Published : 08 Jan 2017 03:42 PM
Last Updated : 08 Jan 2017 03:42 PM
என்னென்ன தேவை?
சதுரமாக நறுக்கிய வாழைக்காய், சேனைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, வெள்ளைப் பூசணி - 2 கப்
துவரம் பருப்பு - அரை கப்
புளி - எலுமிச்சை அளவு
உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள்- தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
பட்டாணி, கறுப்பு மற்றும் வெள்ளைக் கொண்டைக்கடலை, வெள்ளைக்
காராமணி, வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு
பச்சை மொச்சை - 50 கிராம்
வறுத்து அரைக்க
கடலைப் பருப்பு, உளுந்து - 2 டீஸ்பூன்
தனியா - ஒரு டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8 முதல் 10
தேங்காய்த் துருவல் - கால் மூடி
எப்படிச் செய்வது?
புளியைக் கரைத்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்துத் தனியாக வையுங்கள். காய்கறிகளோடு சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து முக்கால் பதத்துக்கு வேகவையுங்கள். தானிய வகைகளை முதல் நாள் இரவே ஊறவைத்து, சமைப்பதற்கு முன்னர் குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பச்சை மொச்சை, பருப்பு இரண்டையும் தனியாக வேகவைத்துக்கொள்ளுங்கள். வறுக்கும் பொருட்களைச் சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, ஆறியதும் பொடித்துக்கொள்ளுங்கள்.
புளிக்கரைசலை இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு, வேகவைத்த காய்கள், மொச்சை, தானிய வகைகள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்க விடுங்கள். அதனுடன் வேகவைத்த பருப்பு, அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவை சேர்த்து அடிபிடிக்காதவாறு கிளறி இறக்கி வையுங்கள். தேங்காய் எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால் காணும்பொங்கலன்று செய்யக்கூடிய காய்க் கூட்டு தயார்.
இந்தக் காய்க் கூட்டில் இன்னும் பலவிதமான காய்களைச் சேர்த்துக்கொள்ளலாம். காய்கறிகள் நிறையச் சேர்ப்பதால் தனியாகப் பொரியல் செய்யத் தேவையில்லை. தயிர்ப் பச்சடி தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அலாதியாக இருக்கும். இந்தக் கூட்டில் சிறிது வெல்லம் சேர்த்தால் சுவை கூடும். சிறிதளவு கடலைப் பருப்பு, உளுந்து இரண்டையும் அரை மணி நேரம் ஊறவையுங்கள். அவற்றுடன் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்து, சிறு உண்டைகளாகப் பிடித்துச் சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து, கூட்டில் சேர்த்தால் சுவை கூடும்.
லட்சுமி சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT