Published : 02 Sep 2015 01:09 PM
Last Updated : 02 Sep 2015 01:09 PM
சுவையான சுண்டைக்காய் சமையல்
சுண்டைக்காயைக் கண்டாலே வெறுப்பவர்கள் பலர். சுண்டைக்காயில் வற்றல், வற்றல் குழம்பு தவிர வேறென்ன புதிதாகச் சமைத்துவிட முடியும் என்று அலுத்துக்கொள்கிறவர்கள் அதிகம். ஆனால் சுண்டைக்காயில் பிரியாணி முதல் பால் கூட்டுவரை சமைக்கலாம் என்கிறார் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஜானகி ரங்கநாதன். சுண்டைக்காயை வாரத்தில் இரண்டு நாள் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி சேராது.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் குறையும். சளியைக் கரைக்கும், நெல்லி - சுண்டைக்காய் ஜோடி ஞாபகசக்தியை அதிகரிக்க உதவும். சுண்டைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, புகைபிடிக்கும் எண்ணம் குறையும் என்று சுண்டைக்காயின் பலன்களை அடுக்குகிறார் ஜானகி ரங்கநாதன். அவரது அனுபவமும் கைப்பக்குவமும் இணைந்த சுண்டைக்காய் சமையலைத் தினம் ஒன்றாகச் சமைத்து, சுவைப்போம்!
என்னென்ன தேவை?
பிஞ்சு சுண்டைக்காய் - ஒன்றரை கப்
பால் - அரை கப்
பாசிப் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
தேங்காய் - 1 மூடி
உளுந்து - 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
முந்திரி - 8
உப்பு, நெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
உளுந்து, மிளகு, கடலைப் பருப்பு இவற்றை நெய்யில் வறுத்து, ஆறியதும் தேங்காய் சேர்த்து அரைக்கவும். சுண்டைக்காய்களை நசுக்கி, அலசவும். அதனுடன் பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். வெந்தவுடன் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்கவிடவும்.
கடைசியாகப் பாலை ஊற்றி இறக்கிவிடவும். முந்திரியை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். முந்திரியை அரைத்தும் சேர்க்கலாம். இந்தப் பால் சுண்டைக்காய்க் கூட்டு கசக்காது என்பதால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT