Published : 18 May 2023 09:26 PM
Last Updated : 18 May 2023 09:26 PM
நகர்ப்புற காதலையும் அதைச் சுற்றி நடக்கும் சிக்கல்களையும் பேசும் ‘மாடர்ன் லவ்: சென்னை’ ஆந்தாலஜி தொடர் இன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இதில் ஐந்தாவது படமாக இடம்பெற்றிருப்பது பாரதிராஜாவின் 'பறவை கூட்டில் வாழும் மான்கள்'.
மெட்ரோ ரயிலில் பணிநிமித்தமாக தினமும் பயணிக்கும் ரவிக்கும் (கிஷோர்) ரோஹினிக்கும் (விஜயலட்சுமி) இடையே காதல் மலர்கிறது. ரவி தனது மனைவி ரேவதி (ரம்யா நம்பீசன்) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருபவர். ரோஹினியும் திருமணமாகி விவாகரத்தானவர். ரோஹினியுடன் சேர்ந்துவாழ முடிவெடுக்கும் ரவி, தனது மனைவி ரேவதியிடம் விருப்பத்தை தெரிவிக்கிறார். காதல் கணவரான ரவிக்கு திருமணத்துக்குப் பின் ஏற்பட்ட புதிய காதலை ரேவதி எப்படி உள்வாக்கிக் கொள்கிறார். அதை எப்படி தனது குழந்தைகளுக்கு பக்குவமாக புரியவைக்கிறார். இந்தக் குடும்பத்தில் இருந்து ரேவதி எப்படி பிரிந்து செல்கிறார் என்பதை கவிதை போல் விவரித்திருக்கும் படம்தான் 'பறவை கூட்டில் வாழும் மான்கள்'.
காதல் படங்களையும், கிராமத்து வாழ்வியலையும் இயக்குவதில் வல்லவர் இயக்குநர் பாரதிராஜா. அதுவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இளையராஜாவும் அவரும் ஒன்றிணைந்து இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். திருமணத்துக்குப் பின் வரும் காதலையும், விவகாரத்தையும் பொதுவெளியில் கண்ணியமாக பேசியிருக்கும் விதத்தில் வியக்க வைத்திருக்கிறார் பாரதிராஜா. இந்தப் படத்தின் இறுதியில் மறைந்த இயக்குநரும், அவரது நண்பருமான பாலுமகேந்திரா நினைவுகூரப்படுகிறார். அவரது கேமராவிலிருந்து கதை சொல்லியிருந்தால் எப்படி இருக்குமோ, அப்படியொரு உணர்வைத்தான் இந்தப் படம் தந்திருக்கிறது.
இதுபோன்ற உறவுமுறை சிக்கலை பாலுமகேந்திராவின் படங்களில் காண நேர்ந்திருந்தாலும், இது முற்றிலும் புதுமையான அனுபவத்தை தருகிறது. ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கரின் கேமரா அபார்ட்மென்ட் வீட்டுக்குள், கிஷோர், விஜயலட்சுமி, ரம்யா நம்பீசன் உரையாடும் காட்சிகளிலும், மெழுகுதிரி வெளிச்சத்தில் உணவருந்தும் காட்சிகளிலும் கதை சொல்கிறது. மெட்ரோ ரயில் நிலையங்கள், சென்னையின் இரவு நேர வாகனங்கள், கிஷோரும் விஜயலட்சியும் மெட்ரோ ரயிலில் பயணிப்பதும், பேசி சிரித்துக் கொள்வதும், சண்டையிட்டுக் கொள்வதுமான மான்டேஜாக வரும் காட்சிகளின் பின்னணியில், என் இனிய பொன்நிலாவே பாடல் பயன்படுத்தியிருக்கும் விதம் டாப்நாட்ச். இது ஒன்றே படம் முழுக்க படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா என்பதை உணர போதுமானதாக இருந்து விடுகிறது.
இந்தப் படத்தின் வசனங்கள் அத்தனை ஷார்ப்பாக எழுதப்பட்டிருக்கிறது. ரம்யா நம்பீசன் தனது குடும்பம், குழந்தைகள் குறித்து பேசும் வசனங்கள், தனது மாமனாரான டெல்லி கணோஷுக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சொல்லும் வசனங்கள், குழந்தைகள் குறித்து பேசும் வசனங்கள், இறுதியாக குழந்தைகளுக்கு இந்த உறவு எப்படி கதைபோல சொல்லப்பட்டிருக்கிறது என்ற வசனங்கள் ரசிக்க வைத்திருக்கிறது. கிஷோர், விஜயலட்சுமி, ரம்யா நம்பீசன் மூவருமே சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இரண்டு செல்பி எடுக்கப்படும், படத்தில் மிஸ் செய்யக்கூடாது ஷாட் அது. அந்த இரண்டு செல்பிகளுமே முழுப் படத்தையும் விளக்கிவிடும்.
நீதிமன்றங்களுக்குச் சென்று தேங்கி கிடக்கும் லட்சோபலட்சம் விவகாரத்து வழக்குகளின் மனுக்களாகி மட்கிவிடாமல், புதுமையான ஒருவழியை கண்டடைய முயற்சிக்கிறது பாரதிராஜாவின் 'பறவை கூட்டில் வாழும் மான்கள்' திரைப்படம்.
வாசிக்க:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT