Published : 06 Apr 2016 05:57 PM
Last Updated : 06 Apr 2016 05:57 PM
குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது தினமும் என்ன சமைப்பது என்ற யோசனை ஒரு பக்கம் என்றால் விடுமுறையில் அந்த யோசனை இருமடங்காகிவிடும். தவிர உறவினர்களின் வருகையும் நம் சமையல் பக்குவத்துக்குச் சவால் விடுக்கும். “நாம் தினமும் சமைக்கும் சோறு, குழம்பு வகைகளுடன் சில பொருட்களைக் கூட்டியும் குறைத்தும் புதிய சுவையில் சமைத்துப் பரிமாறினால் விருந்தினர்கள் அகமகிழ்ந்துவிடுவார்கள். குழந்தைகளின் குதூகலமும் அதிகமாகும்” என்கிறார் சென்னை போருரைச் சேர்ந்த ராஜகுமாரி. விடுமுறையைச் சிறப்பானதாக்க சில பிரத்யேக உணவு வகைகளைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் இவர்.
கோபி மசாலா ரோஸ்ட்
என்னென்ன தேவை?
காலிபிளவர் - ஒரு கப்
தக்காளி, வெங்காயம் - தலா 2
இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த் தூள் - தலா ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
கடுகு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்
தோசை மாவு - 2 கப்
தேங்காய்த் துருவல் - கால் கப்
முந்திரித் துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தண்ணீரில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, அதில் உதிர்த்த காலிபிளவரைப் போட்டு பத்து நிமிடம் வையுங்கள். புழு, பூச்சிகள் இருந்தால் வெளியேறிவிடும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரித் துண்டுகள் இவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாக அரையுங்கள். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, சோம்பு தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்குங்கள். காலிபிளவரைச் சேர்த்து வதக்கி, அரை கப் தண்ணீர் ஊற்றி வேகவையுங்கள். வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து வதக்கி, கலவை ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கிவையுங்கள்.
தோசை ஊற்றி நடுவே இந்த கோபி மசாலாவை 3 டீஸ்பூன் வைத்து மூடி, ஓரங்களில் எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்துவிடுங்கள். இதைப் பச்சை தக்காளி சட்னி தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
ராஜகுமாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT