Published : 21 Apr 2015 12:49 PM
Last Updated : 21 Apr 2015 12:49 PM
வற்றல், வடாம், குளிர்பானங்கள் இவற்றுடன் மட்டும் கோடைகாலத்தின் எல்லையைச் சுருக்கிவிடக் கூடாது. "நீர்ச்சத்து நிறைந்த, உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவு வகைகளைச் சமைக்க உகந்ததும் இந்தக் கோடைதான்" என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. சமையலில் சுவையைக் கூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் செயற்கைச் சுவையூட்டிகளைத் தவிர்த்துவிடும் இவர், எப்போதும் ஆரோக்கிய உணவு வகைகளுக்கே முன்னுரிமை தருகிறார். உடலுக்குக் குளிர்ச்சி தரும் எளிமையான சில உணவு வகைகளை ராஜபுஷ்பா நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
கற்றாழைப் பச்சடி
என்னென்ன தேவை?
கற்றாழை 1 மடல் (பெரியது)
அச்சு வெல்லம் 2
காய்ந்த மிளகாய் 2
கடுகு, உளுந்து அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் சிறிதளவு
எப்படிச் செய்வது?
கற்றாழையைத் தோல் சீவி, தண்ணீரில் நன்றாக அலசி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அச்சு வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி வைக்கவும். வாணலியில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு, நறுக்கி வைத்துள்ள கற்றாழைத் துண்டுகளைச் சேர்க்கவும். வெந்ததும் வெல்லக் கரைசலைச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்துக் கொட்டவும். சுண்டக் காய்ச்சி இறக்கவும். இது உடலுக்கு வலுவூட்டி, இளமையைத் தக்கவைக்கும் உணவு.
கற்றாழைப் பச்சடியை பிரெட், சப்பாத்தி இவற்றுடன் ஜாம் போன்று சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஃபிரிட்ஜில் வைத்து இரண்டு மூன்று நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT