Published : 30 Jan 2023 06:02 PM
Last Updated : 30 Jan 2023 06:02 PM
இயக்குநர் பல்விந்தர் சிங் ஜுன்ஜுவா, ஜிம்மி சிங் மற்றும் ருபீந்தர் சாஹலுடன் இணைந்து எழுதி இயக்கிருக்கும் இந்தி வெப் சீரிஸ் ‘கேட்’ (CAT). சுமார் 40 முதல் 45 நிமிடங்கள் வரையிலான 8 பகுதிகளைக் கொண்டது இந்த வெப் சீரிஸின் முதல் பாகம். சீரிஸ் பார்க்கும் பார்வையாளர்களை எளிதில் பற்றிக்கொள்ளச் செய்யும் களத்தைக் கையாண்டிருக்கும் இயக்குநரின் முயற்சி பாராட்டத்தக்கது.
குற்றச் சம்பவங்களின் பின்னணியில் நடக்கும் சகோதரத்துவம், காதல், துரோகம், உளவு பார்த்தல், குடும்ப உறவுகளின் மகத்துவங்களை விரிவாக பேசியிருக்கிறார். கதையின் முக்கிய கதாபாத்திரமான குர்னாம் சிங்கின் (ரன்தீப் ஹுடா) வாழ்க்கையோடு மற்ற கதாபாத்திரங்களின் பின்னணியை விவரித்திருக்கும் விதம் சிறப்பாக உள்ளது.
போதைப் பொருள் விற்பனை செய்து போலீஸிடம் சிக்கிக்கொள்ளும் தனது தம்பியை மீட்க உதவி கோரும் காவல் துறை முன்னாள் உளவாளியான குர்னாம் சிங்கை கட்டாயப்படுத்தி, பஞ்சாப் மாநில காவல் துறையில் பணியாற்றும் ஷெதாப் சிங் (சுவிந்தர் விக்கி), அம்மாநிலத்தின் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை எப்படி அழித்தொழித்து பலன் அடைகிறார் என்பதுதான் இந்த க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸின் கதை. குரூரமான கொலைகள் மற்றும் வயது வந்தோருக்கான சான்றளிக்கப்பட்ட வெப் சீரிஸ் குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்க்கலாம்.
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த பிரிவனைவாத அரசியலும், ஆயுதப் போராட்டமும் அம்மாநிலத்தில் வசிக்கும் ஏழையெளிய சீக்கியர் குடும்பங்களை எவ்வாறு பாதிக்கிறது, ஆயுதம் ஏந்தி போராடியவர்களின் குடும்பங்களுக்கு என்ன நேர்ந்தது, எல்லையோர மாநிலமான பஞ்சாப்பில் போதைப் பொருட்கள் எவ்வாறு கடத்தப்படுகிறது, இதனால் அங்குள்ள இளைஞர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர், இதில் காவல் துறையின் பங்கு என்ன, அங்குள்ள அரசியல்வாதிகள் இந்த பிரச்சினைகளை எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்பபுத்திக் கொள்கின்றனர் என்பதுதான் இந்த வெப் சீரிஸின் திரைக்கதை.
வெப் சீரிஸ் தொடங்கியதில் இருந்தே மிகவும் விறுவிறுப்பாகவே செல்கிறது. எட்டு எபிசோடிலும் வரும் ட்விஸ்ட் காட்சிகள் பார்வையாளர்களுக்கு வெப் சீரிஸை முழுமையாக பார்த்துவிடும் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வஞ்சம் நிறைந்த காவல் துறையில் பணியாற்றும் ஷெதாப் சிங் தனது குழுவினருடன் சேர்ந்து பெண் அரசியல்வாதி ஆலுக்கிற்கு எதிராக குருனாம் சிங்கை வைத்து திட்டமிடும் காட்சிகள் சிறப்பாக உள்ளது.
அதேபோல், ஷெதாப் சிங் ஆலுக்கை வீழ்த்த நினைக்கும் மற்றொரு அரசியல்வாதியிடம் பேரம் பேசும் காட்சியில், நாய் ஒன்றுக்கு சிக்கன் லெக்பீஸின் வாடையைக் காட்டி விளையாடும் ஷெதாப் சிங்கின் சக கூட்டாளியான காவலர் ஒருவரின் கையை நாய் கடித்து குதறும் காட்சியும், அப்போது ஷெதாப் சிங் பேசும் வசனங்களும் நிஜங்களின் கற்பனையாக விரிந்திருக்கிறது.
இந்த மொத்த வெப் சீரிஸும் கேரி என்ற பெயரில் தொடங்கி குருனாம் சிங்காக மாறும் ரன்தீப் ஹுடாவின் வாழ்வியல் பயணம்தான். எனவே ரன்தீப் ஹுடாவைச் சுற்றியே கதைக்களம் நகர்கிறது. அவரும் குரூரத்தையும், மனிதாபிமானத்தையும் மாறி மாறி தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். நிறைய ட்விஸ்ட்டான காட்சிகள் வந்தாலும் அவை எதுவும் சுவாரஸ்யமானதாக இல்லை. ஆனால், காவல் துறை அதிகாரிகள் உளவாளிகளை எப்படி தங்களது சுயநலத்திற்காக எப்படி பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதற்கு இந்த க்ரைம் த்ரில்லர் சீரிஸ் ஒரு உதாரணம்.
இந்த க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் தங்களுக்கான பணியை சிறப்பாக செய்துள்ளனர். குறிப்பாக இந்த சீரிஸின் ஒளிப்பதிவும், இசையமைப்பும் வெகு சிறப்பாக உள்ளன. இயக்குநர் செல்வராகவனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான அரவிந்த் கிருஷ்ணாதான் இந்த சீரிஸின் ஒளிப்பதிவாளர். பஞ்சாப்பின் பனிப்போர்த்திய வயல்வெளிகள் முதல் போதைப்பொருள் உலகத்தின் இருள் சூழ்ந்த காட்சிகள் வரை அனைத்தையும் கண்களை குளிர்விக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஜோயல் கிராஸ்டோவின் இசையில் இந்த சீரிஸில் வரும் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாகவே உள்ளன.
இந்த வெப் சீரிஸ் சில இடங்களில் மந்தமாகவும் செல்கிறது. அதேபோல் கதையில் வரும் முக்கிய பெண் கதாபாத்திரங்கள் அனைத்துமே உடல் ரீதியான சுரண்டல்களால் பாதிக்கப்பட்டவர்களாகவும், அல்லது மன ரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும் காட்சிப்படுத்தியிருப்பது நெருடலாகவே இருக்கிறது. இதையும் மீறி ஆலுக் கதாபாத்திரத்தில் வரும் கீதா அர்வாலும், பபிதா கதாபாத்திரத்தில் காவல் அதிகாரியாக வரும் ஹஸ்லீன் கவுரும் கவனிக்க வைக்கின்றனர்.
பஞ்சாப் மாநில வரலாற்றின் சில முக்கிய அத்தியாயங்களை கருவாக வைத்துக் கொண்டு கற்பனைக் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வெப் சீரிஸ், பார்வையாளர்களுக்கு உண்மையான வரலாற்றையும் அதன் வலிகளையும் கொஞ்சமா து உணர்த்தியிருந்தாலே அது தொடருக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான். டிசம்பர் 9-ம் தேதி வெளியான இத்தொடர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காண கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT