Last Updated : 29 Nov, 2015 02:50 PM

 

Published : 29 Nov 2015 02:50 PM
Last Updated : 29 Nov 2015 02:50 PM

மழைக்கு உகந்த மிளகுக் குழம்பு

மழைக்காலம் வந்துவிட்டாலே குளிர் மட்டுமல்ல, நோய்களின் தாக்குதலும் அதிகமாக இருக்கும். ஒரு நாள் மழைக்கே பலருக்கும் ஜலதோஷம் வந்துவிடும். ‘‘ஆரோக்கிய உணவு வகைகளைச் சாப்பிட்டால் உடல் வலுப் பெறுவதுடன் நோய்களிலிருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்’’ என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த பிருந்தா ரமணி. ‘‘நம் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தரும் பொருட்கள் அனைத்தும் சமையல் அறையிலேயே இருக்கும்போது கவலை எதற்கு?’’ என்று நம்பிக்கை தரும் இவர், மழைக்காலத்துக்கு ஏற்ற சில உணவு வகைகளைச் சமைக்கக் கற்றுத்தருகிறார்.

மிளகுக் குழம்பு

என்னென்ன தேவை?

வறுத்து அரைக்க

மல்லி விதை - 3 டீஸ்பூன்

மிளகு, கடலைப் பருப்பு - தலா 2 டீஸ்பூன்

உளுந்து, சுக்குப் பொடி - தலா ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

தாளிக்க

கடுகு - ஒரு டீஸ்பூன்

சீரகம், உளுந்து - தலா அரை டீஸ்பூன்

வெந்தயம் - கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி

புளி - எலுமிச்சை அளவு

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

புளியைத் தண்ணீரில் ஊறவையுங்கள். வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தனித்தனியாக வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளுங்கள். சுக்குப் பொடி இல்லையென்றால் சிறு துண்டு சுக்கை வறுத்துக்கொள்ளலாம். கடைசியில் அடுப்பை அணைத்துவிட்டு, கறிவேப்பிலையைப் போட்டு வறுத்தால் சட்டியின் சூட்டிலேயே வறுபட்டுவிடும். ஆறியதும் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.

அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகப் போட்டுத் தாளியுங்கள். நன்கு பொரிந்தவுடன் அரைத்த விழுதைப் போட்டு ஒரு நிமிடம் வதக்குங்கள். புளியைக் கரைத்து ஊற்றி, தேவையான உப்பு போட்டு பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடுங்கள். கொதித்ததும் தீயைக் குறைத்துவிடலாம். எண்ணெய் பிரிந்து வருவதுதான் பதம். இந்தப் பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடலாம்.

இதைச் சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். மிளகு, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. உணவைச் செரிக்க வைத்து, ஒவ்வாமையைச் சீராக்கும். உடல் வலி தீரும்.



- பிருந்தா ரமணி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x