Published : 22 May 2016 01:52 PM
Last Updated : 22 May 2016 01:52 PM
வெயிலை மிஞ்சிவிடுகின்றன விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளின் சேட்டைகள். பள்ளி நாட்களில் பார்த்துப் பார்த்து சமைத்தாலே சாப்பிட மறுக்கும் குழந்தைகளை, விடுமுறை நாட்களில் அவ்வளவு எளிதில் சாப்பிடவைத்துவிட முடியுமா என்ன? தினம் தினம் என்ன புதிதாகச் சமைப்பது என்ற நினைப்பிலேயே பாதி நேரத்தைச் செலவிடும் பெற்றோர்களும் நம்மிடையே உண்டு. ‘‘சுவையில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு, ஆரோக்கியத்தைக் கோட்டைவிடக் கூடாது’’ என்று சொல்கிறார் சென்னை காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்த விசாலா ராஜன். ‘‘எந்நேரமும் ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்குச் சத்து நிறந்த உணவைக் கொடுக்க வேண்டும்’’ என்று சொல்லும் அவர், குழந்தைகள் விரும்பும் சில உணவு வகைகளைச் சமைக்கக் கற்றுத்தருகிறார்.
என்னென்ன தேவை?
பஞ்சாபி மிளகு அப்பளம் - 4 (பெரியது)
பொடியாக அரிந்த வெங்காயம் - 2 கப்
சிறியதாக நறுக்கிய தக்காளி - ஒரு கப்
வெள்ளரித் துண்டுகள், துருவிய கேரட் - தலா அரை கப்
கொத்தமல்லி - கால் கப்
ஓமப்பொடி - அரை கப்
சாட் மசாலா - 2 டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அப்பளத்தின் இரு புறமும் சிறிது எண்ணெய் தடவி மைக்ரோவேவ் அவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து நன்கு சுட்டெடுங்கள். லேசாக ஆறியதும் அதன் மேல் பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, வெள்ளரி, துருவிய கேரட் முதலியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் பரப்புங்கள். தேவையான சாட் மசாலா, உப்பு, சர்க்கரையைத் தூவுங்கள். கடைசியில் ஓமப் பொடி, கொத்தமல்லி தூவி அலங்கரியுங்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பும் சாட் இது.
விசாலா ராஜன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT