Published : 02 Mar 2015 05:13 PM
Last Updated : 02 Mar 2015 05:13 PM
சில்லிட வைக்கும் பனிக்கும் குளிருக்கும் இதமாகச் சூடாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அப்படிச் சாப்பிடுபவை சுவையுடன் மட்டுமல்லாமல் ஆரோக்கியத்துடனும் இருந்தால் நல்லது. அதற்கு வழிகாட்டுகிறார் சென்னை டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன். காபி கலக்குவதைக்கூட கருத்துடன் செய்வதில் இவரது சமையல் திறமை வெளிப்படும். இந்த முறை சூப், வறுவல், ஆனியன் ரைஸ் எனப் பல வகை உணவுடன் வந்திருக்கிறார். நாமும் அவற்றைச் சமைத்து, ருசிக்கலாம்.
மிளகு-கறிவேப்பிலை குழம்பு
என்னென்ன தேவை?
உதிர்த்த கறிவேப்பிலை - அரை கப்
குறு மிளகு - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5 முதல் 7
மஞ்சள் தூள், பெருங்காயம் - சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கடுகு, தனியா - தலா 1 டீஸ்பூன்
புளித் தண்ணீர் - அரை கப்
நல்லெண்ணெய் - 100 கிராம்
வெல்லம் - 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
புளித் தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து கரைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, மிளகாய், தனியா விதை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். ஆறியதும் விழுதாக அரைக்கவும்.
மீதியுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு தாளித்து, கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போக கொதித்ததும் அரைத்துவைத்திருக்கும் கறிவேப்பிலை விழுதைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கிவைக்கவும். கறிவேப்பிலையும் மிளகும் மார்கழியின் குளிருக்கு இதமானவை. சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்தி வகைகளுக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
லட்சுமி சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT