Published : 03 Nov 2019 11:24 AM
Last Updated : 03 Nov 2019 11:24 AM
தொகுப்பு: ப்ரதிமா
காபி சமையல்
காபி பொடியை வைத்து என்ன செய்ய முடியும்? இதென்ன கேள்வி; சுடச் சுட அருமையான காபியைப் போட்டுக் குடிக்க முடியும் என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆனால், காபி பொடியில் விதவிதமான உணவு வகைகளைத் தயாரித்து ருசிக்கலாம் என்கின்றனர் நம் வாசகிகள். அவர்களில் பத்துப் பேரின் கைவண்ணத்தில் உருவான காபி ரெசிபியை நாம் படிப்பதுடன் சமைத்தும் ருசிப்போம். இவர்கள் அனைவரும் இன்ஸ்டண்ட் காபித் தூளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
செக்கர்போர்டு குக்கீஸ்
என்னென்ன தேவை?
மைதா – ஒரு கப்
வெண்ணெய் – முக்கால் கப்
ஐசிங் சர்க்கரை – அரை கப்
முட்டையின் மஞ்சள் கரு – 1
வெனிலா எசென்ஸ் – முக்கால் டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
சாக்லேட் பகுதிக்கு
மைதா – ஒரு கப்
வெண்ணெய் – முக்கால் கப்
ஐசிங் சர்க்கரை – அரை கப்
முட்டையின் மஞ்சள் கரு – 1
காபித் தூள் – அரை டீஸ்பூன்
கோகோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் –அரை டீஸ்பூன்
ஒட்டுவதற்கு
முட்டையின் வெள்ளைக் கரு – 2
எப்படிச் செய்வது?
வெள்ளைப் பகுதி செய்வதற்கான பொருட்களில் மைதா மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர் ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்துச் சலித்துக்கொள்ளுங்கள். வெண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் போட்டு நிறம் மாறி வரும்வரை எலெக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடித்துக்கொள்ளுங்கள். பிறகு பொடித்த ஐசிங் சர்க்கரையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து மீண்டும் அடியுங்கள்.
இது மென்மையான கிரீம்போல் வரும். வெனிலா எசென்ஸ், முட்டையின் மஞ்சள் கருவை அடித்த கிரீமுடன் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். பிறகு இதனுடன் மைதா மாவுக் கலைவையைச் சேர்த்துப் பிசையுங்கள். மாவு உருண்டு வந்ததும் அதை ஒரு பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து எடுங்கள்.
மாவைச் சப்பாத்திக் குழவியால் அரை அங்குலம் கனமான செவ்வக வடிவ சப்பாத்தியாகத் திரட்டுங்கள். பின்னர் இதை அரை அங்குலம் அகலத்தில் நீளமான ஸ்ட்ரிப்களாக வெட்டிக்கொள்ளுங்கள். மொத்தம் ஒன்பது ஸ்ட்ரிப்கள் இதுபோல் வெட்டிகொள்ளுங்கள்.
சாக்லேட் பகுதிக்குக் கொடுத்துள்ள பொருட்களை வைத்து மேலே குறிப்பிட்ட மாதிரி மாவுபோல் பிசைந்து ஃபிரிட்ஜில் வையுங்கள். மாவை அரை அங்குலம் அளவுக்குச் செவ்வக வடிவ சப்பாத்தியாகத் திரட்டுங்கள். பின்னர் இதை அரை அங்குலம் அளவில் ஸ்ட்ரிப்களாக வெட்டிகொள்ளுங்கள். மொத்தம் ஒன்பது ஸ்ட்ரிப்கள் இதுபோல வெட்டிகொள்ளுங்கள்.
செக்கர் போர்டு செய்யும் முறை:
இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவைச் சற்று அடித்து வைத்துக்கொள்ளுங்கள். முதல் அடுக்குக்கு ஒரு வெள்ளை ஸ்ட்ரிப் வைத்து, சுற்றிலும் முட்டையின் வெள்ளை கருவை ஒரு பிரஷ்ஷால் தடவுங்கள். இப்போது ஒரு சாக்லேட் ஸ்ட்ரிப் எடுத்து வெள்ளைப் பகுதியுடன் ஒட்டி முட்டையின் வெள்ளைக் கருவை ஒரு பிரஷ்ஷால் தடவுங்கள்.
இதேபோல் ஒன்பது அடுக்குகளையும் ஒன்றன் மேல் ஒன்று வைத்து அடுக்குங்கள். இந்த கேக்கை 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுங்கள்.
பின்னர் இதை செக்கர் போர்டு பேட்டர்ன் வருமாறு கால் அங்குலம் கனமான குக்கீஸ்களாக வெட்டிகொள்ளுங்கள். குக்கீஸ்களை பேக்கிங் ட்ரேயில் இடைவெளிவிட்டு அடுக்குங்கள். பின்னர் இதனை 180 டிகிரி வெப்பத்தில் பிரி ஹீட் செய்த ‘அவனில்’ 10 முதல் 15 நிமிடங்கள் வரை பேக் செய்யுங்கள். கீழ்ப்பக்கம் சற்றுச் சிவந்ததும் வெளியே எடுத்து ஆறவையுங்கள். பிறகு காற்றுப்புகாத டப்பாக்களில் சேகரித்து வைத்துச் சாப்பிடுங்கள்.
- லட்சுமி வெங்கடேஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT