Published : 18 Aug 2019 10:23 AM
Last Updated : 18 Aug 2019 10:23 AM

தலைவாழை: இடியாப்பம் (மூவண்ணத்திலும் ருசிக்கலாம்)

தொகுப்பு:ப்ரதிமா

ஆகஸ்ட் 15 அன்று பள்ளிகள் தொடங்கிப் பொது இடங்கள் வரை ஏற்றப்படும் மூவண்ணக்கொடியைப் பார்க்கும்போது பலருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு நிறமும் ஒவ்வொன்றைக் குறிக்கும் என்றாலும் மொழி, மதம், இனம் எனப் பல்வேறுபட்ட மக்கள் இந்தியர்கள் என்ற புள்ளியில் ஒன்றிணைவதையும்தான் மூவண்ணம் உணர்த்துகிறது. அதன் தொடர்ச்சியாக மூவண்ண உணவைச் சமைத்து ருசிப்பது நம்மைச் சுற்றியிருப்பவர்களோடு நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமையக்கூடும் என்கிறார் சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமார். தினசரி உணவையே ஒருமைப்பாட்டுக்கான வழியாக மாற்றும் வகையில் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.

இடியாப்பம்

என்னென்ன தேவை?

ஆரஞ்சு நிறத்துக்கு
இடியாப்பம் பிழிந்தது - ஒரு கப்
கேரட் துருவல் - ஒரு கப்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
கடுகு, உளுந்து – தலா அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
சீரகம் - ஒரு டீஸ்பூன்
வறுத்த வேர்கடலைப் பொடி
- ஒரு டேபிள் ஸ்பூன்
வெள்ளை நிறத்துக்கு
இடியாப்பம் - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை
பனீர் துருவல் - கால் கப்
சர்க்கரை - அரை கப்
வறுத்த முந்திரிப் பொடி - ஒரு டீஸ்பூன்
நெய்- ஒரு டீஸ்பூன்
பச்சை நிறத்துக்கு
இடியாப்பம் - ஒரு கப்
கறிவேப்பிலை - அரை கப்
தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
இஞ்சி (பொடியாக அரிந்தது) - ஒரு டீஸ்பூன்
புளி - சிறு உருண்டை
மல்லித் தழை - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, உளுந்து, மிளகாய், சீரகம் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். கேரட் துருவலைச் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து வேகவிடுங்கள். இடியாப்பத்தைப் போட்டுப் புரட்டி, வேர்கடலைப் பொடியைத் தூவி இறக்கி வையுங்கள். வாணலியில் நெய் விட்டுச் சூடானதும் தேங்காய்த் துருவல், பனீர், ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இடியாப்பத்தைச் சேருங்கள். அதில் சர்க்கரை, முந்திரிப் பொடி இரண்டையும் தூவி, கிளறி இறக்குங்கள்.

கறிவேப்பிலை, மல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, தேங்காய்த் துருவல், இஞ்சி, புளி ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் தெளித்துக் கெட்டியாக அரையுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு போட்டுத் தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து வதக்குங்கள். அதில் இடியாப்பம், சிறிது உப்பு சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
இந்த மூன்று நிற இடியாப்பத்தையும் அடுத்தடுத்துப் பரப்பி, பரிமாறுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x