Published : 15 Dec 2022 03:15 PM
Last Updated : 15 Dec 2022 03:15 PM

ஓடிடி திரை அலசல் | Qala - வஞ்சத்தால் வானம் தொடும் பட்டாம்பூச்சியின் பரிதாபக் கதை!

'புல்புல்' திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அன்வித்தா தத் எழுதி இயக்கியிருக்கும் இந்தி மொழி திரைப்படம் ‘கலா’ (Qala). ஒரு பெண் சொல்லும் பெண்ணின் கதையாக படத்தை விவரித்திருக்கும் விதம் அருமை. சுதந்திரத்துக்கு முன் நடைபெறும் கதை என்றாலும்கூட, ‘மீ டூ’ (Me too) வசனத்தை படத்தில் குறிப்பால் இடம்பெறச் செய்து, திரைத் துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல் காலங்காலமாக தொடர்வதை நிறுவியிருக்கும் இயக்குநரின் முயற்சி பாராட்டுக்குரியது.

படத்தின் தொடக்கத்தில் ‘கோல்டன் வினைல்’ (Golden vinyl) விருது பெற்ற நாயகியை படம்பிடிக்க ஆண் புகைப்படக் கலைஞர்கள் பலர் வரிசைக்கட்டி காத்து நிற்க, எங்கோ ஒரு மூலையில் நின்றிருக்கும் பெண் புகைப்படக் கலைஞரைக் கூப்பிட்டு படமெடுக்கச் சொல்லும் காட்சியும், ‘பெண் செகரட்டரியா?’ என நாயகி கலாவிடம் கேள்வி எழுப்பும்போது ‘செகரட்டரி... அவ்ளோதான்’ என பதில் சொல்லும் காட்சியும் ஆணாதிக்க மனோபாவத்துக்கு எதிரான தனது குரலை, இந்த சைக்கலாஜிக்கல் எமோஷனல் டிராமாவில் கிடைத்த இடங்களில் எல்லாம் உரக்க ஒலிக்கச் செய்திருக்கிறார் இயக்குநர்.

இசை பாரம்பரியத்தைச் சுமந்து வாழும் ஊர்மிளா தேவிக்கு (ஸ்வஸ்திகா முகர்ஜி) பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஆண் குழந்தை இறந்துவிட, பெண் குழந்தை உயிர் பிழைக்கிறாள். அவள் பெயர் கலா (டிரிப்தி திம்ரி). இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள ஒரு மலை பங்களாவில் தாயும் மகளும் வசித்து வருகின்றனர். பெருமைமிகு இசைக் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாத வருத்தம் ஊர்மிளா தேவியை கவலை கொள்ளச் செய்தாலும், கலாவுக்கு இசையோடு கலந்து பாரம்பரிய பெருமைகளையும் கற்பிக்கிறார். சிறிதாக ஸ்ருதி பிசகி பாடினாலும், வீட்டின் வெளியே கொட்டும் பனியில் இரவு முழுவதும் நிற்கவைத்து தண்டிக்கப்படுகிறாள் கலா. இதுபோன்ற தண்டனைகள் அவளது ரத்தத்தை பாரம்பரிய சங்கீதம் உறைந்து போகச் செய்கிறது.

ஒரு கட்டத்தில் மகள் கலாவின் இசை அரங்கேற்றம் அந்த உள்ளூரின் புகழ்பெற்ற சபாவில் நடக்கிறது. சொற்பமான எண்ணிக்கையில் வந்த கூட்டம் எழுந்து நின்று பாராட்டினாலும் தனது தாயிடம் இருந்து அவள் எதிர்பார்த்த பாராட்டு கிடைக்காததால், உடைந்து போகிறாள் கலா. அப்போதுதான் அந்த மேடையில் உள்ளூரைச் சேர்ந்த ஜெகன் (பாப்லி கான்) பாட வருவதற்குமுன் அந்த அரங்கம் நிரம்புகிறது. அவன் பாடத் தொடங்கிய மறுகணமே மனமுவந்து ரசிக்கத் தொடங்கிவிடுகிறாள் ஊர்மிளா. ஜெகனை உச்சிமுகர்ந்து பாராட்டி, பரிசளித்து, ஜெகனை சிஷ்யனாகவும் தனது குடும்பத்தின் இசை வாரிசாகவும் ஏற்று சங்கீதம் கற்பிக்க தங்களது மலை பங்களாவுக்கே அழைத்துச் சென்றுவிடுகிறாள் ஊர்மிளா.

தனது பாடலைக் கேட்டு இப்படியெல்லாம் பாராட்டாத தாய், யாரென்றே தெரியாத ஒருவரை புகழ்வதை கலாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து என்ன நடக்கிறது? கலாவை ஒருமுறையாவது தாய் ஊர்மிளா பாராட்டினாளா? ஊர்மிளாவிடம் இசை கற்றுக் கொள்ளும் ஜெகனுக்கு என்ன மாதிரியான வாய்ப்புகள் கிடைத்தன? கலாவின் எதிர்காலம் என்னவானது? தாயின் பாராட்டைப் பெறும் முயற்சியில் அவளுக்கு கிடைத்தது என்ன? இதுதான் படத்தின் திரைக்கதை.

படம் பார்க்கத் தொடங்கிய சில நிமிடங்கள் இமாச்சலப் பிரதேசம், பங்களா சமூகம், இசை பாரம்பரியம் ஏதோ எலைட் சமூகத்தின் கதை போல தோன்றலாம். ஆனால், இந்த திரைப்படம் பேசியிருப்பது என்னவோ அனைத்து தரப்பிலும் காணப்படும் தாய் - மகள் உறவுகளுக்கு இடையிலான அடிப்படை சிக்கலைத்தான். ஆண் பெருமைக்குரியன், பெண் குழந்தைப் பெற்றுக் கொண்டு கணவனோடு வாழ மட்டுமே தகுதியானவள் என்ற பொதுப்புத்தி கொண்ட பழமைவாத சிந்தனையில் வழிவந்த அம்மாவுக்கும், இந்த கற்பிதங்களுக்கு எதிராக எந்த எல்லைக்கும் சென்று தனக்கு பிடித்ததைச் செய்ய துணியும் நவீனத்தின் நீட்சியான மகளுக்கும் இடையிலான காத்திரமான படைப்புதான் இத்திரைப்படம்.

இந்தப் படத்தில் மூன்று முக்கிய கதாப்பாத்திரங்களில் டிரிப்தி திம்ரி, ஸ்வஸ்திகா முகர்ஜி மற்றும் பாப்லி கான் (மறைந்த நடிகர் இர்பாஃன் கானின் மகன்). இவர்கள் மூவருக்கும் இடையிலான எல்லையற்ற அன்பு, லட்சியம், ஆசை, கனவுகள், வஞ்சகம், சூழ்ச்சி பற்றி விரிவாக பேசுகிறது இத்திரைப்படம். டிரிப்தி திம்ரியை பேரழகு என்று புகழ்வதுகூட குறைவானதாகத்தான் இருக்கும். அப்படியொரு கொள்ளை அழகுடன் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தாயிடம் பாராட்டு பெறாத சமயங்கள், தனது ஆசைக்காக அடுத்தவருக்கு இழைத்த கொடுமை, புகழ் அடைவதற்காக அவள் இழக்க நேர்ந்தவை, தனக்கு நேர்ந்த துயரை எண்ணி கவலை கொள்ளும் தருணங்கள், கடந்தகால கனவுகளால் தூக்கமிழந்து துயருறும் காட்சிகளில் டிரிப்தி திம்ரி வைரக்கல்லாக ஜொலித்திருக்கிறார். போட்டோஷூட் காட்சிகள், போட்டோக்கள் முன்நின்று கோப்பைகளை கையில் வைத்தபடி நன்றி சொல்லிப் பார்க்கும் காட்சிகள், க்ளைமாக்ஸுக்கு முன்வரும் ரெக்கார்டிங் ஸ்டூடியோ காட்சி மற்றும் க்ளைமாக்ஸ் காட்சியில் தனது மோனோ ஆக்டிங்கின் மூலம் பார்வையாளர்களின் பாராட்டை வாரிச் சுருட்டியிருக்கிறார் திரிப்தி திம்ரி.

இவருக்கு தாயாக நடித்திருக்கும் ஸ்வஸ்திகா முகர்ஜி, குடும்ப பாரம்பரியத்தை காக்கும் பெண்ணாக, இசை கற்பிக்கும் குருவாக, கண்டிப்புமிக்க தாயாக, ஜெகன் போன்றவர்களுக்கு உதவிடும் உயர்ந்த மனம் கொண்டவராக பல்வேறு பரிமாணங்களையும் அலட்டிக் கொள்ளாமல் தனது உடல்மொழி, முகபாவனைகளில் வெளிக்காட்டி அப்ளாஸ்களை அள்ளியிருக்கிறார். தனது மகள் என்றுகூட பாராமல், தவறுகளை சுட்டிக்காட்டி கோபப்படும் காட்சிகளில் சிறப்பாக தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

1930-40 காலக்கட்டங்களில் நடைபெறும் வகையில் எடுக்கப்பட்டுள்ள ஒரு பீரியட் பிஃலிம் என்பதால் தொழில்நுட்பப் பிரிவில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது ஆகச்சிறந்த பங்களிப்பையே தந்துள்ளனர்.

குறிப்பாக, படத்தின் ஒளிப்பதிவும் லைட்டிங்கும் ஒவ்வொரு காட்சியையும் ஓவியம் போல படம் பார்ப்பவர்களின் மனதில் பதிய வைக்கிறது. ஒளிப்பதிவாளர் சித்தார்த் திவான் கவிதைப் போன்ற இத்திரைப்படத்தை சிற்பம் போல் கேமராவில் செதுக்கியிருக்கிறார். இமாச்சலின் பனிப்படர்ந்த மலைக் காடுகள் , மலை பங்களா அறைகளின் அரிக்கன் விளக்கு வெளிச்சங்கள், கொல்கத்தாவின் ஹூக்ளி ஆறு, ஹவுரா பால கட்டுமானப் பணிகள், கலாவின் அறிமுக காட்சியில் வரும் போட்டோஷூட், அந்த பாதரசமாணி சட்டகத்தில் பாதரசம் உருளும் காட்சி, மஞ்சள் விளக்கொளியில் கலா கண்ணாடியில் பூச்சியை அடிக்கும் காட்சி, கலாவுக்கு தண்ணீர் வைக்கப்பட்ட கண்ணாடி டம்ளரின் ஒரு பாதியில் அவளது முகம் தெரியும் காட்சி என படம் முழுக்க கேமராவில் கவியரங்கமே நடத்தியிருக்கிறார். படத்தில் வரும் ஓர் இறப்புக் காட்சி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் மிகச்சிறந்த விஷூவல் ட்ரீட்டாக உள்ளது.

ஸ்லோ பர்னிங் சைக்காலஜிக்கல் டிராமாவான இந்த திரைப்படம் இசை பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தின் ஜீவாதாரமாக பின்னணி இசையும் பாடல்களும் அமைந்துள்ளன. இசையமைப்பாளர் அமித் திரிவேதி இப்படத்திற்கு பாடல்கள் மூலமாக ஆத்மாவையும், இசையமைப்பாளர் சாகர் தேசாய் பின்னணி இசை மூலம் உயிரையும் கொடுத்துள்ளனர். அமித் திரிவேதியின் இசையில் வரும் 6 பாடல்களுமே கேட்டமாத்திரத்தில் ரசிக்க வைக்கின்றன. அந்த 'கோயீ கேஷே துன்ஹேயே ஷமு ஆயே', 'ஹேசி மருனீ ஜோமரே ', 'பாரூ குதூரே நச்சேடுங்கே அபுதே', 'பிக்காரு நோக்கோ முஜுகோ' பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. அதிலும் பாடல்களுக்கான இடையிசைகளில் வரும் சிதார், தில்ருபா, சரோத், சாரங்கி, சந்தூர், தம்புரா, தபேலா, டோலக், அக்கார்டின் இசைக்கருவிகள் பாடல்களைக் கேட்பவர்களை வசியம் செய்கின்றன.

அதேபோல் பின்னணி இசைக்கோர்ப்பில் சாகர் தேசாய் மிகச் சிறப்பான பணியைச் செய்திருக்கிறார். ஒரு பீரியட் சைக்கலாஜிக்கல் டிராமாவின் கதையோட்டத்திற்கு எந்தவொரு இடையூறும் செய்யாமல் ஓசையின்றி பறக்கும் வண்ணத்துப்பூச்சி போல மனதை இழைத்திருக்கிறது பின்னணி இசை. சாரங்கி, சரோத், தம்புரா என ஒவ்வொன்றையும் தனியாக கேட்பது இனிதாக இருந்தாலும். பெரும்பாலான காட்சிகளில் பயன்படுத்தியிருக்கும் அந்த செல்லோவின் அடர்த்தியான பின்னணி இசை கலாவின் ஆழ்மன சோகத்தின் வலியை எடை குறையாமல் பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறது.

பாரம்பரியத்துக்கும் நவீனத்துக்குமான கால இடைவெளிகளைக் களைய முயற்சிக்கும் பெண்ணியத்தின் உளவியல் முரண் சார்ந்த பிரச்சினைகளை உரக்கப் பேசியிருக்கிறது இந்த 'Qala' திரைப்படம். படத்தின் மேக்கிங்கும், மெனக்கெடல்களும் பார்வையாளர்களை ஒவ்வொரு காட்சியிலும் எங்கேஜிங்காக வைத்திருக்கிறது. கடந்த டிசம்பர் 1-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு காணக் கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x