Last Updated : 12 Oct, 2017 11:11 AM

 

Published : 12 Oct 2017 11:11 AM
Last Updated : 12 Oct 2017 11:11 AM

ஒரு கோடிப் பேரைக் கவர்ந்த காஷ்மீர் சுற்றுலா வீடியோ

காஷ்மீர் சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள 5 நிமிடம் ஓடக்கூடிய ஒரு வீடியோ இன்டர்நெட்டில் வைரலாகி கலக்கி வருகிறது. யூடியூப்பில் அப்லோடு செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் 30 லட்சம் பேரும் 72 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அதோடு பல லட்சம் பேர் லைக்கும் ஷேரும் செய்திருக்கிறார்கள். தற்போது வரை பார்த்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி விட்டது. மிக அருமையாக எடுக்கப்பட்டுள்ள அந்த குறும்பட வீடியோவின் காட்சியும், பின்னணி இசையும், பாடல் வரிகளும் அனைவரையும் கவரக் கூடியவை.

அந்தக் குறும்படத்தில் மொத்தமே மூன்றே கேரக்டர்கள்தான். தேனிலவுக்கு வரும் கணவன், மனைவி மற்றும் ஒரு டாக்ஸி டிரைவர். காலையில், படுக்கையில் படுத்திருக்கும் கணவனை எழுப்புகிறார் இளம் மனைவி. ``கிளம்புங்க.. தூங்கவா வந்திருக்கிறோம்..'' என கிளப்புகிறாள். போன் வருகிறது. ``2 நிமிடத்தில் சிவப்பு கலர் கார் ஓட்டல் வாசலில் நிற்கும். டிரைவர் பெயர் மீர். அவர்தான் உங்கள் கெய்டு, காஷ்மீரை சுற்றிக் காட்டுவார். தயாராக இருங்கள்..'' என்கிறார் சுற்றுலா ஏஜென்ட். ``ஆஹா காஷ்மீர் என்ன அழகு`` என ஜன்னலில் விரியும் காட்சியைப் பார்த்துக் கூறும் கணவனும் மனைவியும் தயாராகி கீழே வருகிறார்கள்.

கீழே சிவப்பு நிறக் கார் தயாராக இருக்கிறது. வயதான டிரைவர் அருகிலேயே இருக்க, ``கொஞ்சம் நேரமாகி விட்டது. சாரி'' என இளைஞன் கூற, ``இவரை தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கொண்டு வர நேரமாகி விட்டது. பொறுத்துக் கொள்ளுங்கள்'' என மனைவி அவரிடம் கூறிவிட்டு, இருவரும் காரில் ஏறிக் கொள்கிறார்கள். ஒரு நிமிடம் திகைக்கும் அந்த முதியவர், அவர்களைக் காரில் ஏற்றிக் கொள்கிறார். அப்போது முதியவரின் மனைவியிடமிருந்து போன் வருகிறது. ``இதோ வந்துர்றேன்..'' எனக் கூறுகிறார். ``மன்னிச்சுக்குங்க,, மனைவிதான்..'' எனக் கூறிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்கிறார்.

புதுமணத் தம்பதி அல்லவா.. காரிலேயே கொஞ்சியபடியே வரும் அவர்களின் சந்தோஷத்தை ரசித்தபடி வண்டியை ஓட்டும் முதியவர் தால் ஏரிக்கு அழைத்துப் போகிறார். அங்கு ஒருவரை அழைத்து ``இவர்களுக்கு சுற்றிக்காட்டு..'' எனக் கூறிவிட்டு, அவர்கள் வரும்வரை காத்திருக்கிறார். தால் ஏரியில் சிக்காரா என அழைக்கப்படும் அலங்காரப் படகு செல்ல, எதிரே வரும் படகில் இருக்கும் சிறுமி டாட்டா காட்டுகிறார். பின்னர் பழமையான கான்கா இ மொல்லா மசூதிக்கு கார் போகிறது. போகும் வழியில் வாலிபனுக்கு போன் வருகிறது. மனைவி அவரை முறைக்க, சாரி சாரி எனக் கூறிவிட்டு, போனை கட் செய்கிறார் கணவன். மசூதி வாசலில் புறாக்களுக்கு தானியம் வாங்கிப் போடுகிறார்கள். மசூதியில் பிரார்த்தனை செய்துவிட்டு, வெளியே வருகிறார்கள்.

போகும் வழியில் உயரமான ஒரு பாறையில் ஏறி நின்றபடி, டைட்டானிக் போஸ் கொடுக்கிறது அந்த இளம் ஜோடி. அருகில் இருக்கும் தெளிந்த நீரோடையில் நீரை அள்ளிப் பருகுகிறார்கள். மனைவியின் முகத்தில் குளிர்ந்த நீரை அள்ளி முகத்தில் வீசுகிறார் கணவன். பின்னர் ஒரு ஓடையின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரத்தின் மீது அமர்ந்து இயற்கை ரசிக்கிறது ஜோடி. அந்த நேரம் முதியவருக்கு மனைவியிடமிருந்து போன் வருகிறது. அதே நேரம் அந்தப் பெண் அவரை அழைத்து தங்களை செல்போனில் போட்டோ எடுக்குமாறு கூற, போனை கட் செய்துவிட்டு, அவர்கள் அருகே சென்று போனை வாங்கி போட்டோ எடுக்கிறார் முதியவர். அவருக்கு பிரியத்துடன் பிளையிங் கிஸ் கொடுக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்து வெட்கத்துடன் சிரிக்கும் முதியவர் காருக்கு திரும்புகிறார்.

அடுத்து, ஒரு வீடு முன்பு கார் நிற்கிறது. காஷ்மீரின் சுவை மிகுந்த உணவு அந்த வீட்டில் தயாராக இருக்கிறது. அந்த வீட்டுக் குழந்தைகளோடு அமர்ந்து சந்தோஷமாக விருந்து சாப்பிடுகிறது அந்த ஜோடி.

அங்கிருந்து கிளம்பும் ஜோடி புல்வெளியில் அமர்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கிறது. முதியவர் காருக்குத் திரும்புகிறார். அந்த ஜோடியின் போன் ஒலிக்கிறது. அதையும் சால்வையையும் எடுத்துக் கொண்டு வரும் அவர், போனை இளைஞனிடம் கொடுக்கிறார். சால்வையை அந்தப் பெண்ணிடம் கொடுக்கிறார். ``போனில் பேசலாமா..'' என மனைவியிடம் கேட்டு அனுமதி வாங்கியபின், பேசுகிறார் கணவர். ``சார், நான்தான் டிரைவர் மீர். என்னாச்சு ஓட்டல்ல ஒங்கள காணோம். போன் அடிச்சா போனையும் எடுக்க மாட்டேங்கிறீங்க.. எங்க இருக்குறீங்க..'' எனக் கேட்கிறார் டிரைவர் மீர். அப்போதுதான் அந்த முதியவர் தங்களின் கெய்டு மீர் இல்லை எனத் தெரிய வருகிறது அந்த ஜோடிக்கு. தூரத்தில் குளிர் காய மரக்கட்டைகளை எடுத்து வந்து கொண்டிருக்கிறார் முதியவர். அவரிடம், ``நீங்க மீர் இல்லையா... என இந்த இளைஞன் கேட்க, அவர் சிரித்தபடி, ``இல்லை'' என்கிறார். ``அப்புறம் எப்படி நீங்க.. என இழுக்கும் அந்தப் பெண்ணிடம், ``மனைவி சர்க்கரை வாங்கச் சொன்னாள். காரில் வந்தேன். நீங்க உங்க டிரைவர் மீர்-னு நினைச்சு வண்டில ஏறிட்டீங்க. சரி எங்க ஊருக்கு வந்திருக்கீங்க. காஷ்மீர் என் வீடு. அதோட அழகை சுற்றிக் காட்டுறது என்னோட கடமை அல்லவா..'' என்கிறார் அந்த முதியவர். அவரின் அன்பில் அந்த ஜோடி நெகிழ்ந்து போய் நிற்கிறது. பின்னர் இரவில் அங்கேயே மூவரும் குளிர் காய்வதோடு முடிகிறது அந்த வீடியோ.

சாஹிபோ.. சாஹிபோ... என ஆரம்பிக்கும் அசத்தலான பின்னணி பாடலை காஷ்மீரின் முதல் ஐஏஎஸ் அதிகாரி ஷா பாஷல் எழுதியிருக்கிறார். காஷ்மீரின் அழகை வர்ணிக்கும் அருமையான பாடல் அது. காஷ்மீர் பண்டிட் விபா சரபும் அவருடைய முஸ்லீம் நண்பர் முடாசீர் அஹமதும் இணைந்து பாடியிருக்கிறார்கள். காஷ்மீர் முதல்வர் முப்தி முஹமது இந்த வீடியோவை வெளியிட்டு பேசியபோது, ``காஷ்மீரின் இயற்கை மட்டுமல்ல, மக்களின் மனதும் அழகானது. விருந்தோம்பல் அவர்களின் ரத்தத்தில் கலந்த ஒன்று. காஷ்மீர் வாருங்கள்.. அதை அனுபவியுங்கள்..'' எனப் பேசினார். அதோடு இந்த வீடியோவை ட்வீட். செய்தார். அதை ஹாலிவுட் பிரபலங்கள், அலியா பட், கரண் ஜோகர், ராக் ஸ்டார், ஹைவே இந்திப் படங்களை எடுத்த இம்தியாஸ் அலி ஆகியோர் ரீட்வீட் செய்ய, வைரலாக பரவத் தொடங்கி விட்டது வீடியோ.

பூவுலகின் சொர்க்கம் என்பார்கள் காஷ்மீரை. அந்த அளவுக்கு இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், தோட்டங்கள், ஏரிகள் என எங்கு பார்த்தாலும் சொர்க்கத்தின் பிம்பம் தெரியும். ஒரு காலத்தில் காஷ்மீரைப் பாடாத கவிஞர்களும் இல்லை, அதன் அழகை வர்ணிக்காத திரைப்படங்களும் இல்லை. இப்போது நிலைமை மாறி விட்டது. காஷ்மீர் என்றால் உடனே நினைவுக்கு வருவது தீவிரவாதம்தான். அந்த அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.

மற்ற மாநிலங்களுக்கு எப்படியோ, காஷ்மீரைப் பொருத்தவரை சுற்றுலாதான் பிரதான தொழில், ஆப்பிள் தோட்டம் எல்லாம் அப்பறம்தான். ஒரு லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுற்றுலாவைத்தான் நம்பி இருக்கிறார்கள். பயணிகளே வரவில்லை என்றால் இவர்கள் நிலைமை? அந்தக் கவலையில்தான் காஷ்மீர் சுற்றுலாத் துறை 5 நிமிடம் ஓடக் கூடிய இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறது. `வார்மஸ்ட் பிளேஸ் ஆன் எர்த்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், காஷ்மீரின் பிரமாண்டமான தால் ஏரி, பழமையான மசூதி, வீட்டு உணவு இவற்றோடு, முக்கியமாக காஷ்மீர் மக்களின் விருந்தோம்பல் பண்பும் முக்கிய இடம் பிடித்துள்ளது.

கடந்த 1988 வரை காஷ்மீருக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு அதிகமாக இருந்தது. 1989-ல் காஷ்மீரில் ஏற்பட்ட கலவரம், துப்பாக்கிச் சூடு, இந்தியாவுக்கு எதிரான கோஷம் போன்றவற்றால் சுற்றுலா பயணிகள் வருகை மூன்றில் ஒரு பங்காகக் குறைந்தது. அந்த ஆண்டில் 2 லட்சம் பயணிகள் மட்டுமே வந்தனர். பின்னர் கலவரம் குறைந்ததால், அடுத்தடுத்த ஆண்டுகளில் வருகை அதிகரித்தது. 2012-ல் 1.25 கோடிப் பேர் வந்தனர். 2015-ல் 92 லட்சம் பேராகக் குறைந்தது. இவர்களிலும் 78 லட்சம் பேர் ஜம்முக்கு மட்டுமே சென்றனர். 13 லட்சம் பேர் மட்டுமே காஷ்மீர் சென்றனர். கடந்த ஆண்டில் 12 லட்சம் பேர் மட்டுமே வந்தனர். ஆனால் அதன்பிறகு அதிகரித்த, கல்லெறிதல் சம்பவம், ராணுவ முகாம் மீது தாக்குதல், தீவிரவாதிகள் என்கவுன்ட்டர் போன்றவற்றால் இந்த ஆண்டு பயணிகள் வருகை 75 சதவீதம் வரை குறைந்துவிட்டது. கடந்த ஆண்டில் தால் ஏரியில் இருக்கும் அத்தனை படகுகளும் முன்பதிவால் நிரம்பி வழிந்தன. இந்த ஆண்டு 5 சதவீத படகுகளுக்குத்தான் பயணிகள் வந்துள்ளனர். ஏறக்குறைய ரூ.3 ஆயிரம் கோடி வரை நஷ்டம்.

``இந்தக் குறும்படத்தில் பனி படர்ந்த மலைகள், சலசலத்து ஓடும் நீரோடைகள், வளைந்து நெளிந்து போகும் பாதைகள் போன்ற அற்புதமான விஷயங்களைப் பற்றிச் சொல்லவில்லை. படத்தை கடைசி வரை பாருங்கள். காஷ்மீர் மக்களின் அன்பு, மனித நேயம், விரும்தோம்பல் பண்பு புரிய வரும்'' என்கிறார் காஷ்மீர் சுற்றுலாத் துறை இயக்குநர் மகமூத் அஹமது ஷா.

அந்த வீடியோவுக்கான லிங்க் இதோ...

https://www.youtube.com/watch?v=QYnHwzMTwqo

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x