Published : 31 Dec 2018 10:52 AM
Last Updated : 31 Dec 2018 10:52 AM
குழந்தைகளைப் படிக்கவைப்பதைவிடச் சாப்பிடவைப்பதுதான் பல பெற்றோருக்கும் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. சத்துள்ள பழங்களைக் கொடுத்து அனுப்பினால் அப்படியே வீட்டுக்குத் திரும்பிவிடும். வற்புறுத்திக் கொடுத்தாலும் பேருக்கு ஒன்றிரண்டு துண்டைக் கொறிப்பார்கள். “பழங்களையும் காய்கறிகளையும் குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி அலங்கரித்துக் கொடுத்தால் நொடியில் காலிசெய்துவிடுவார்கள்” என்கிறார் சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமார். சில அலங்கரிப்பு முறைகளையும் அவர் நமக்குக் கற்றுத்தருகிறார்.
வெள்ளரிக்காய் பாம்பு
என்னென்ன தேவை?
வெள்ளரிக்காய் (பெரியது) - 1
மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு – சிறிது
உலர் திராட்சை – 1
உருக்கிய வெண்ணெய் - ஒரு – டீஸ்பூன்
வெங்காயத் தாள் (விரும்பினால்) – அலங்கரிக்க
எப்படிச் செய்வது?
வெள்ளரிக்காயை வட்டத் துண்டுகளாக அரிந்து சரி பாதியாக வெட்டிக்கொள்ளுங்கள். ஒரு தட்டில் வெட்டிய வெள்ளரித் துண்டுகள் நான்கு அல்லது ஐந்தை எடுத்து வரிசையாக அடுத்தடுத்து அடுக்குங்கள். அவற்றின் கீழ் சில வெள்ளரித் துண்டுகளைப் படத்தில் இருப்பதுபோல் நெருக்கமாக அடுக்குங்கள். அதாவது மேலே அடுக்கிய இரண்டு வெள்ளரித் துண்டுக்கு நடுவில் ஒரு துண்டு வருவதைப் போல் கீழ் வரிசையை அடுக்க வேண்டும். அப்போதுதான் பார்ப்பதற்குக் குட்டிப் பாம்பு போன்ற உருவம் கிடைக்கும். வெள்ளரித் துண்டுகளின் மேல் வெண்ணெய் ஊற்றி மிளகுத் தூள், உப்பு இரண்டையும் தூவிவிடுங்கள். மேல் வரிசை வெள்ளரித் துண்டில் பாம்பின் கண்ணைப் போல் கறுப்பு உலர் திராட்சையை வையுங்கள். வெங்காயத் தாளை அரிந்து நாக்கு போல அலங்கரித்துப் பரிமாறுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT