Published : 24 Dec 2017 11:23 AM
Last Updated : 24 Dec 2017 11:23 AM
கிறிஸ்துமஸ் என்றால் வான்கோழி பிரியாணி இல்லாமலா? உலகம் முழுக்க இது வழக்கமாக இருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ‘வான்கோழி முரடாக இருக்கிறதே? கறி நன்றாக வேகுமா? பக்குவமாகச் சமைத்துவிட முடியுமா’ என்ற சந்தேகத்தில் பலரும் அதைத் தவிர்க்கிறார்கள். மிக எளிமையாக வான்கோழி பிரியாணி சமைக்கக் கற்றுத்தருகிறார் மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த சோபியா ராஜன்.
என்னென்ன தேவை
பாசுமதி அல்லது சீரக சம்பா அரிசி- முக்கால் கிலோ
சிறிதாக நறுக்கப்பட்ட வான்கோழிக்கறி - முக்கால் கிலோ
சிறிய வெங்காயம் - 12
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், தேங்காய். தவிர, பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், பெருஞ்சீரகம், புதினா, மல்லித்தழை, மஞ்சள் பொடி, உப்பு ஆகியவை தேவையான அளவு.
எப்படிச் செய்வது
வாணலியில் 250 மில்லி நல்லெண்ணெய்யை ஊற்றிச் சுட வையுங்கள். எண்ணெய் காய்ந்ததும் லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுக் கிளறுங்கள். பிறகு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழத்தைப் போட்டு கிளற வேண்டும். அவை நன்று வதங்கிய பிறகு பெரிதாக நறுக்கப்பட்ட வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்க வேண்டும். அதைத் தொடர்ந்து ஏற்கெனவே தனித்தனியாக விழுதாக அரைத்துவைக்கப்பட்ட புதினா, மல்லி, இஞ்சி, பூண்டு போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்துக் கிளறுங்கள்.
பிறகு ஏற்கெனவே சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி, மஞ்சளில் தோய்த்துவைக்கப்பட்ட வான்கோழி இறைச்சியைப் போட்டு கிளற வேண்டும். கறி முக்கால்பதம் வெந்த பிறகு, தேங்காய்ப்பாலை ஊற்றிவிடவும். (பிராய்லர் கோழி என்றால், கறி வேகாவிட்டால்கூட பரவாயில்லை. ஆனால், வான்கோழிக்கறி கடினமானது என்பதால் கட்டாயம் வேக வைக்க வேண்டும்) அது கதகதவென கொதித்த பிறகு, அரிசியைப் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடிவைத்துவிடுங்கள். 20 நிமிடத்துக்குப் பிறகு இறக்கினால், சுவையான வான்கோழி பிரியாணி ரெடி.
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT