Published : 11 Jan 2023 04:35 PM
Last Updated : 11 Jan 2023 04:35 PM
இயக்குநர் மகேஷ் நாராயணன் எழுதி இயக்கியிருக்கும் மலையாளத் திரைப்படம் ‘அறியுப்பு’ (Ariyippu). பெருங்கனவுகளுடன் பெருவாரியான மக்கள் புலம்பெயரும் கனவு நகரமான நொய்டாவை களமாகக் கொண்டு மனித மனங்களின் குரூரங்களை நிறம் பிரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இதுபோன்ற புலம்பெயரும் இடங்களில் வாழும்போது அங்கு ஏற்கெனவே வசித்துவரும் மக்களுடன் ஒன்றிப்போகாத உறவுகளை விரிவாக சித்தரிக்கிறது இத்திரைப்படம்.
மனித மனங்களின் ஒழுக்கத்தையும் மனசாட்சியையும் வெளிக்காட்டும் கண்ணாடியாக பளிச்சிடுகிறது இந்தப் படம். ஒரு சரியானதைச் செய்ய, சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான, உள்ளார்ந்த தேவைகளுக்கான போராக இப்படம் விரிகிறது. இந்த பூமியில் மிகவும் சரியான இனமாக கருதப்படும் மனித இனங்களின் குறைபாடுள்ள ஒழுக்கத்தை அம்பலப்படுத்துகிறது மகேஷ் நாராயணனின் இந்தப் படைப்பு.
கேரளத்தைச் சேர்ந்த ஹரீஷ் (குஞ்சாக்கோ போபன்) ரேஷ்மி (திவ்யபிரபா) தம்பி நொய்டாவில் உள்ள ஒரு கையுறை (Gloves) தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர். அங்கிருந்து ஸ்கில்டு லேபர்களாக வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக விசாவுக்காக காத்திருக்கின்றனர். அது கரோனா காலம் என்பதால், தூதரகங்கள் மூடப்பட்டிருப்பதால், நொய்டாவில் அவர்களது வாழ்க்கை நகர்கிறது.
இந்தச் சூழலில், ஸ்கில்டு லேபர் விசாவுக்காக ரேஷ்மி கையுறை தொழிற்சாலையில் பணியாற்றுவது போன்ற ஒரு வீடியோவை ஹரீஷ் எடுக்கிறார். அந்த வீடியோவை விசாவுக்கு விண்ணப்பிக்கும் தனியார் நிறுவனத்திடம் ஹரீஷ் கொடுக்கிறார். ஆனால், அந்த வீடியோ வேறுவிதமாக சித்தரிக்கப்பட்டு தொழிற்சாலை வாட்ஸ்அப் குழுக்களில் வைரலாகிறது. தீபோல பரவிய அந்த வீடியோ எவ்வாறு சித்தரிக்கப்பட்டது? யார் இந்த வேலையை செய்தது? இதனால் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன? உண்மையில் அந்த வீடியோவில் இருந்தது யார்? தம்பதி விசா கிடைத்து வெளிநாடு சென்றனரா? இல்லையா? என்பதுதான் படத்தின் திரைக்கதை. 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான திரைப்படம், குழந்தைகளுடன் காணும்போது கவனமாக இருப்பது அல்லது தவிர்ப்பது நல்லது.
உண்மையை பொய்யாகவும், பொய்யை உண்மையாகவும் மாற்றுவதில் இணைய உலகம் இன்றைய சூழலில் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இந்தத் திரைப்படம் Running between the lines என்று ஆங்கிலத்தில் கூறப்படுவது போல, ஒரு தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படும்போது அது உறவுகளுக்குள், குறிப்பாக கணவன் - மனைவி போன்ற மிக திடமான உறவுகளில்கூட ஏற்படுத்திவிடும் சிக்கல்களை நேர்த்தியாக டீட்டெயிலிங் செய்திருக்கிறது.
ஞா தான் கேஸ் கொடு, படா உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து, குஞ்சாகோ போபன் ஆடியன்ஸ்களின் ஒட்டுமொத்த லைக்ஸ், ஹார்ஸ், கேரிங், தம்ஸ் அப், வாவ் என அனைத்து விதமான எமோஜிகளை வாரி சுருட்டிக் கொள்கிறார். மனுசன் முகத்தில் அத்தனை விதமான உணர்வுபூர்வமான முகபாவங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ரேஷ்மியை அடித்து வீட்டைவிட்டு துரத்திவிட்டு கன்னத்தில் அடித்துக்கொண்டு அழும் காட்சி, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கும் காட்சியென விடாமல் ஸ்கோர் செய்கிறார் குஞ்சாகோ போபன்.
குஞ்சாகோ போபனின் மனைவியாக நடித்திருக்கும் திவ்ய பிரபாவும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வெளி மாநில தொழிற்சாலையில் பணியாற்றும் பெண், மனைவி, பழி சுமக்கும் குற்றம்சாட்டப்பட்வள் எல்லாவற்றையும் தனது உடல்மொழி முகபாவனைகளில் கடத்தி ரசிக்க வைத்திருக்கிறார். இதேபோல் படத்தில் வரும் அத்துனை கதாப்பாத்திரங்களுமே நம் அன்றாட வாழ்வில் கடக்கும் அல்லது கேள்விப்படும் ஏதாவது ஒரு மனிதர்களின் நிழல் போல் தோன்றும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறது.
இந்தப் படத்திற்கு இல்லை மகேஷ் நாராயணனின் கதைக்கு நிஜங்களின் வர்ணங்களைப் பூசி உண்மைகளை வெளிச்சம் காட்டியிருக்கிறது ஷானு ஜான் வர்கீஸின் ஒளிப்பதிவு. இதுவரை சொல்லப்படாத காட்டப்படாத கையுறை தொழிற்சாலை தான் படத்தின் பிரதான கதைக்களம். படத்தின் டைட்டில் கார்ட்டிலும், இறுதிக் காட்சியிலும் வரும் அந்த சுழலும் கையுறை அச்சுகளை பின் தொடர்ந்து காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது. அதேநேரம், படம் பார்க்கும் பார்வையாளர்களின் மனங்களுக்குள் சென்று கலைத்துவிடுகிறது.
அதேபோல், ஒழுங்கற்ற நிலையில் இருக்கும் சாலைகள், கட்டிடங்கள், நெருக்கடிக்குள் சிக்கித் திணறும் குடியிருப்புகள், வெளிமாநில முகங்கள், உடைகள், குப்பைகள், சாக்காடை, பனி, தொழிலாளர்கள் என எதையும் மிச்சம் வைக்காமல் காட்சிப்படுத்தியிருக்கிறது ஷானு ஜான் வர்கீஸின் கேமரா. படத்தைப் பார்க்கும் போது இது நம்ம ஊர் இல்லை என்ற உணர்வை பார்வையாளர்களுக்கு மிக தீவிரமாக சொல்லிவிடுகிறது ஒளிப்பதிவு. இந்த அடர்த்தி மிகுந்த காட்சிப்பதிவுகளே அங்கு வசிக்கும் மக்களோடு புலம்பெயர்ந்த மக்கள் உணர்வுபூர்வமாக ஒன்றாமல் இருப்பதற்கான காரணமாக இருக்கலாம் எனும் அனுமானத்தை பார்வையாளர்களுக்கு விவரித்து விடுகிறது.
சித்தரிக்கப்பட்ட வீடியோ, புலம் பெயர்ந்த கணவன் மனைவி வாழ்க்கை என்பதோடு கதையை சுருக்காமல், நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் நிலவும் தீமைகளை பகிரங்கப்படுத்துவதில் வெளிப்படுகிறது இயக்குநர் மகேஷ் நாராயணனின் காத்திரமான படைப்புத்திறன். அதேபோல் பேரிரைச்சலுடன் சுவிட்ச் ஆனவுடன் இயங்கும் இயந்திரங்களைப் போலவும், கையுறைகளுக்குப் பூசப்படும் வெளிர் நிறமாகவும் மாறிப்போன ஒரே மாதிரியான எந்திரத்தனமான வாழ்க்கை வட்டத்தில் இருந்து வெளியேற வேண்டியதன் அவசியத்தை இப்படம் பார்வையாளர்களுக்கு கொடுக்கலாம். இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT