Published : 25 Nov 2018 12:00 AM
Last Updated : 25 Nov 2018 12:00 AM
திண்டுக்கல் என்றாலே பலருக்கும் பிரியாணி நினைவுக்கு வரும். ஊரின் பெயர் சொல்லும் பெருமைகளுள் ஒன்றாக நிலைத்துவிட்ட பிரியாணியோடு மேலும் சில உணவு வகைகளைச் சமைக்கக் கற்றுத் தருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.புவனேஸ்வரி.
என்னென்ன தேவை?
ஆட்டுக் கறி - 1 கிலோ
சீரகச்சம்பா அரிசி - 1 கிலோ
எண்ணெய் - 100 மிலி
நெய் - 4 டீஸ்பூன்
பிரியாணி இலை - 2
பட்டை - 6 துண்டு
கிராம்பு - 4
வெங்காயம் - 400 கிராம்
பச்சை மிளகாய் - 5
தக்காளி - 5
இஞ்சி-பூண்டு விழுது - 5 டீஸ்பூன்
புதினா - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
தனியாத் தூள் - 2 டீஸ்பூன்
தயிர் - 200 மி.லி.
உப்பு - தேவையான அளவு
பிரியாணி மசாலா - 4 ஸ்பூன்
பிரியாணி மசாலா:
மூன்று பங்கு பட்டை, இரண்டு பங்கு கிராம்பு, ஒரு பங்கு ஏலக்காய் சேர்த்து வெயிலில் காயவைத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளுங்கள்.
எப்படிச் செய்வது?
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிப் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளியுங்கள். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாக வதக்குங்கள். இதில் சிறிது உப்பு சேருங்கள். பிறகு தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு இஞ்சி-பூண்டு விழுதைச் சேருங்கள். அடுத்ததாக புதினா இலை, மஞ்சள் பொடி, மிளகாய்த் தூள், தனியாத் தூள் ஆகியவற்றைச் சேர்த்துப் பின்னர் பிரியாணி மசாலாவைச் சேர்க்க வேண்டும்.
இதில் தயிர் ஊற்றி நன்றாகக் கிளறி, எலும்பில்லாத ஆட்டுக்கறியைச் சேர்த்துத் தேவையான உப்பு சேர்த்து வதக்குங்கள். கறி வேகும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடிவிடுங்கள். கறி வெந்த பிறகு குக்கரில் இரண்டு பங்கு அளவுக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்கவிட்டுப் பின்னர் ஊறவைத்த சீரகச்சம்பா அரிசியைப் போடுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடுங்கள். முக்கால் பதம் வெந்ததும் 15 நிமிடம் தம் போட்டு இறக்கினால் சுவையான திண்டுக்கல் பிரியாணி தயார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT