Published : 22 May 2023 05:03 PM
Last Updated : 22 May 2023 05:03 PM
14 ஆண்டுகளுக்கு முன் கர்நாடகாவில் பரபரப்பாக பேசப்பட்ட சயனைடு மோகன் சீரியல் கில்லர் கதையை மையமாக வைத்து இந்தியில் எடுக்கப்பட்டு தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள தாஹத் (DAHAAD) வெப் சீரீஸ், க்ரைம் ஜானரை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு விருந்து படைக்கிறது
பொதுவாக சீரியல் கில்லர் பற்றி எத்தனையோ படங்கள், சீரிஸ் வெளி வந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றில் பெரிய அளவில் ஹோம்வர்க் செய்து எடுக்க மாட்டார்கள். ரொம்ப நுணுக்கமாக எடுக்க மாட்டார்கள். ஹீரோ சீரியல் கில்லராக இருப்பார், கொலை பண்ணுவாரு, போலீஸ் ஒரு பக்கம் தேடுவாங்க. போலீஸ் கண்ணெதிரில் இருந்தும் சிக்க மாட்டார். கன்னத்தில் சின்ன மரு ஓட்டிகிட்டு தப்பி போவார், தொப்பி போட்டுகிட்டு, முக்கா கோட் போட்டுகிட்டு போவாரு, போலீஸால கண்டுபிடிக்க முடியாது. இந்த மாதிரி அபத்தமான விஷயங்கள்தான் பலவற்றிலும் இருக்கும். சமீப காலமாக பார்த்தால் மலையாள படங்கள், இந்தி வெப் சீரிஸ்கள் மிக நேர்த்தியாக கொஞ்சம் கூட குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு மிக மிக நுணுக்கமாக சின்ன சின்ன விஷயத்தை கூட கவனித்து எடுக்கிறார்கள்.
சில வெப் சீரிஸ்கள் நீங்கள் அப்படி நினைக்க முடியாத அளவுக்கு ரொம்ப பக்காவா எடுத்திருப்பாங்க. அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், போலீஸ் நடைமுறைகளை மிக அழகாக சொல்லி இருப்பார்கள். குற்றப் புலனாய்வு விஷயங்களை, விசாரணை சம்பந்தப்பட்ட தடயவியல், சைபர் க்ரைம் போன்ற விஷயங்களையும் ரொம்ப அழகாக அவை எப்படி புலனாய்வுக்கு பயன்படுத்துகிறார்கள் என்று காண்பித்திருப்பார்கள்.
அது மாதிரி ஒரு சிறப்பான வெப் சீரிஸ் என்றால் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள DAHAAD (கர்ஜனை என்று அர்த்தம்) வெப் சீரிஸை சொல்லலாம். இந்த வெப் சீரிஸ் ஒரு முக்கியமான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன் இந்த செய்திகளை நாம் பார்த்திருப்போம். தெற்கு கர்நாடகாவில் 2003-ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளில் 32 பெண்களை ஒரே மாதிரி கொன்றவன். சயனைடு கொடுத்து கொன்றதால் ‘சயனைடு மோகன்’ என்று அழைக்கப்பட்டான். ஒரு ஸ்கூல் டீச்சர் திருமண வயதை கடந்த திருமணத்துக்காக காத்திருக்கும் பெண்களை குறிவைத்து, அவர்களை காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்று அவர்களுடன் ஓர் இரவை கழித்த பின் அவர்களுக்கு கருத்தடை மாத்திரை கொடுப்பது போல், அதில் சையனைடு விஷத்தை தடவி கொடுத்து சாப்பிடச் சொல்லி கொன்றுவிட்டு தப்பி சென்று விடுவான்.
சயனைடு சாப்பிட்டு கழிவறையில் இறந்த பெண்கள் எல்லோருமே அடையாளம் காணப்படாததால் அனாதைப் பிணங்களாக புதைக்கப்பட்டனர். அவரவர் வீட்டிலும் ஓடிப்போனவ எக்கேடும் கெட்டு போகட்டும் என்று தலைமுழுகியதால் 32 கொலைகள் செய்தபின்னரும் ஒருமுறை கூட சயனைடு மோகன் சிக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஒரு கொலையில் போலீஸார் கிடைக்கிற சின்ன தடயத்தை வைத்து கடைசியில் குற்றவாளியை பிடித்தனர். கர்நாடகாவில் 2009 ஆம் ஆண்டு பரபரப்பாக பேசபட்ட இந்த கொலை வழக்கில் 5 கொலைகளுக்கு மட்டுமே ஆதாரம் கிடைத்தது.
எந்த வித நவீன கருவிகள், வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் குற்றவாளி எளிதாக தப்பித்தான். ஆனால், இந்தக் காலத்தில் அப்படி எல்லாம் நடப்பதற்கு நிறைய வாய்ப்பு குறைவுதான். ஏதோ ஒரு இடத்தில் குற்றவாளிகள் அவர்களை அறியாமல் தடயத்தை விட்டு செல்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. அனைத்துக்கும் மேல் சிசிடிவி மற்றும் உங்கள் கையுடன் பயணிக்கும் செல்போன் போன்ற விஷயங்கள் உங்களை காட்டி கொடுக்க எப்பவும் தயாரா இருக்கு. ஆனால், அந்தக் காலகட்டத்தில் இந்தக் கொலையை, ஒரே நபர்தான் செய்ததாக கண்டுபிடித்து தடயங்களை அழிப்பதற்கு முன் மிகச் சிறப்பாக யோசிச்சு குற்றவாளியை பிடித்து கைது செய்த தெற்கு கர்நாடகா போலீசாரை உண்மையிலேயே பாராட்டலாம்.
இதை மையமாக வைத்து இந்த DAHAAD வெப் சீரிஸ் வந்துள்ளது. கதைக்களம் 2019 காலகட்டத்தில் ராஜஸ்தானில் நடந்தது போன்று காட்டுகிறார்கள். கொலையை விசாரிக்க ஆரம்பிக்கும்போதே அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பல பெண்கள் காணாமல் போனதை கண்டுபிடிக்கும்போது, அது ஒரு சீரியல் கில்லரால் நடப்பதாக கண்டறிகிறார்கள். அதற்கு பின் நடக்கும் கண்ணாமூச்சிதான் மீதிக்கதை. மனைவியின் ஆண் நண்பர் மனைவியுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து தந்திரமாக கொலை செய்து தப்பிக்கும் கொடூர சைக்கோ கதாநாயகனாக விஜய் வர்மா கலக்குகிறார். கொஞ்சம் கூட அலட்டல் இல்லாமல் ஏற்ற பாத்திரத்தை திறமையாக செய்துள்ளார்.
ஒரு பெண் காணாமல் போன சின்ன சம்பவத்திலிருந்துதான் இந்தக் கொலை பற்றிய விசாரணை தொடங்க ஆரம்பிக்கும். ராஜஸ்தானில் ஓர் ஒதுக்கப்பட்ட மாவட்டத்தில் நடக்குற மாதிரியான கதை. இன்ஸ்பெக்டராக குல்ஷன் தேவய்யாவும், எஸ்.ஐ அஞ்சலி பாத்திரத்தில் சோனாக்ஷி சின்ஹாவும் நடித்துள்ளனர். இவர் தமிழில் ‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடித்திருக்கிறார். இருவரும் மிக நேர்த்தியாக போலீஸ் ஆபீஸராக வாழ்ந்து இருக்கிறார்கள்.
தலித்துகளை எப்படி நடத்துகிறார்கள் என்பதை ஒவ்வொரு சீனிலும் சின்னச் சின்ன காட்சிகள் மூலமாக நாசுக்காகவும், சில இடங்களில் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்கள். 8 எபிசோடுகளை கொண்டது இந்த வெப் சீரிஸ். ஒவ்வொரு எபிசோடும் மிக வேகமாக நகர்கிறது. க்ரைம் திரில்லர் மட்டுமல்ல சாதாரணமாக சுவாரசியமான படங்களை பார்க்க விரும்புகிறவர்களும் பார்க்கலாம். எந்த இடத்திலும் நீங்கள் குற்றம், குறை காண முடியாத அளவிற்கு மிக நேர்த்தியாக திரைக்கதை காட்சிகளை அமைத்து எடுத்து இருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT