபவர்களிடம் வறுமையில் வாடுவோருக்கான உணவு இது என எடுத்துரைப்பார்.

இதற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

ஒருமுறை வெளியூரில் இருந்து வேலை தேடி வந்த நபர் ஒருவர், என்னிடம் மிகக் குறைந்த அளவே பணம் இருக்கிறது. இதிலிருந்து எடுத்துச் செல்லும் உணவை இன்றைய நாள் முழுவதற்கும் வைத்துக்கொண்டு வேலை தேடுவேன். உணவு செலவு மீதமாகும் என்று பாதுகாவலரிடம் கூறிச் சென்றிருக்கிறார். நான் எந்த நோக்கத்துக்காக இந்த சேவையைத் தொடங்கினேனோ அதை அடைந்துவிட்டதாக உணர்ந்தேன்.

இவ்வாறு இசா பாத்திமா கூறினார்.

'ஐயமிட்டு உண்' என நீங்களும் உதவிக் கரம் நீட்ட விரும்பினால் 9884466228 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x