Published : 03 Feb 2020 02:16 PM
Last Updated : 03 Feb 2020 02:16 PM

தோசை மாமா கடை

சென்னை மேற்கு மாம்பலம், விநாயகம் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ பாரதி மாலை நேர உணவகம். உணவகம் என்றால் நீங்கள் பெரிதாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். சிறிய அளவிலான தள்ளுவண்டிக் கடைதான் இது. ஆனால், 20-க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்று, அரை மணிநேரம் காத்திருந்து சாப்பிடுகின்றனர்.

அப்படி இந்தக் கடையில் என்னதான் ஸ்பெஷல்?

பூண்டு தோசை, தக்காளி தோசை, புதினா தோசை, வல்லாரை தோசை, நெய் தோசை, காய்கறி தோசை, மைசூர் மசால் தோசை, தேங்காய்ப்பொடி தோசை என 20-க்கும் அதிகமாகக் கிடைக்கும் தோசை வகைகள்தான் இந்தக் கடையின் ஸ்பெஷல். அதனால், ‘தோசை மாமா கடை’ என்றே இந்தக் கடை அடையாளப்படுத்தப்படுகிறது.

தோசை விரும்பிகளின் சுவைப்பிடமாகத் திகழும் இந்தக் கடையில், அடை, பெசரட்டு என தோசையின் உற்றார் உறவினர்களும் சுவைக்கக் கிடைக்கின்றனர். எந்த வெரைட்டியாக இருந்தாலும், ஒரு தோசையின் விலை 40 ரூபாய். தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, சாம்பார் கிடைக்கிறது. செட் தோசைக்கு மட்டும் வடகறி தருகிறார் தோசை மாமா.

மாலை 4 மணிக்கெல்லாம் வியாபாரம் தொடங்கி விடுகிறது. தோசை வார்ப்பது, சட்னி - சாம்பார் ஊற்றுவது, காசு வாங்குவது என தன்னந்தனியாளாக இரவு 10 மணி வரை கடையைக் கவனித்துக் கொள்கிறார் தோசை மாமா என்று அழைக்கப்படும் ரவிச்சந்திரன்.

யூ ட்யூப் சேனல்கள் மூலம் இந்தக் கடை பிரபலமானதால், தற்போது கூட்டம் அதிகரித்திருக்கிறது. இதனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த அனைவரையும் வரிசையில் நிற்கச் சொல்கிறார் தோசை மாமா. நீண்ட நேரம் வரிசையில் நிற்க முடியாமல் சிலர் திரும்பிச் செல்ல, ‘அப்படி என்னதான் இருக்கிறது இந்தக் கடையில்?’ என சுவைத்துப் பார்க்க விரும்புபவர்களும், அடிக்கடி இந்தக் கடைக்கு வருபவர்களும் பொறுமையுடன் வரிசையில் நிற்கின்றனர்.

“யூ ட்யூப்ல பார்த்துட்டு, நண்பர்களோட தோசை மாமா கடைக்கு வந்தேன். 4 பேர் சேர்ந்து 12 தோசை சாப்பிட்டோம். தக்காளி தோசஒ, பூண்டு தோசை, அடை தோசை எங்களுக்குப் பிடிச்சிருந்தது. நெய் தோசை அல்டிமேட்” என்கிறார் சோழிங்கநல்லூரைச் சேர்ந்த தேவா.

மாதவரம், திருவான்மியூர் என பல பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து தோசை சாப்பிடுபவர்களையும், 10 தோசை, 20 தோசை என மொத்தமாக பார்சல் வாங்கிச் செல்பவர்களையும் பார்க்க முடிகிறது.

வரிசையில் நிற்கும் உங்கள் முறை வரும்போது, உங்களுக்கு என்னென்ன தோசை வேண்டும் என மொத்தமாகச் சொல்லி, முதலிலேயே காசைக் கொடுத்துவிட வேண்டும். நீங்கள் வாங்கிய தோசை உங்களுக்குப் போதுமானதாக இல்லை, இன்னொரு தோசை வேண்டுமென்றால், மறுபடியும் நீங்கள் வரிசையில் நின்று, உங்கள் முறை வரும்வரை காத்திருக்க வேண்டும். அதேபோல், பார்சல் வாங்க வருபவர்கள், சட்னி - சாம்பார் வாங்க கட்டாயம் பாத்திரம் கொண்டுவர வேண்டும்.

இவ்வளவு கெடுபிடிகள் இருந்தாலும், தினம் தினம் இந்தக் கடைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்கிறது. காரணம், யூ ட்யூப் சேனல்கள் மூலமாகக் கிடைத்த விளம்பரம்.

“என் அப்பா உடல்நலமில்லாமல் வீட்டில் இருக்கிறார். இந்தக் கடை தோசை சாப்பிட வேண்டும் என்பது அவருடைய ஆசை. எனவே, அவருக்காக நெய் தோசை வாங்க வந்துள்ளேன்” என்கிறார் அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்காக சென்னை வந்திருக்கும் பிரேமா.

சாப்பிட வருபவர்களை அனுசரனையாகக் கவனித்துக் கொள்ளும்போதுதான், வயிறு நிறைவதோடு, மனதும் நிறையும். ஆனால், தனியாகக் கடையை நடத்துவதாலும், கூட்டம் அதிகமாக இருப்பதாலும் சற்று கடுமையாக நடந்து கொள்கிறார் தோசை மாமா என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. அதனால், முதல் முறை வந்தவர்களில் சிலர், அதன் பிறகு வருவதில்லை என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x