Published : 15 Dec 2019 10:46 AM
Last Updated : 15 Dec 2019 10:46 AM
தொகுப்பு: ப்ரதிமா
தங்கத்தைக்கூட வாங்கிவிடலாம்போல; விற்கிற விலைக்கு வெங்காயத்தை வாங்குவதுதான் பெரும்பாடாக இருக்கிறது. அளவில் சிறியதாக இருக்கும் வெங்காயமே கிலோ 150 ரூபாயைத் தாண்டிவிட்டது. வெங்காயத்தைச் சேர்க்காமல் சமைத்தால் எப்படித்தான் சாப்பிடுவது என்ற பலரது கவலையை உணர்ந்து விலை குறையும் வரையாவது வெங்காயம் இல்லாமல் சமைக்கலாமே என ஆலோசனை தருகிறார் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சீதா சம்பத். வெங்காயம் இல்லாத உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.
படங்கள்:பு.க.பிரவீன்
கோஸ் (பொடியாக நறுக்கியது) - 2 கப்
கடலைப் பருப்பு - அரை கப்
மிளகாய் வற்றல் - 4
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கடலைப் பருப்பை ஊறவைத்துக்கொள்ளுங்கள். ஊறியதும் தண்ணீரை வடித்து அதனுடன் காய்ந்த மிளகாயையும் உப்பையும் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். கோஸை வேகவைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும், கடுகு, உளுந்து, பெருங்காயத் தூள் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளியுங்கள். அரைத்த பருப்பைச் சேர்த்துக் கிளறுங்கள். பருப்பு வெந்துவரும்போது வேகவைத்த கோஸைச் சேர்த்துக் கலந்து இறக்கிவையுங்கள்.
என்னென்ன தேவை?
சௌசௌ துண்டுகள் - 2 கப், பாசிப் பருப்பு - கால் கப், உளுந்து, கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயம் - கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், சீரகம், கடுகு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சௌசௌ காயைத் தோல்நீக்கித் துண்டுகளாக நறுக்குங்கள். பருப்பைக் கழுவி அதில் சௌசௌ துண்டுகளைச் சேர்த்து வேகவைத்து எடுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் காய்ந்த மிளகாய், உளுந்து, கடலைப் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்தெடுத்து அவற்றுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரையுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். வேகவைத்த சௌசௌ கலவையை அதில் சேர்த்து, தேவையான அளவு உப்புப் போட்டுக் கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும் அரைத்துவைத்த விழுதைச் சேர்த்து, கூட்டுப் பதம் வந்ததும் இறக்கிவையுங்கள்.
என்னென்ன தேவை?
கத்தரிக்காய், வெண்டைக்காய் (நறுக்கியது) - தலா ஒரு கப்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து, கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3 , பச்சை மிளகாய் - 2
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - எலுமிச்சை அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
புளியுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப்போடுங்கள். அதில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளியுங்கள். பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை அதில் சேர்த்துக் கிளறுங்கள். கத்தரி, வெண்டைத் துண்டுகளைச் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்கிவிடுங்கள்.
என்னென்ன தேவை?
அவரைக்காய்
(நறுக்கியது) - 2 கப்
தேங்காய்த்
துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம், அரிசி மாவு - தலா ஒரு டீஸ்பூன்
புளித்த தயிர் - ஒரு கப்
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அவரைக்காயை வேகவைத்து எடுங்கள். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளியுங்கள். அரைத்த விழுதை அதில் கொட்டி உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்ததும் அவரைக்காயைச் சேர்த்துக் கிளறுங்கள். நன்றாகச் சேர்ந்துவந்ததும் தயிரை ஊற்றிக் கலக்குங்கள். நுரைத்து வந்ததும் அரிசி மாவைத் தூவி இறக்கிவிடுங்கள். கொதிக்கவிடக் கூடாது. கறிவேப்பிலையைத் தூவிப் பரிமாறுங்கள். இதைச் சோற்றில் கலந்து பிசைந்து சாப்பிடலாம்; தொடுகறியாகவும் தொட்டுக்கொள்ளலாம்.
என்னென்ன தேவை?
சேனைக் கிழங்குத் துண்டுகள் - 2 கப், பாசிப் பருப்பு - அரை கப், புளி - சிறிய எலுமிச்சை அளவு, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் - தலா 2, இஞ்சி - சிறு துண்டு, கடுகு, கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், உளுந்து - அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாசிப் பருப்புடன் சேனைக் கிழங்குத் துண்டுகளைச் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். புளியை உப்பு சேர்த்துக் கரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய்யை ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள், மிளகாய் வற்றல் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை இதில் சேர்த்துச் சூடுபடக் கிளறுங்கள். புளிக்கரைசலை அதில் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். பச்சை வாசனை போனதும் வேகவைத்த கிழங்கு - பருப்புக் கலவையைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். கலவை நன்றாகச் சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்கிவிடுங்கள். இதைச் சோற்றில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT