Published : 01 Jun 2014 10:01 AM
Last Updated : 01 Jun 2014 10:01 AM
பெண்களுக்கு முப்பது வயது கடந்துவிட்டாலே கால்சியச் சத்து பற்றாக்குறை ஏற்பட்டுவிடுகிறது. அதைத் தவிர்க்கப் போதுமான அளவு பால் எடுத்துக்கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
பால் வாடை பிடிக்காத பலரும் கடமைக்காகப் பால் அருந்துவார்கள். ஆனால் பாலிலும் விதவிதமாக உணவு சமைக்கலாம் என்கிறார்கள் நம் வாசகிகள். தங்கள் கைப்பக்குவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.
சௌசௌ பால் கூட்டு
பாலில் இனிப்பு மட்டுமே செய்ய முடியும் என்பது பலரது நினைப்பு. துளி உப்பு பட்டாலே பால் திரிந்துவிடும் என்பதால் அதில் இனிப்பைத் தவிர வேறெதையும் முயன்று பார்க்கப் பலர் தயங்குவார்கள். ஆனால் கூட்டு செய்யும்போது பாலுடன் கூட்டணி வைத்துக்கொள்வதில் தவறில்லை என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த மீனாட்சி.
சௌசௌ பால் கூட்டு செய்வது எப்படி என்று அவர் விளக்குகிறார். பாலில் பால்கோவா போலவே எளிய செய்முறை கொண்ட இனிப்பு, திரிபாகம். அதையும் செய்யக் கற்றுத் தருகிறார் இவர்.
என்னென்ன தேவை?
சௌசௌ - 1
பாசிப்பருப்பு - 50 கிராம்
தேங்காய் - 2 சில்லு
பச்சை மிளகாய் - 1
உப்பு, மஞ்சள் தூள், எண்ணெய் - தேவைக்கு
சீரகம் - அரை டீஸ்பூன்
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்க
பால் - 1 குழி கரண்டி.
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பை வேகவைத்து எடுக்கவும். சௌசௌ காயைத் தோல் சீவி துண்டுகளாக்கவும். இவற்றுடன் சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதை, வெந்துகொண்டிருக்கும் காயுடன் சேர்க்கவும். வேகவைத்த பாசிப் பருப்பு, தேவையான உப்பு போட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். கலவை நன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கவும். தாளிப்புச் சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்து, கூட்டில் கொட்டவும்.
கூட்டு ஆறியதும் காய்ச்சி ஆறின பால் சேர்த்துக் கலந்து பரிமாறவும். இதேபோல வெள்ளைப் பூசணிக்காயிலும் பால் கூட்டு வைக்கலாம். பாசிப் பருப்புக்குப் பதில் கடலைப் பருப்பைச் சேர்த்து செய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT