Published : 03 Sep 2015 01:14 PM
Last Updated : 03 Sep 2015 01:14 PM
வாரம் முழுக்க இருக்கும் பரபரப்பும் சுறுசுறுப்பும் வார இறுதியில் எங்கேதான் சென்றுவிடுமோ? ஞாயிற்றுக்கிழமைகளில் பலரும் தாமதமாகத்தான் எழுந்து கொள்வார்கள். காலை உணவைத் தவிர்த்துவிட்டுப் பதினொரு மணிக்கு மேல் நேரடியாக மதிய உணவுக்குத் தயாராகிவிடுவார்கள்.
இப்படிக் காலை உணவு தவிர்க்கப்படுவதைத் தடுக்கப் பிரெஞ்ச் எனப்படுகிற உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவது இப்போது வழக்கமாகிவிட்டது. காலை உணவைச் சத்தாகவும், மதிய உணவுடன் இணைத்தும் சாப்பிடுவதுதான் பிரெஞ்ச். வார இறுதியில் வீட்டுக்கு வரும் நண்பர்களையும் விருந்தினர்களையும் பிரெஞ்ச் கொடுத்து வரவேற்கலாம்.
காய்கறி, கீர், ராய்த்தா, பயறு வகைகளுடன் இது இருப்பதால் வயிறு நிறைவதுடன் சத்தும் கிடைக்கும். எதையும் எண்ணெயில் பொரிக்கத் தேவையில்லை. வெளிநாடுகளிலும், ஸ்டார் ஹோட்டல்களிலும் சமைப்பதை நம் நாட்டுக் காய்கறிகள், பழங்களைக் கொண்டு நமது பாரம்பரிய முறைப்படி செய்யலாம் என்கிறார் சென்னை போரூரைச் சேர்ந்த ராஜகுமாரி. இனி வார இறுதி நாட்களும் களைகட்டும்!
என்னென்ன தேவை?
சாதம் - 2 கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் - 3
உளுந்து - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
தோல் நீக்கிய வேர்க்கடலை - அரைக் கப்
முந்திரி - 3 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
வெறும் வாணலியில் வேர்க்கடலை, முந்திரி இரண்டையும் லேசாக வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்த மிளகாய், உளுந்து, பெருங்காயம் இவற்றை வறுக்கவும். தேங்காய் துருவலையும் அவற்றுடன் சேர்த்து வறுத்து, உப்பு சேர்த்து இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டுச் சிறிதளவு உப்பு, அரைத்த பொடியைச் சேர்த்துப் புரட்டி அடுப்பை அணைத்துவிடவும். வடித்து வைத்திருக்கும் சாதத்தை இந்தப் பொடியில் சேர்த்துக் கிளறிவிடவும். கறிவேப்பிலை, மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள வெண்டைக்காய் தயிர் பச்சடி ஏற்றது.
தொகுப்பு: ப்ரதிமா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT