Published : 13 Feb 2023 07:03 PM
Last Updated : 13 Feb 2023 07:03 PM

ஓடிடி திரை அலசல் | Vadh - எலி பொறியில் சிக்கும் அரக்கனை வதம் செய்யும் கதை!

இயக்குநர்கள் ஜஸ்பால் சிங் ஷாந்து, ராஜீவ் பன்வால் இணைந்து எழுதி இயக்கியிருக்கும் இந்தி திரைப்படம் 'வத்'. இன்று பல நடுத்தர வர்க்கத்து குடும்பங்களில் நிலவும் நிஜத்தின் யதார்த்தங்களை மையக்கருவாக கையில் எடுத்துக்கொண்டு, அதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் க்ரைம் த்ரில்லராக நகர்த்தியிருக்கும் பாணி பாராட்டுக்குரியது. அதுவும் படத்தின் மைய கதாப்பாத்திரங்களாக வயது முதிர்ந்த ஒரு தம்பதியை வைத்துக்கொண்டு சமூகத்தில் நிலவும் அவலங்களைப் பேசுகிறது இந்தப் படம்.

ஆனாலும் தீயவரைக் கொன்றொழித்தல் கொலையாகாது அது வதம் என்பதுதான் சற்று நெருடலாகவே இருக்கிறது. சில லாஜிக் மீறல்கள், மெதுவாக நகரும் முதல் பாதி இவை தவிர படத்தில் பெரிய குறையென்று எதுவும் இல்லாமல் பார்வையாளர்களை படம் முழுக்க எங்கேஜிங்காக வைத்திருப்பது நிறைவைத் தருகிறது. அதிலும் படத்தின் டைட்டிலுக்கு முன் ஒரு காட்சி காட்டப்படுகிறது. படம் தொடங்கி போகப் போக, முன்வந்த காட்சியை பார்வையாளர்கள் மறந்தே போய்விட இறுதிக்காட்சிக்கு முன் வரும் காட்சியில் அந்த சீனை இணைத்திருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது.

குவாலியர் நகரில் மனைவி மஞ்சுவுடன் (நீனா குப்தா) வசிக்கிறார் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் ஷம்புநாத் மிஸ்ரா (சஞ்சய் மிஸ்ரா). இத்தம்பதியின் ஒரே மகனது கனவை நிறைவேற்ற அவ்வூரைச் சேர்ந்த பிரஜாபதி பாண்டேவிடம் (சுமித் சச்தேவா) வட்டிக்குப் பணம் வாங்கி படிப்பிற்காக மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் வெளிநாட்டிலேயே செட்டிலாகிவிட்ட மகனிடம் இருந்து உதவிகள் எதுவும் கிடைக்காததால் மிரட்டி பணம் பறிக்கும் பாண்டேவால் மாதந்தோறும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனிடையே பிரஜாபதி பாண்டேவுக்கும் அங்குள்ள உள்ளூர் ஊழல் காவல் அதிகாரிக்கும் (மனாக் விஜ்) இடையே ஒரு பிரச்சினையும் இருந்து வருகிறது.

இதிலிருந்து எல்லாம் ஷம்புநாத் மிஸ்ராவும் அவரது மனைவி மஞ்சுவும் எவ்வாறு மீள்கின்றனர்? என்ன செய்தனர்? இவர்களுக்கு யார் உதவியது? உதவி செய்ததற்கான காரணம் என்ன? பிரச்சினையிலிருந்து மீள ஷம்புநாத் மிஸ்ரா மேற்கொண்ட வழிமுறை நியாயமானதா? இல்லையா? - இதுதான் படத்தின் திரைக்கதை.

இந்தப் படத்தை தாங்கிப் பிடித்திருப்பது சஞ்சய் மிஸ்ரா, நீனா குப்தா இருவரும்தான். வயதான காலத்தில் மகனது உதவிக்காக காத்திருக்கும் பெற்றோராக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். முழங்கால் வலி அவஸ்தை, எலி இடுக்கி காட்சிகள், ஸ்கைப் மூலம் மகனிடம் பேசும் காட்சிகள், கரன்ட் இல்லாத நேரத்தில் மொட்டை மாடியில் ஓய்வெடுக்கும் காட்சிகளே, துளசி மாடத்துக்கு தண்ணீர் ஊற்றும் காட்சிகள், நேனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம், வட்டிக்கு பணம் கொடுத்தவனால் கொடுமைகளை அனுபவிக்கும் காட்சிகள் என கிடைத்த இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்கின்றனர்.

பிரஜாபதி பாண்டே மிரட்டுகிறார். மிஸ்ராவை மிரட்டும் காட்சிகளில் வித்தியாசமான வில்லத்தனத்தை வெளிப்படுத்துகிறார். அதேபோல் காவல் அதிகாரியாக வரும் மனாக் விஜ்ஜும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். இவர்கள் தவிர படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைவருமே தங்களது பங்களிப்பை உணர்ந்து நடித்திருக்கின்றனர். குழந்தைகள் நலன் சார்ந்த திரைப்படம் என்றாலும் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கான திரைப்படம். எனவே குழந்தைகளுடன் பார்க்கும்போது கவனமாக இருத்தல் அவசியம்.

இந்தத் திரைப்படத்தின் ஆகச் சிறந்த பலம் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவாளர் ஷபன் நருலாவின் கேமிரா, மெதுவாக நகரும் முதல் பாதியை கலை படைப்பாக்குகிறது. முதல் பாதியில் வரும் பெரும்பாலான காட்சிகளின் பிரேமிங் சென்ஸ் மற்றும் லைட்டிங் மூட் வியக்க வைக்கிறது. அதேபோல குருசரண் சிங்கின் பின்னணி இசையும் படத்தின் வேகத்திற்கு பக்கப்பலமாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தை பார்க்கத் தொடங்கும்போது வயதான முதியவர்கள் குறித்த கதைதான் என்று பார்வையாளர்கள் முடிவெடுக்கும் சூழலில் வேகமெடுக்கும் திரைக்கதையின் வேகம், அதன்பிறகு படத்தை முழுவதுமாக பார்க்க வைத்துவிடுகிறது. வெறுமனே கதாப்பாத்திரங்களை மட்டுமின்றி, வசனங்கள், சம்பந்தப்பட்ட காட்சிகளில் இடம்பெற்றிருக்கும் பொருட்கள் என அனைத்தையுமே ஒரு பாத்திரப்படைப்புகளாக்கி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

கடவுள், துளசி மாடம், கொல்லாமை, சைவம், நேர்மை, உதவி மனப்பான்மையென மையப்பாத்திரங்களை உருவகப்படுத்தியிருக்கும் இயக்குநர், வட்டிக்குப் பணம் கொடுத்தல், ஒழுக்கமின்மை, மது அருந்துதல், அசைவம் உண்ணுதல், பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளுதல் என எதிர்மறை கதாப்பாத்திரத்தை கட்டமைக்கும் இந்தப் போக்கு குறித்த விமர்சிக்க வாய்ப்பிருந்தாலும் ஒரு க்ரைம் த்ரில்லர் படமாக மட்டும் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் பிடித்திருக்கும். கடந்த ஆண்டு டிசம்பரில் திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம், பிப்ரவரி 3-ம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x