Published : 06 Jun 2016 12:02 PM
Last Updated : 06 Jun 2016 12:02 PM
கொளுத்தும் வெயிலில் சூடாகிப் போன தரையில் ஆம்லெட் போட்ட பெருமை நமக்கு மட்டுமே சொந்தமாக இருக்க முடியும்! அந்த அளவுக்கு வெளுத்து வாங்குகிறது வெயில். ஆனால் இந்த வெயிலில்தான் வற்றல், வடாம் வகைகள் நன்றாகக் காய்ந்துவிடும் என்று யோசிப்பவர்களும் நம்மிடையே இருக்கத்தானே செய்கிறார்கள்.
‘பொதுவா மாசி வெயிலில் வற்றல் போடுவார்கள். ஆனால் சித்திரை வெயிலும் உத்தமம்தான்’ என்கிறார் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சீதா சம்பத். சாதாரண சமையலில் சிறிது பாரம்பரியப் பக்குவத்தைக் கூட்டி, தனிச்சுவையுடன் விருந்து படைப்பதில் தேர்ந்தவர் இவர். இந்த வாரம் விதவிதமான வற்றல், ஊறுகாய் வகைகளுடன் வந்திருக்கிறார் சீதா சம்பத்.
இலை வடாம்
என்னென்ன தேவை?
பச்சரிசி - 2 கப்
சீரகம் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
வாழையிலை, உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பச்சரிசியைச் சுத்தம் செய்து இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். தோசை மாவு பதத்தில் இருப்பது நல்லது. இந்த மாவை ஒரு நாள் முழுவதும் புளிக்கவையுங்கள்.
மறு நாள் வாழையிலையில் லேசாக எண்ணெய் தடவி, புளித்த மாவைச் சிறிதளவு ஊற்றி வட்டமாகத் தேய்த்துவிடுங்கள். அதிகமாக எண்ணெய் தடவினால் மாவை இழுக்க வராது. இரண்டு அல்லது மூன்று முறைக்கு ஒரு முறை எண்ணெய் தடவலாம். அதை ஆவியில் வேகவைத்து எடுத்து, ஆறியதும் இலையிலிருந்து பிரித்தெடுத்து வெள்ளைத் துணியில் போட்டு மின் விசிறியின் கீழ் காய வையுங்கள். மறுநாள் வெயிலில் பதமாகக் காயவைத்து எடுத்துவையுங்கள்.
சுவையும் மணமும் நிறைந்த இதை எண்ணெயில் பொரித்தெடுக்கலாம், அடுப்பிலும் சுட்டெடுக்கலாம். பிரசவம் முடிந்த பெண்களுக்கு இதைச் சுட்டுக் கொடுப்பார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT