Published : 22 Sep 2014 05:01 PM
Last Updated : 22 Sep 2014 05:01 PM
கோடை வெயிலைச் சமாளிக்கவும் உடலில் தண்ணீர்ச் சத்து குறையாமல் பாதுகாக்கவும் நீர்ச் சத்து மிக்க காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். உடலில் நீர்ச் சத்து குறையாமல் பார்த்துக்கொண்டால் சரும நோய், வாய்ப் புண், வயிற்றுப் புண் மற்றும் குடல் சம்பந்தமான நோய்களைத் தவிர்க்க முடியும். காய்கறிகளில் நீர்ச் சத்து அதிகம் உள்ளது சுரைக்காய். பொதுவாக உருளைக் கிழங்கைத்தான் கறியுடன் சேர்த்து சமைப்பார்கள். ஆனால் சுரைக் காயுடன் கறியைச் சேர்த்து சுவையான குழம்பு சமைக்கலாம் என்கிறார் ம. ரஞ்சனா. அதன் செய்முறையையும் சொல்லித் தருகிறார்.
என்னென்ன தேவை?
சுரைக்காய், ஆட்டிறைச்சி - தலா கால் கிலோ
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
இஞ்சி - சிறு துண்டு
சமையல் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
கொத்தமல்லி -சிறிதளவு
மசாலாவுக்கு:
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி - 4 டீஸ்பூன்
சீரகம்- 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 12
தேங்காய் - அரை மூடி.
எப்படிச் செய்வது?
மல்லி விதை, சீரகம், மிளகாய் வற்றல் மூன்றையும் தனித்தனியாகப் பொன்னிறமாக வறுக்கவும். சூடு தணிந்ததும் அவற்றுடன் துருவிய தேங்காயைச் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தோலுரித்த முழு சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், தட்டிய இஞ்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதோடு அரைத்த மசாலாவையும் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும். பின்னர், சுத்தம் செய்த கறித் துண்டுகளைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும். கறி நன்கு வெந்ததும், தோல் நீக்கி நீளவாக்கில் துண்டுகளாக்கிய சுரைக்காயைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவைக்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கிவைக்க வேண்டும்.
குறிப்பு: ம. ரஞ்சனா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT