Published : 29 Sep 2014 12:51 PM
Last Updated : 29 Sep 2014 12:51 PM
சமையல் கற்றுக்கொண்டு முதல் முறை சமைக்கிறவர்களைப் பற்றி ஒரு நகைச்சுவை உண்டு. சமையலுக்குத் தேவையான அனைத்தையும் செய்து முடித்த பிறகும் உணவு தயாராகாமல் இருக்கும். பிறகுதான் தெரியும், அவர் அடுப்பையே பற்ற வைக்காமல் சமைத்திருப்பார்.
இந்த நகைச்சுவைக்கு வேலையே தராமல், அடுப்பு இல்லாமலும் சமைக்கலாம் என்கிறார் சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த சீதா சம்பத். பல வருட சமையல் அனுபவமும் பக்குவமும் இவருடைய சமையலில் வெளிப்படும். இந்த முறை அடுப்பு இல்லாத சமையலோடு வந்திருக்கிறார் சீதா.
வரவேற்பு ஸ்வீட் தட்டு
என்னென்ன தேவை?
பாதாம் பருப்பு - 50 கிராம்
பொட்டுக்கடலை மாவு - 3/4 கப்
சர்க்கரை பொடி - 1/4 கப்
மில்க் மெய்ட் - 1/4 கப் (தேவையான அளவு)
புட் கலர் - மஞ்சள், பச்சை, கோகோ - 1 சிட்டிகை
நெய் - 1/4 கப்
எப்படிச் செய்வது?
பாதாம் பருப்பைத் தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறப் போட்டு, தோல் நீக்கவும். பிறகு நைஸாக அரைத்து எடுக்கவும்.
பொட்டுக்கடலை, சர்க்கரையைக் கலந்து அரைத்துவைத்திருக்கும் விழுதில் அதைக் கலந்துகொள்ளவும். மில்க் மெய்டை தேவையான அளவு விட்டுக் கெட்டியாகப் பிசையவும். கையில் நெய் தடவிக்கொண்டு கட்டியாகாமல் பிசைய வேண்டும்.
நான்கு பாகமாக அதைப் பிரித்துக் கொள்ளவும். ஒரு பாகத்தில் மஞ்சள் நிறம், இரண்டாவது பாகத்தில் பச்சை நிறம், மூன்றாவது பாகத்தில் கோகோ நிறம் கலக்க வேண்டும்.
கையில் நெய் தடவிக்கொண்டு மஞ்சள் நிறக் கலவையில் இருந்து சிறிது எடுத்து வாழைப்பழ வடிவம் கொடுங்கள். அதே மாதிரிப் பச்சை நிறத்தில் சிறிது எடுத்துப் பச்சை வாழைப்பழம், வெற்றிலை வடிவங்களைச் செய்துகொள்ளவும். கோகோ நிறத்தில் பாக்கு வடிவமும், வெள்ளை நிறத்தில் பன்னீர் சொம்பும் செய்து தட்டில் வைத்து வரிசைப்படுத்தவும். ஃபிரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்தால் இறுகி விடும். வரவேற்பு தட்டு தயார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT