Published : 22 Feb 2023 04:53 PM
Last Updated : 22 Feb 2023 04:53 PM

ஓடிடி திரை அலசல் | The Night Manager - ஆயுத வியாபாரம், ‘ரா’ அரசியலுடன் விறுவிறுப்பு அனுபவம்

ஜான் லே கேர்ஸின் (John Le Carre) 'தி நைட் மேனேஜர்' நாவலைத் தழுவி ஏற்கெனவே அதே பெயரில் ஆங்கிலத்தில் வெப் சீரிஸ் எடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்தி வெப் சீரிஸ் ‘தி நைட் மேனேஜர்’ (The Night Manager). இந்த வெப் சீரிஸை இயக்குநர் சந்தீப் மோடி, பிரியங்கா கோஷ், ருக் நபீல் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். ஒவ்வொரு எபிசோடும் 43 முதல் 51 நிமிடங்களுடன் 4 பகுதிகளைக் கொண்டது இந்த வெப் சீரிஸின் முதல் பாகம். க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் பார்த்துப் பழகிய பழைய கதைக்களம்தான் என்றாலும், கற்பனையான இந்த கேங்ஸ்டர் சீரிஸ் கதையில் நடப்பு உலக நிகழ்வுகளை இணைத்து கதைச் சொல்லியிருக்கும் விதத்தில் பார்வையாளர்களின் புருவங்களை உயர்த்த வைத்திருக்கின்றனர்.

பார்வையாளர்களுக்கு ஏற்கெனவே பழக்கப்பட்ட, எளிதில் யூகிக்கக் கூடிய கதையை தங்களது மேக்கிங் ஸ்டைலால் மிரட்டியிருக்கும் இயக்குநர்களின் மெனக்கெடல்கள் வியப்பளிக்கும். இந்த வெப்சீரிஸின் அழகே, "ஒரு எபிசோட் பார்ப்போம்" என்று தற்செயலாக பார்க்க முயற்சிப்பவர்களைக்கூட, மெல்ல மெல்ல இழுத்து 4 எபிசோடுகளையும் பார்க்கவைப்பதுதான். அந்தளவுக்கு ஆடியன்ஸை எங்கேஜிங்காக வைத்திருக்கிறது இந்த வெப் சீரிஸ்.

வங்கதேச தலைநகர் டாக்காவின் ‘தி ஓரியன்டல் பியர்ல்’ ஹோட்டலின் வெளியே மிகப் பெரிய போராட்டம் நடக்கிறது. மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான அப்போராட்டத்தால் அந்நாடு ஸ்தம்பிக்கிறது. இதன் தாக்கம் அந்த நட்சத்திர ஹோட்டலின் வரவேற்பறை வரை நீள்கிறது. அந்த ஹோட்டலில் தங்கியிருப்பவர்களின், கூச்சல் குழப்பங்களை எளிதாக கையாண்டு விருந்தினர்களை சமாதானப்படுத்துகிறார் ஹோட்டலின் நைட் மேனேஜரான ஷான் சென்குப்தா (ஆதித்யா ராய் கபூர்).

இந்நிலையில், ஷான் சென்குப்தாவிடம் அதே ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருக்கும் 14 வயது ஷபீனா (அரிஷ்தா மேதா) இந்தியாவிற்கு தப்பிச்செல்ல உதவும்படி கேட்கிறார். அவரை அங்கிருந்து தப்பிக்கவைக்கும் முயற்சிக்கு இந்தியாவின் 'ரா' பிரிவைச் சேர்ந்த லிபிகா சியாகியா ராவும் (திலோத்தம்மா ஷோபே) உதவுகிறார். இந்த உதவி மூலம் சர்வதேச ஆயுத வியாபாரியான சைலேந்திர ரங்டா என்ற ஷெல்லியை (அனில் கபூர்) பிடிக்க வேண்டும் என்பது 'ரா' அதிகாரியின் திட்டம்.

ஷான் சென்குப்தா யார்? 14 வயது பீனாவுக்கு அவர் உதவ முன்வருவதற்கான காரணம்? ஷபீனா தப்பிச் சென்றாரா? ஷெல்லியைப் பிடிக்க 'ரா' அமைப்பு போடும் திட்டம் என்ன? இந்தத் திட்டத்திற்கு ஷான் சென்குப்தா எப்படி உதவினார்? ஷெல்லியை ஷான் சென்குப்தா எப்படி சந்திக்கிறார்? ஷான் சென்குப்தாவை ஷெல்லி எதனால் நம்புகிறார்? ஷெல்லியை வலது மற்றும் இடதாக இருந்துவரும் நபர்கள் எப்படி கழற்றிவிடப்படுகின்றனர்? - இவைதான் இந்த வெப் சீரிஸின் திரைக்கதை.

முன்னாள் இந்திய கப்பல்படை வீரராகவும், ஹோட்டல் நைட் மேனேஜராகவும் வருகிறார் ஆதித்யா ராய் கபூர். கிளின்ஷேவ், பிளேசர், நுனி நாக்கு ஆங்கிலம் என அந்த கேரக்டருக்கு கச்சிதமானப் பொருத்தம். போலீஸ் வேனில் இருந்து தப்பிக்கும் முதல் காட்சி தொடங்கி, 4-வது எபிசோடின் இறுதிக்காட்சி வரை தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

அதேபோல் இந்த சீரிஸின் மற்றொரு பிரமாண்டம் அனில் கபூர். காஸ்ட்லியஸ்ட், கலர்புஃல் வில்லனாக கவனம் ஈர்த்திருக்கிறார். இவரது நம்பிக்கைக்குரிய பாத்திரங்களில் வருபவர்களும் தங்களது பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். அதேபோல் அனில் கபூரின் காதலியாக காவேரி கதாப்பாத்திரத்தில் வரும் ஷோபிதா துலிபாவுக்கு இந்த 4 எபிசோட்களில் பெரிதாக ஸ்கோப் எதுவும் இல்லை. இருந்தாலும் பகல் நேரங்களில் நீச்சல் குளத்திலும், இரவு நேரத்தில் கடலிலும் குதித்து குளித்து பார்வையாளர்களின் கண்களில் நீந்தியிருக்கிறார். இவர்கள் தவிர, திலோத்தம்மா ஷோபே, பக்சியென ஏராளமானோர் இந்த வெப் சீரிஸ் முழுக்க ஏராளமான நட்சத்திரங்கள் மிளிர்கின்றனர்.

ரா ஏஜென்டாக வரும் திலோத்தம்மா ஷோபே, இந்திய அதிகாரிகளை எதிர்கொள்ளும் விதம், ஆதித்யா ராய் கபூரை உளவு பார்க்கச் சொல்லும் காட்சிகள், ஆதித்யா ராய் கபூருடன் இலங்கையின் மீன் மார்க்கெட்டி பேசும் கொள்ளும் காட்சிகள், இலங்கை வந்தபின்னர், பக்சியுடன் அவருடைய உரையாடல்கள் யதார்த்தமானதாகவும், ரசிக்கும் விதத்திலும் இருக்கிறது.

பெஞ்சமின் ஜஸ்பெர் மற்றும் அனிக்ராம் வர்மாவின் ஒளிப்பதிவு இந்த வெப்சீரிஸுக்கு கூடுதல் பலம். வங்கதேசம், சிம்லா, டெல்லி, ரியாத், இலங்கையென 4 எபிசோடும் அவ்வளவு வண்ணங்களால் நிரம்பி வழிகிறது. குறிப்பாக கடலும், கடல் சார்ந்த ரிசார்ட்கள், ஸ்டார் ஹோட்டல் சூட் ரூம்கள் என பார்வையாளர்களின் கண்களை குளிரச் செய்கிறது ஒளிப்பதிவும், ஒவ்வொரு லேன்ட்ஸஸ்கேப்புக்கான கலர்டோனும். கேங்ஸ்டர் க்ரைம் த்ரில்லர் எபிசோட்டிற்கு தேவையான அத்தனை அம்சங்களையும் தனது பின்னணி இசையால் நிறைவு செய்திருக்கிறார் நம்மூர் சாம் சி.எஸ். அனில் கபூர் இன்ட்ரோ உள்ளிட்ட பல காட்சிகளில் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது.

இந்தியாவில் அரசு அலுவலகங்களில் நடக்கும் உள்ளடி அரசியல் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், ரா போன்ற நாட்டின் மிகப்பெரிய உளவு அமைப்புகளில் நிகழும் அரசியலை இந்த வெப் சீரிஸ் வெளிப்படையாக பேசியிருக்கிறது. குறிப்பாக, திலோத்தம்மா ஷோபே கதாப்பாத்திரம், சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியை பிடிக்க முயற்சிக்கும்போது, அவருக்கு அந்த அலுவலகத்தின் தலைமை கொடுக்கும் நெருக்கடிகள், இடமாற்றம் மூலம் தூக்கியடிப்பது பேன்ற காட்சிகள் உண்மை நிலையை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அலுவலக அதிகாரிகளுக்கு டீ கொடுக்கும் அலுவலக ஊழியரிடம் கூட எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் இந்தத் தொடர் சிறப்பாக விவரித்திருக்கிறது.

தடதடக்கும் திரைக்கதையின் வேகத்தில் ஆங்காங்கே குறைகளும் தென்படுகின்றன. குறிப்பாக, சர்வதேச அளவில் ஆயுத வியாபாரம் செய்யும் அனில் கபூரின் மகனை கத்திவைத்து மிரட்டும் காட்சி நெருடலாக உள்ளது. மேலும், ஆதித்யா ராய் கபூரை தன்னுடைய கேங்கில் இணைத்துக் கொள்வதற்கு இன்னும் அழுத்தமான காட்சிகள் இல்லாமல் இருப்பது தொய்வாக தெரிகிறது. இதுபோல இன்னும் சில குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், நிச்சயம் இந்த வெப் சீரிஸ் உங்களை ஈர்க்கும். பிப்ரவரி 17 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x