Published : 31 Oct 2017 01:56 PM
Last Updated : 31 Oct 2017 01:56 PM

யானைகளின் வருகை 67: அடிபம்ப்பில் நீர் இரைத்த பெரியவன்கள்!

இருட்டு கவியவிருக்கும் மாலை நேரம். வனாந்தரம் என்றால் அப்படியொரு வனாந்திரத்தைப் பார்க்க முடியாது. அதன் நடுவே குண்டும், குழியுமாக வனத்துறை போட்ட குறுகிய சாலை. எங்களுக்கு முன்னால் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில். நாங்கள் ஒரு காரில் ஊர்க்கதை, உலகக்கதை, அரசியல் சங்கதிகள் பேசிக் கொண்டே பயணிக்கிறோம்.

அது யானைகளின் காடு, காட்டு யானைகள் எங்காவது தென்படுமா என்று ஏக்கத்துடன் சாலையின் இருமருங்கும் பார்த்துக் கொண்டே வந்த எங்கள் குழுவின் கவனம் சுத்தமாக வேறுபக்கமாக மூழ்கி விட்டது. அந்த நேரத்தில்தான் அந்த காடே அதிரும்படியான பிளிறல் ஓசை கேட்டது. நாங்கள் நடுங்கி விட்டோம். காரின் ஓட்டுநர் நடுக்கத்தில் சற்றே ஸ்டியரிங்கை ஆட்டி தடுமாறியும் விட்டார். எங்களுக்கு முன்னே பைலட் போல் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த கரடுமுரடான பாதையில் அந்த சத்தம் வந்த வேகத்தில் சட்டென்று திரும்பி நெளிந்து பாய்ந்து எங்கள் காருக்கு பின்னால் சென்று பதுங்கினார்கள்.

'சாலையின் நடுவேதான் காட்டு யானை குறுக்கிட்டு விட்டதோ!' என்றே பிரேக் போட்டு டிரைவர் அஞ்சினார். ஆனால் அந்தப் பாதையின் வலதுபுறம் உயர்ந்து நிற்கும் குன்றுகளில் அடர்ந்து நிற்கும் மரங்களுக்கிடையில் அந்த நீண்ட கொம்பின் வெள்ளி மினுக்கம் தெரிந்தது. காதுகளை விடைத்து பின்பக்கமாய் மடக்கி, புஸ்ஸென்று துதிக்கையால் ஆக்ஸிஜனை வயிற்றுக்குள் நிரப்பி பெரிய கரிய உருவம். எந்த நேரமும் பாய்ந்து வந்து காரை உருட்டவும், உள்ளுக்குள் இருப்பவர்களை தூக்கி போட்டு மிதிக்கவும் ஆயத்தமாகி விடுவது போல் நின்றது. அதற்கும் காருக்கும் 100 அடி இடைவெளி இருந்தால் அதிகம்.

நல்லவேளை அது சாலையை மறித்து நிற்கவில்லை. ஒரு விநாடி நேரம் வண்டியை நிறுத்தினாலும், ஒரே பாய்ச்சலில் பாய்ந்து வந்து காரை பள்ளத்தாக்கில் உருட்டி விட்டுவிடும் வேகம் அந்த ஒற்றை ஆண் யானையிடம் இருந்தது. இன்ஜினை நிறுத்தாமல் ஒரே மாதிரி ஓடவிட்டுக் கொண்டு அந்த இடத்தை கடந்தார் ஓட்டுநர். ஐம்பது, அறுபது மீட்டர் தொலைவு கடக்கும்வரை அது விடைத்து நின்று எங்களையே முறைத்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அதற்கு அப்பால் செல்லும் போது பார்த்தால் பத்துப் பன்னிரெண்டு யானைகள் கொண்ட குழு மேய்ந்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

இந்தக் குழுவில் இருந்த யானைகளில் ஒன்றில் கூட அந்த ஒற்றையின் கண்ணில் இருந்த ரெளத்திரத்தை காணமுடியவில்லை. இயல்பாக அவையும் அங்கேயே நின்று சில மரங்களின் கிளைகளை உடைத்த வண்ணமும், சில இலை தழைகளை சாப்பிட்ட வண்ணமும், ஒரு சில எங்கள் வாகனம் செல்லுவதையே கவனித்தவாறிருந்தன. அப்படிக் கவனித்தபடி இருந்த பெரிய யானைகள், குட்டிகள் இரண்டை தன் கால்களுக்கிடையே தள்ளி நிறுத்திக் கொண்டிருந்தன. 'அந்த ஒற்றை பிளிறியதே தன் கூட்டத்தை எச்சரிக்கத்தான். அது இதோட வழிகாட்டி. அதுதான் அந்த சத்தம் எழுப்பியிருக்கிறது!' என தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு விவரணை சொன்னார் ஓட்டுநர்.

அவர் காரை அந்த இடத்தில் மிக மெதுவாக இயக்க, 'நிறுத்தாதீங்க. போயிடுங்க!' என உள்ளிருப்பவர்கள் வேகம் காட்டினர். சில மாதங்களுக்கு முன்பு பில்லூர் அணைக்கு விசிட் செய்து விட்டு பரளிக்காடு தாண்டி ஓரிரு கிலோமீட்டர் தொலைவில் பயணித்த போது இந்த அனுபவம் வாய்ந்தது. அப்போது நான் பயணித்த காரில் தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் சு.பழனிசாமி, சிபிஐ கட்சியின் மாநில நிர்வாகிகளில் ஒருவரும், தாமரை பத்திரிகை ஆசிரியர் சி. மகேந்திரன் உள்பட பலர் இருந்தனர்.

இங்கிருந்து மேற்கே கெத்தை, மஞ்சூர், அப்பர்பவானி, அவலாஞ்ச் என 50 கிலோமீட்டர் பயணித்தாலும் சரி, கிழக்கே முள்ளி, அத்திக்கடவு, மானாரு. அஞ்சூரு, குண்டூரு, வெள்ளியங்காடு வந்தாலும் சரி, அத்திக்கடவுக்கு தெற்கே கொறவன்கண்டி, கூடப்பட்டி, தோண்டை, வேப்ப மரத்தூர், சீழியூர், கோபனாரி, கொடுங்கரைப் பள்ளம், பட்டிசாலை, தோலம்பாளையம், தாயனூர் சென்றாலும் சரி, வடக்கே பில்லூர் அணை நீர் தேங்கும் பரளிக்காடு, பூச்சமரத்தூர், வேப்ப மரத்தூர், எழுத்துக்கல்புதூர், சிறுகிணறு, குண்டூர் என எந்த கிராமங்களை நோக்கி நீங்கள் பயணம் செய்தாலும் இயற்கையின் அற்புத தரிசனங்களைக் காண முடியும்.

மேலே பஞ்சு பொதிபோல் நகரும் மேகங்களுடைய வானம், கீழே கண்ணுக்கெட்டியதூரம் வரை பன்னீராய் தேங்கி நிற்கும் பவானி நீரின் தரிசனம், இடைவெளியில்லாத பசும் இலைகள் தழுவும் மரங்கள் போர்த்தின காடு, இதில் எல்லாவற்றையும் மிஞ்சி போகிற திசையில், திக்குக்கு திக்கு வரிசையாய் காணப்படும் யானைகளின் சாணம். பல இடங்களில் அது காய்ந்து கிடக்கிறது. சில இடங்களில் பசுமையாய் குழகுழப்புடன் காணப்படுகிறது. மிகச் சில இடங்களில் அந்த குழகுழப்பிலும் ஆவி பறக்கிறது. அதையொட்டி மரக்கிளைகள் ஒடித்துப் போடப்பட்டிருக்கும் காட்சி 'இங்கே இப்பத்தான் யானைக நின்னுட்டு போயிருக்கு. பக்கத்துல புதருக்குள்ளேதான் இருக்கும். வந்துடுங்க!' என நம்முடன் வந்தவர்கள் எச்சரிப்பதும் நடக்கிறது.

பில்லூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வருகிறேன். முதன்முதலாக இங்கே உள்ள மானாரு பகுதிக்கு வந்த அனுபவத்தை மறக்க முடியாது. அப்போது மீடியா நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்தேன். இந்த கிராமத்தில் அத்திக்கடவு பவானியிலிருந்து பிரியும் ஒரு வாய்க்கால் தனியார் இடத்தின் வழியே செல்கிறது. அதன் வரிசையில் மொத்தம் 13 குடும்பங்கள். அந்த வாய்க்கால் நீரை வைத்துத்தான் விவசாயம் செய்து கொண்டிருந்தனர். இதில் ஒருவர் இன்னொருவருக்கு தண்ணீர் விடாமல் தடுத்துவிடுவதாக குற்றச்சாட்டு.

இந்தப் புகாரை எங்கள் அலுவலகத்திற்கு அனுப்பியவரை பேட்டி கண்டு எடுத்து, மற்றவர்களையும் பேட்டி காண்பதாக ஏற்பாடு. அவர்கள் எல்லோருமே, 'டூவீலரிலா வந்தீங்க? சீக்கிரமா போயிடுங்க. இல்லேன்னா பெரியவங்க குறுக்கே நின்னுடுவானுக. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப் போகுது!' என எச்சரிக்கை செய்தனர். அங்கே மாலை நான்கு மணிக்கெல்லாம் காட்டு யானைகள் வந்துவிடுமாம் . நாங்கள் பேட்டியெடுத்த ஒருவரின் தோட்டத்து வீட்டின் முன்பு ஒரு பலாமரம். அதில் உள்ள கிளைகள் உடைக்கப்பட்டு, அதன் கீழே யானைகளின் சாணம் குவியலாக கிடந்தது. அதைப்பற்றி கேட்ட போது அந்த தோட்டத்துக்காரர் சொன்னார்,

''அது ஒரு ஒத்தை செஞ்ச வேலை. அது அடிக்கடி இங்கே வந்துடும். கொம்புக நல்ல நீளம். பலாப்பழம் பழுக்க ஆரம்பிச்சா அதுக்கு துதிக்கை வேர்த்துடும் போல. இப்பவும் ஒரு வாரமா இங்கேதான் திரிஞ்சிட்டிருக்கு. நேத்து ராத்திரி இதே இடத்துலதான் நின்னு அப்படியே தன் முன்னங்காலை மரத்துல நிறுத்தி, தும்பிக்கையால எட்டி ஒரு பெரிய பலாப்பழத்தை பறிச்சு காலில் போட்டு மிதிச்சு அது கவளம், கவளமாக எடுத்து வாய்க்குள்ளே விட்டிட்டிருந்தது. அரவம் கேட்டு எழுந்திருச்சு, அரிக்கேன் லைட்டை திரி தீண்டிவிட்டு பார்த்தா கருமுசுன்னு அது நிற்குது. ஜன்னல்லதான் நானும் எம் பொண்டாட்டியும் பார்த்தோம். அது அதுக்கு தெரிஞ்சிடுச்சு. 'ங்கோ!'ன்னு ஒரு பிளிறல். ஏன் என்னை எட்டிப்பார்க்கறே?ன்னு கேட்குது. வருஷம் பூரா நான் வாழைய வளர்த்தறேன். பலா வளர்த்தறேன். கரெக்டா அது சாப்பிடறதுக்கு இது வந்துடுது. அதையும் மீறி அது சாப்பிடும் போது ஜன்னல் வழியா எட்டிப்பார்த்தா இப்படி ஒரு மிரட்டல் வேற!'' என வேடிக்கையாகப் பேசினார்.

அவரிடம் மேலும் பேசியதில், ''இப்படி இதுக வருதுன்னுதான் பேரு. யாரையும் ஒண்ணும் செய்யறதில்லை. செஞ்சதுமில்லை. காட்டுக்குள்ளே சுள்ளிமுள்ளு, விறகுன்னு பொறுக்க போறவங்கதான் யானைககிட்ட தெரியாம மாட்டி மிதிபட்டு செத்திருக்காங்க. மற்றபடி இதுக தோட்டங்காட்டுல வந்து ராத்திரி சாப்பிடும் போது யாராவது தெரியாத்தனமா குறுக்கே போயிட்டாத்தான் போச்சு. அதனால ராத்திரியில் யாரும் வெளியே போறதில்லை. அதை மீறி பட்டாசு கொளுத்தி ரவுசு பண்ணினா சும்மாயிருக்காது. அடுத்தநாள் தோட்டத்தில் இருக்கிற ஒண்ணு ரெண்டை சாப்பிடறதுக்குப் பதிலா, ஒட்டுமொத்த காட்டையும் தாம்பு கட்டி அழிச்சுட்டு போயிடும். அதனால அதுகளை நாங்க யாரும் தொந்தரவு செய்யறதில்லை. அதுக சாப்பிட்டது போக மீதின்னுதான் நாங்க இங்கே விளைச்சலே போடறோம். இது எங்களுக்கு ரொம்பப் பழகியும் போச்சு!'' என்றார் விகல்பமில்லாது.

இதே மானாரு பழங்குடி கிராமத்திற்கு இன்னொரு நாள் சென்றிருந்தேன். அவர்களின் சிறு குடியிருப்புக்கு முன்னால்தான் தார்ச்சாலை செல்கிறது. அதன் ஓரமாய் பழங்குடியினருக்கு என்று ஒரு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, தண்ணீர் எடுக்க ஒரு கை 'பம்ப்' குழாய் பொருத்தப்பட்டிருந்தது. அந்த அடி பம்ப்பில் பழங்குடிகள் தண்ணீர் அடித்து, குடங்களில் பிடித்து செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இதை எங்கிருந்தோ மறைவில் நின்று பார்த்திருக்கின்றன காட்டு யானைகள். பிறகென்ன? மாலை ஐந்து மணிக்கே வந்துவிடுவதை வழக்கமாக வைத்துவிட்டன. மனிதர்கள் அடி 'பம்ப்' அடிப்பது போலவே தும்பிக்கையால் தட்டித்தட்டி நீர் உறிய ஆரம்பித்து விட்டது. அதில் தலைமை யானை அதை செய்ய மற்ற யானைகள் தும்பிக்கை பொருத்தி குடிக்க, மற்ற யானைகள் போட்டி போட்டுக் கொண்டு அடி பம்ப்பை அடிக்க முயற்சிக்க, பைப்பில் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அடிபம்ப் அடிக்கடி பிடுங்கி எறியப்படுவதே வழக்கமாகவே ஆகிவிட்டது.

'அவங்க பெரியவங்க. அவங்கதான் எங்க எஜமானருக சாமி. அவங்களை கேட்டுத்தான் நாங்க எல்லாமே செய்வோம். காட்டுக்குள்ளே அந்த காலத்துல போய் மூங்கில் அரிசி, தேன் எல்லாமே அவங்களை கும்பிடாம போய் எடுத்ததில்லை. மனுசங்களை விட அதுக்கு அறிவு ஜாஸ்தி!' என்று இங்குள்ள பழங்குடிகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வெள்ளந்தியாகவே பேசினார்.

இதே காலகட்டத்தில் ஒருநாள். சீனியர் வக்கீல் ஞானபாரதியுடன், அவரின் வக்கீல் ஜூனியர்கள் பாண்டியராஜன், செல்வராஜ் இன்னும் சிலருடன் காரில் புறப்படுகிறோம். வெள்ளியங்காடு, கெத்தை, மஞ்சூர், அப்பர்பவானி, அவலாஞ்ச் என காட்டு யானைகளை தேடி, அவற்றின் தரிசனத்திற்காகவே புறப்படுகிறோம். அப்பர் பவானி, அவலாஞ்ச் பகுதிகளில் சாலை மிக மோசமாகவே காட்சி தருகிறது. மெட்டல் கற்கள் மூலம் குதித்துக் குதித்தே செல்ல வேண்டிய நிலை. கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தூரம் கார் பயணித்தும் காட்டு யானை ஒன்றைக்கூட காண முடியவில்லை.

நிறைய காட்டெருமைகளைப் பார்த்து விட்டோம். குதித்தோடும் மான்கள், கருமந்தி எனவும் கண்டுவிட்டோம். வண்டி அப்பர்பவானிக்கு கீழே ஒரு மூலையில் திரும்புகிறது. அங்கே ஒரு மாதிரியான கவுச்சி வாசம். அதை கவுச்சி வாசம் என்று கூட சொல்ல முடியாது. நாள்பட்ட மாட்டுச் சாணத்தையும், அதன் கோமியத்தையும் கலந்தடித்தால் ஒரு வீச்சம் வருமே. அப்படியொரு வாசம். கார் ஓட்டிய பாண்டியராஜன்தான் முதலில் அதைப் பார்த்துவிட்டார்.

அந்த கரடு முரடான சாலைக்கு இடது பக்கம் ஒரு பெரிய மரத்தடியில் உடம்பு முழுக்க செம்மண் பூசிய நிலையில் அந்த காட்டு யானை. அங்கு நின்ற மரங்கள் பெரியதா? அது பெரியதா என்றே புரிபடாத தோற்றத்தில். நீண்ட கொம்பு. எண்ணி பத்தடி தூரத்தில் அந்த பிரம்மாண்ட உருவம். பின்பக்கம் தள்ளி அசையாமல் நிற்கும் காதுமடல்கள். காரை ஓட்டிய வக்கீல் பாண்டியராஜன் சற்றே தடுமாறி விட்டார்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x