Last Updated : 20 Mar, 2016 04:29 PM

 

Published : 20 Mar 2016 04:29 PM
Last Updated : 20 Mar 2016 04:29 PM

குழந்தைகள் விரும்பும் உளுத்தங்களி!

அல்வா என்றதுமே பலருக்கும் திருநெல்வேலிதான் நினைவுக்கு வரும். அல்வாவைப் போலவும் அல்வாவை விடவும் பிரசித்தி பெற்ற உணவு வகைகளும் நெல்லைச் சீமையில் உண்டு. அதுவும் சொதி எனப்படும் சுவைநிறை குழம்பு, திருநெல்வேலி மாவட்டத்தின் தனித்துவம். “சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியம் தருவதிலும் சிறந்த உணவு வகைகள் நெல்லையில் உண்டு” என்கிறார் சங்கரி பகவதி. சங்கரன்கோவிலில் பிறந்து தற்போது சிங்கப்பூரில் வசிக்கும் இவருக்குச் சமையலில் ஆர்வம் அதிகம். மென்பொருள் பொறியாளாராகப் பணியாற்றிய இவர், தற்போது சமையலுக்காகவே ஆங்கிலத்தில் ‘The 6 Tastes’ என்ற வலைப்பூவை நடத்திவருகிறார். நாவூறும் நெல்லை உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் இவர்.

உளுந்தங்களி

தமிழகத்தின் தென் மாவட்டங்களில், இளம் பெண்களுக்கு பூப்பெய்தும் பருவத்தில் உளுந்தங்களி செய்து கொடுப்பார்கள். இது பெண்களின் எலும்புகளைப் பலப்படுத்தவும், மகப்பேறு காலத்தில் பெண்களின் கருப்பையை வலுப்படுத்தவும் உறுதுணையாய் இருக்கும். உளுந்தங்களி எல்லா வயதினரும் சாப்பிடக் கூடிய, சத்து மிகுந்த இனிப்பு.

எப்படிச் செய்வது?

பச்சரிசி, கருப்பு உளுந்து இரண்டையும் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் நன்கு துடைத்துவிட்டு, மிக்ஸியிலோ அரைவை மிஷினிலோ திரித்துக்கொள்ளுங்கள். மிக்ஸியில் திரிப்பதாக இருந்தால், நன்கு பொடித்த பின் சல்லடையில் சலித்துக்கொள்ளவும்.

பனங்கருப்பட்டி மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து, வடிகட்டிக்கொள்ளுங்கள். களி மாவை, வடிகட்டப்பட்ட கருப்பட்டி கரைசலில், கட்டி விழாமல் கரைத்துக்கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தில் களி மாவுக் கரைசலை விட்டு, மிதமான தீயில் கிளறிக்கொண்டேயிருங்கள். எப்போதெல்லாம் களி இறுகுகிறதோ அப்போதெல்லாம் சிறிது சிறிதாக நல்லெண்ணையைச் சேருங்கள். பாத்திரத்தில் ஒட்டாமல் களி சேர்ந்து வரும். அதுவே சரியான பதம்.

களி ஆறியதும் நல்லெண்ணெய் சேர்த்துப் பரிமாறுங்கள். உருண்டையாகப் பிடித்துக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

- சங்கரி பகவதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x