Last Updated : 27 Jan, 2023 02:08 PM

 

Published : 27 Jan 2023 02:08 PM
Last Updated : 27 Jan 2023 02:08 PM

‘அயலி’ விமர்சனம்: தமிழ் இணையத் தொடர்களில் ஆக்கபூர்வமான புது வருகை!

தெய்வ வழிபாட்டின் வழியே உருவான கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களின் ஆக்டோபஸ் கரங்கள் பெண்ணை அடக்கியாள ஆணுக்கு கொடுத்திருக்கும் துணிச்சலை ‘அயலி’ எதிர்க்கும் விதம்தான் ஒன்லைன்.

90-களில் விரியும் கதை புதுக்கோட்டையின் பின்தங்கிய வீரபண்ணை கிராமத்தில் தொடங்குகிறது. பருவமெய்தும் பெண்களுக்கு உடனே திருமணம் என்கின்ற விநோத நடைமுறையால் அங்கிருப்பவர்கள் பலிகாடாவாகின்றனர். அத்துடன் இலவச இணைப்பாக பருவ வயதை எட்டிய பெண்கள், கோயிலுக்குள் நுழையவோ, பள்ளிக்கூடத்திற்கு செல்லவோ, ஊரைத்தாண்டி கூட அடியெடுத்து வைக்கவோ கூடாது போன்ற பழமைவாதத்தில் ஊறிக்கிடக்கிறது கிராமம்.

அந்த மண்ணின் மாணவி தமிழ்ச்செல்வி தான் வயதுக்கு வந்ததை மறைத்து மருத்துவராக வேண்டும் என்ற கனாவுடன் களமாடுகிறார். அவரின் அந்தப் போராட்டம் வென்றதா? ஊர் திருந்தியதா? அந்த ஊர் பெண்களின் நிலை என்ன? என்பதை 8 எபிசோடுகளின் வழியே கிட்டத்தட்ட 4.30 மணிநேர நீளத்தில் சொல்ல முற்பட்டிருக்கும் படைப்புதான் ‘அயலி’. ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

2023-ம் ஆண்டு ‘அயலி’யின் வருகையைப்போல தமிழ் வெப்சீரிஸ்களுக்கு வளர்ச்சியை தந்துவிட முடியாது. காரணம், இன்னும் பருவமடையாத தமிழ் இணையத்தொடர்கள் யாவும், த்ரில்லர் வகையறாக்களில் மாட்டிக்கொண்டு முழிக்கும் நிலையில், ‘அயலி’யின் பாதை தனித்துவமானது. ராஜேஷ்குமார் நாவலைப் போன்றிருந்த தமிழ் வெப் சீரிஸ்களை, மண்ணின் கதைகளை பேசவைக்கும் இடத்திற்கு ‘அயலி’ நகர்த்திருக்கிறாள். தொடரின் இயக்குநர் முத்துகுமாருக்கு பாராட்டுகள்.

‘கோயில இடிச்சிட்டா பொண்ணுங்கள எப்படி கட்டுப்படுத்துவீங்க’ என்ற புள்ளியிலிருந்து மொத்த தொடரையும் அணுகலாம். அடிப்படையில் ஒரு பெண்ணைக் கட்டுப்படுத்த கடவுளின் பெயராலான மூடநம்பிக்கையும், பண்பாடும், கலாச்சாரமும் போதுமானது என்பதையும், இதனை ஆண்கள் எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதையும் அழுத்தமாக பேசுகிறது தொடர்.

"உங்க குடும்ப கௌரவத்தை ஏன் எங்க காலுக்கு இடையில தேடுறீங்க?", "அப்படி குடும்ப மானம் முக்கியம்னா, அதை நீங்களே தூக்கிச் சுமக்கவேண்டியதுதானே? அதை ஏன் பொம்பளைங்கக் கிட்ட தர்றீங்க?" போன்ற வசனங்கள் மேற்கண்ட கட்டுப்படுத்துதலுக்கு தகுந்த பதிலடி சேர்க்கின்றன.

பெண்கள் ஒடுக்கப்படுவதற்கான க்ரவுண்ட் ரியாலிட்டியை பதிவு செய்துகொண்டிருக்கும் அதேவேளையில், மற்றொருபுறம் அதற்கு தீர்வான பெண் கல்வியை முன்வைக்கும் இடத்தில் மொத்த தொடரின் கனமும் கூடுகிறது. இப்படியான திரைக்கதை அமைப்புக்குள் பள்ளிக்குச் செல்லும் தமிழ்ச்செல்வியும், அவள் வயதையொத்த மற்றொரு பெண்ணின் நிலையையும் காட்சிப்படுத்திருக்கும் விதம் எடுத்துக்கொண்ட கதைக்கருவை இன்னும் ஆழப்படுத்துகிறது. ஒருக்கட்டத்தில் கட்டுப்பாடுகளுக்கு பழகும் பெண்கள் தங்கள் மகள்களை சென்டிமென்ட் ப்ளாக்மெயில்கள் மூலமாக ஆணாதிக்க சிந்தனைக்கு பழக்குவது போன்ற காட்சி அமைப்புகள் யதார்த்தம்.

‘உன் அறிவுக்கு எது சரின்னு படுதோ அத செய்’, ‘நம்ம வாழ்க்கையும் சேர்த்து ஆம்பளைங்க தானே வாழ்றாங்க’, ‘ஆம்பளைங்க சேலையத்தான் கட்டணும்’ என சொல்லும்போது, ‘கட்டிக்க.. பொறக்கும்போதே வேட்டியோடவா பொறந்த..’ போன்ற வசனங்கள் ‘நச்’ ரகம். தான் வயதுக்கு வந்ததை மறைத்து நடைபோடும் தமிழ்ச்செல்வியின் அந்த நடையும், பேருந்து பயணத்தில் வெளியுலகை ரசிக்கும் அவரது தாயின் எண்ண ஓட்டங்களும் இரு வெவ்வேறு வெளிகளை அடையாளப்படுத்துகின்றன.

தமிழ்ச்செல்வியாக அபி நக்‌ஷத்ரா. மாதவிடாய் ரத்தத்தை மறைக்க சிவப்பு இங்குடன் நடந்து வரும் காட்சியிலும், அம்மாவிடும் பேசும் உறுதித்தோய்ந்த உடல்மொழியிலும், ஊரை எதிர்த்து பேசும் காட்சிகளிலும் தனித்து தெரிகிறார். யதார்த்தமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுகிறார். அவரது அம்மாவாக அனுமோல், அப்பாவாக அருவி மதன் தேர்ந்த நடிப்பில் அழுத்தம் சேர்க்கின்றனர். சிங்கம் புலி, லிங்கா, வில்லன் கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்ய, அவர்களை ஓவர் டேக் செய்து கவனிக்க வைக்கிறார் டி.எஸ்.ஆர் தர்மராஜ். யூடியூப் புகழ் ஜென்சன் நடிப்பு கவனிக்க வைக்கிறது.

தனது டைட்டில் இசையிலிருந்தே ரேவா கவர்கிறார். பரந்துவிரிந்த நிலப்பரப்பையும், அச்சுபிசகாத அதன் சாயலை ஆன்மா குறையாமல் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் ராம்ஜியின் ஒளிப்பதிவு கவனிக்கவைக்கிறது. எடிட்டர் கணேஷின் படத்தொகுப்பு சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறது.

அழுத்தமான பிரச்சினையை மையப்படுத்தி நகரும் இந்தத் தொடர், ஒரு கட்டத்தில் ஹீரோயிச தன்மைக்குள் அடைபடும் எண்ணத்தை கொடுத்துவிடுகிறது. மொத்த ஊரையும், அங்கிருக்கும் பெண்களின் எழுச்சிக்கும் காரணமாகும் தமிழ்ச்செல்வி கதாபாத்திர சித்தரிப்பு மீட்பர் வகையறா அல்லது ஹீரோயிசத்துக்குள் சுருங்கிவிடுகிறது. அவருடன் மற்றொரு பெண்ணும் குரல் எழுப்புவதாக காட்டப்பட்டிருக்கும் காட்சியிலும் கூட, அவரையும் தமிழ்ச்செல்வியே இயக்கியிருப்பார்.

மொத்தமாகவே தமிழ் செல்வி எனும் ஒரு கதாபாத்திரம் பெற்றுத்தரும் விடுதலையாக தொடர் நிலைத்துவிடுகிறது. சோகத்தை பிழியும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளின் தொடர் அணிவகுப்பு அயற்சியை ஏற்படுத்தாமலில்லை.

மொத்தத்தில் ‘அயலி’ தமிழ் இணையத் தொடர்களில் ஆக்கபூர்வமான புது வருகை. எடுத்துக்கொண்ட கருவுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சமரசமின்றி உருவாகியிருக்கும் இப்படைப்பு காணக் கூடியது மட்டுமல்ல உரையாடக் கூடியதும். அயலி ட்ரெய்லர்:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x