Published : 26 Oct 2017 02:21 PM
Last Updated : 26 Oct 2017 02:21 PM

யானைகளின் வருகை 64: ஜெயலலிதாவை முட்டித் தள்ளிய காவேரி!

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு யானைகள் என்றால் கொள்ளை இஷ்டம் என்பது அனைவரும் அறிந்ததுதான். அவர் திரும்ப 2001-ம் ஆண்டில் முதல்வரான வேளை அந்த மோகம் உச்சபட்ச எல்லையைத் தொட்டது. அப்போது ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி கருணாநிதியை சிறையில் அடைத்தார். அதற்காக தமிழ்நாடு தழுவிய பந்த் அறிவிக்கப்பட்டிருக்க. அதையெல்லாம் சட்டை செய்யவில்லை ஜெ. அதே வேகத்தில் குருவாயூர் சென்றார். அந்த நேரத்தில் ஜெ.வின் வருகைக்கு கண்டனம் தெரிவித்து குருவாயூர் கோயில் முகப்பிலேயே யுவமோர்ச்சா இளைஞர் அணியின் எதிர்ப்பு, கறுப்புக் கொடி போராட்டம் நடக்க தடியடியும் நடந்தது. அதில் 20க்கும் மேற்பட்டோர் காயம். அதையும் பொருட்படுத்தாமல் அவர் கோயிலுக்குள் நுழைந்தார்.

அங்கே ஏற்கெனவே தனக்காக விலைக்கு வாங்கி வைக்கப்பட்டிருந்த 'கண்ணன்' என்ற யானைக்கு கிருஷ்ணன் என்று பெயர் மாற்றினார். தன் ஆஸ்தான ஜோதிட நம்பூதிகள் சொன்ன வாக்கிய கணித பஞ்சாங்கத்தின்படி அதனை 'கிருஷ்ணன்' என மூன்று முறை அழைத்தார். பிறகு அக்கோயிலுக்கு அதனை தானம் கொடுத்தார்.

அப்புறமும் அவருக்கு யானைகளின் மீதான மோகமும், ஐதீகமும் குறையவில்லை. அதிலேயே உழன்றுதான் 2003 ஆம் ஆண்டில் தமிழக கோயில் யானைகளுக்கு புத்துணர்ச்சி நல வாழ்வு முகாமை அறிவித்தார்.

ஆயிரம் சர்ச்சைகள் வந்தபோதும் அதை நடத்திக் காட்டினார். சொத்துக் குவிப்பு வழக்குகளில் உழன்று அதிலிருந்து தன்னை விடுவிக்க, ஜோதிடம், ஐதீகம், நம்பூதிரிகள் என அவர் அலைந்து கொண்டிருந்த காரணத்தால் வழக்குகள் சாதகமாக முடிய '54 யானைகள் வைத்து கஜபூஜை ஜெ திட்டம்!' என்றெல்லாம் மீடியாக்களில் செய்திகள் றெக்கை கட்டின. கோடநாட்டிலிருந்து புறப்பட்டு இரவோடு இரவாக முதுமலை வந்து கஜபூஜையும் நடத்தி முடித்து விட்டு ரகசியமாக சென்றுவிட்டார் என்றும் கூட வதந்திகள் பறந்தன.

அப்படியெதுவுமே நடந்ததாக ஆதாரப்பூர்வமாக தகவல்கள் வராத நிலையில்தான் 2012-13 ஆம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வன பத்திரகாளியம்மன் கோயிலை ஒட்டிய பவானி ஆற்றின் கரையில் கோயில் யானைகள் நல வாழ்வு முகாம் மாற்றப்பட்டது. அந்த ஆண்டு யானைகள் எல்லாம் முகாமில் புத்துணர்ச்சி பெற்றபோதும் கூட தேக்கம்பட்டிக்கு ஜெயலலிதா வர இருக்கிறார். கஜபூஜை செய்ய இருக்கிறார் என்றெல்லாம் ஓயாது மீடியாக்கள் செய்திகள் வாசித்தன. அப்போது அவர் கோடநாட்டிலும் இருந்தார். ஆனால் அவர் பத்திரிகை செய்திகளை எந்த இடத்திலும் உண்மையாக்கவில்லை.

ஆனால் அவர் அப்படியே இருந்து விடவில்லை. அதே 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோடநாட்டிலிருந்து முதுமலைக்குச் சென்றார். அங்குள்ள யானைகள் சரணாலயத்தை சுற்றிப் பார்த்தவர் வனத்துறை வளர்ப்பு யானைகள் முகாமிற்கும் சென்றார். அங்கு ஓய்வெடுத்து வரும் யானைகளுக்கு பழங்களை அளித்து சந்தோஷித்தார். அப்போது காவேரி என்ற குட்டி யானைக்கும் பழங்கள் கொடுத்து தடவிக் கொடுத்தார். அது யாரும் எதிர்பாராத விதமாக ஜெயலலிதாவை முட்டித் தள்ளியது. அவர் தடுமாறி விழப்போக பாதுகாப்பு அதிகாரிகள் தாங்கிப் பிடிக்க, இன்னொரு பக்கம் காவேரியை பிடித்து கட்டுப்படுத்தி தள்ளிச் சென்றனர்.

இந்த சம்பவம் அன்று முதுமலையையே பதட்டத்திற்குள்ளாக்கியது. அந்த யானைக் குட்டிக்கு காவேரி என்று ஜெயலலிதாதான் முன்னொரு முறை பெயர் சூட்டியிருந்தார். அது 2 வயதான நிலையிலேயே அவரை முட்டித் தள்ளியது. அதன் பிறகு அந்த யானைக்கு என்ன நடந்ததோ? அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதுமலைக் காப்பகத்திலேயே மரணத்தை தழுவியது.

'அது நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தது. நோய் முற்றியே அது இறந்தது!' என்றுதான் வனத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். ஜெயலலிதா மீது அபிமானம் கொண்ட கட்சிக்காரர்கள் சிலரோ, 'அம்மாவை முட்டி விட்டு அது உயிருடன் இருக்க முடியுமா?' என்றே உள்ளர்த்தம் கவிய பேசினர். வேறு சிலரோ எல்லை கடந்து போய், 'முதல்வரை முட்டித் தள்ளியதால் அதை கொன்று விடவே உத்தரவு. அதுதான் நடந்திருக்கிறது!' என்றும் கூட வதந்தி கிளப்பினார்கள்.

இன்றைக்கும் ஜெயலலிதா மரணம் போலவே, காவேரியின் மரணமும் முதுமலை, கூடலூர், மசினக்குடி பகுதியில் அன்று சர்ச்சையாகவே இருந்து மறந்தும் போனது. இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம். இந்த காவேரிக்குப் பிறகு ஜெயலலிதா தான் இறக்கும் வரை எந்த யானையையும் பார்த்ததாகவே, அதை கோயிலுக்கு தானம் கொடுத்ததாகவோ, அதற்கு சாப்பிட பழங்கள் கொடுத்ததாகவோ, யானைகளை வைத்து அவர் கஜபூஜை செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூட பேசப்படவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

ஆனாலும் அடுத்தடுத்த வருடங்கள் மேட்டுப்பாளையத்தில் நடந்த யானை முகாமில் அடுத்தடுத்த துர்சம்பவங்கள் நடப்பது வாடிக்கையானது. அதில் ஒன்றாகவே கும்கி நஞ்சனின் மரணம் நிகழ்ந்தது.

ஜெயலலிதாவை காவேரி என்ற முதுமலை யானைக்குட்டி முட்டித்தள்ளியது 2013-ம் ஆண்டு ஜூலை மாதத்தில். அது இறந்தது 2014 ஆகஸ்ட் மாதத்தில். இதற்கு இடைப்பட்ட காலத்தில் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் 2013 டிசம்பர் தொடங்கி 2014 ஜனவரி முடிய நடந்த கோயில் யானைகள் முகாமிற்கு வந்த நிலையில்தான் நஞ்சனின் மரணம் நிகழ்ந்தது. அதன் மரணம் ஆளும் கட்சி மற்றும் அதிகார மையங்களின் அரசியல் விளையாட்டுகளால் நடந்தது என்பதுதான் கொடுமை.

கோவையில் விளைநிலங்கள் மற்றும் ஊருக்குள் புகும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக கோவை குற்றாலம் சாடிவயல் பகுதியில் ஒரு நிரந்தர கும்கி யானைகள் முகாம் போடப்பட்டது; அதில் வால்பாறை டாப் ஸ்லிப்பிலிருந்து நஞ்சன், பாரி என்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன என்பதை ஏற்கெனவே கண்டோம்.

இப்படி புதிதாக உருவான சாடிவயல் முகாமிலிருந்து மட்டுமல்ல; டாப் ஸ்லிப், முதுமலை வளர்ப்பு யானைகள் முகாம்களிலிருந்தும், தனியார் மடங்களிலிருந்தும் கூட வளர்ப்பு யானைகளை வருடந்தோறும நடக்கும் யானைகள் நல வாழ்வு புத்துணர்ச்சி முகாமிற்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர் அதிகாரிகள்.

அதற்கு மூன்று மாதங்கள் முன்புதான் கோவை தொண்டாமுத்தூர் குப்பே பாளையம் கிராமத்தில் காட்டு யானைகளால் பெரும் துன்பம். அதில் விளைநிலங்கள் நிறைய பாதிக்கப்பட மக்கள் சாலை மறியல், கடையடைப்பு என நடத்த ஆரம்பித்தனர். சாடிவயல் கேம்பிலிருந்து சுமார் 15 கி.மீ தூரமுள்ள இந்த கிராமத்திற்கு காட்டு யானைகளை விரட்டச் சென்றது இரண்டு கும்கிகளும். காட்டுக்குள்ளிருந்து ஊருக்குள் புகும் காட்டு யானைகளை திரும்ப காட்டுக்குள்ளேயே விரட்டி விடும் பணியை இவை செவ்வனே செய்தது.

இதேவேளையில் இதன் அருகாமை கிராமமான தாளியூரில் காட்டு யானைகள் தொந்தரவு என்று அங்கே பயணப்பட்டது கும்கிகள். அங்கும் ஒருவாரம் கேம்ப்.

தாளியூரில் கும்கிகள் முகாமிடுவதற்கு 2 மாதங்கள் முன்பிருந்தே மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் இதே போன்று காட்டு யானைகளால் பிரச்சினை. காட்டு யானைகள் தாக்கி 2 பேர் மரணம். பல்வேறு வீடுகள் சேதம். வாழைத்தோட்டங்கள் நாசம். 'கும்கிகள் வந்தால்தான் ஆச்சு!' என்று மக்கள் சாலை மறியல், வனத்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம், வன அலுவலகத்தில் தூங்கும் போராட்டம் எல்லாம் நடத்தினர்.

அதனால் மேட்டுப்பாளையத்திற்கு கும்கிகளை அனுப்பியே ஆக வேண்டும் என்று ஆளும் தரப்பிலிருந்து உத்தரவுகள் பிறந்தன. தாளியூருக்கும் மேட்டுப்பாளையம் வன கிராமங்களுக்கும் தொலைவு 60 கி.மீ க்கு குறையாது.

ஆனால் தாளியூரிலேயே நஞ்சன் மஸ்து எனப்படும் மதம் பிடிக்கும் நிலையில் மூர்க்கமாக இருந்தது. கட்டி வைக்கப்பட்டிருந்த மரக்கிளைகளை எல்லாம் துவம்சித்து உடைத்துக் கொண்டிருந்தது. எனவே இதை சாடிவயல் கேம்பில் கொண்டு போய் கட்டிப்போட்டு அமைதிப்படுத்துவதை தவிர வேறுவழியில்லை என பாகன்கள் வனத்துறையினருக்கு எடுத்துச் சொன்னார்கள். வனத்துறை அலுவலர்களோ, வேறு வழியில்லை. இது செல்லாவிட்டால் மேட்டுப்பாளையம் மக்களை அமைதிப்படுத்த முடியாது. அரசியல் நெருக்கடியும் தீராது என்று உறுதிபட சொல்லி விட்டனர்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x