Last Updated : 21 Sep, 2015 01:12 PM

 

Published : 21 Sep 2015 01:12 PM
Last Updated : 21 Sep 2015 01:12 PM

கதம்ப சாதம்

என்னென்ன தேவை?

பச்சரிசி - ஒரு கப்

துவரம் பருப்பு (வேக வைத்தது) - முக்கால் கப்

வெள்ளைப் பூசணிக்காய் - சிறு துண்டு

கத்திரிக்காய், உருளைக் கிழங்கு - தலா 2

தக்காளி - 1

பீன்ஸ் - 5

புளி - எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

மல்லித் தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய் - 6

கடலைப் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

மல்லி விதை - 3 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

கடுகு, உளுந்து - தலா 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

அரிசியைக் களைந்து குக்கரில் போட்டு, கொஞ்சம் கூடுதலாகத் தண்ணீர் வைத்துக் குழைவாக வடித்துக்கொள்ளுங்கள். வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து, தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். காய்களைச் சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிவையுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து போட்டுத் தாளியுங்கள். பிறகு பெருங்காயத் தூள், கறிவேப்பிலையைப் போட்டு, காய்கறித் துண்டுகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்குங்கள்.

மஞ்சள் தூள் போட்டுக் கிளறி, காய் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி வேகவிடுங்கள். காய்கள் வெந்ததும் புளியைக் கரைத்து ஊற்றுங்கள். அரைத்து வைத்திருக்கும் விழுது, உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்கவிடுங்கள். புளியின் பச்சை வாசனை போனதும் வேகவைத்த துவரம் பருப்பைப் போடுங்கள். எல்லாம் சேர்ந்து கொதித்து வரும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள்.

இந்தக் குழம்பை சாதத்தில் ஊற்றிக் கிளறுங்கள். சற்றுத் தளர இருக்க வேண்டும். வாசனைக்கு ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம். மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள். இதில் சொல்லியிருக்கும் காய்கள்தான் போட வேண்டும் என்கின்ற அவசியமில்லை. வெண்டைக்காய், பரங்கிக்காய், முருங்கைக்காய், வாழைக்காய், கேரட், பச்சைப் பட்டாணி என்று எதை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x