Published : 03 Dec 2022 06:04 PM
Last Updated : 03 Dec 2022 06:04 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெலோனி என்கிற பெண் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார் என்ற விசாரணையில் காவல் துறை இறங்க, அதில் நிறைய குழப்பங்களும், மர்மங்களும் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்குகிறது. அதேபோல இறந்தப் பெண் குறித்த வதந்தியும் ஒருபுறம் காட்டுத்தீயாக பரவ, இறுதியில் வெலோனியைக் கொன்றது யார்? எதற்காக அவர் கொல்லப்பட்டார்? - இப்படி பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லும் க்ரைம் - த்ரில்லர் வெப் தொடர் தான் ‘வதந்தி’. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தத் தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கியிருக்கிறார். இவர் ‘லீலை’, ‘கொலைகாரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். புஷ்கர் - காயத்ரி இந்த தொடரை தயாரித்துள்ளனர்.
மொத்தம் 8 எபிசோடு கொண்ட இந்தத் தொடரின் தொடக்கத்தில் மர்மங்கள் கூடிக்கொண்டே போக, அதே அளவிலான ஆர்வமும் அதிகரிக்கத் தொடங்குகிறது. கன்னியாகுமரியின் வட்டார வழக்கை பிரதியெடுத்து, மண்மனம் மாறாமல் இயக்குநர் ஓர் உலகை கட்டமைத்து, அதற்குள் ஒரு குற்றத்தை நிகழ்த்தி பார்வையாளர்களை பிரவேசிப்பதற்கான இடத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறார்.
கேரளாவை ஒட்டிய மண்வாசத்துடன் மலையாளம் கலந்த மொழிவாசமும் கூட‘ஓர்மையில்ல சார்’, ‘பேடிக்கில்லா’ போன்ற வார்த்தைகள் அசலை வார்க்கின்றன. முடிந்த அளவுக்கு களத்தை மொழிவழியில் யதார்த்தப்படுத்தி ஊருக்குள் பயணிக்கும் அனுபவத்தை கொடுக்க இயக்குநர் முயன்றிருக்கிறார்.
அந்த ஊரின் சாயலுக்கு உயிர் கொடுக்கிறது காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு. ‘மாநாடு’ படத்தில் போலீஸ் கதாபாத்திரத்திற்கும், இதற்கும் மலையளவு வித்தியாசம். குறிப்பாக 5-வது எபிசோட்டில் சிங்கிள் ஷாட்டில் அவர் பேசும் வசனம், தொடர் இறுதியை எட்டும்போது தனக்கேயுண்டான உடல்மொழியில் மிரட்டுவது, சென்டிமென்ட் காட்சிகளில் மெச்சூரிட்டி என மிகை நடிப்பின்றி கதாபாத்திரத்திற்கான மீட்டரில் கச்சிதம் காட்டியிருக்கிறார்.
வெலோனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சனா தேர்ந்த சீனியர் நடிகையான லைலாவுடன் போட்டிப்போட்டு நடித்திருக்கிறார். அறிமுக நாயகி என்ற தடம் தெரியாதபடி நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார். இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் லைலா அழுத்தம் சேர்க்கிறார். தவிர, விவேக் பிரசன்னா, நாசர், ஹரீஷ் பேரடி, ஸ்ம்ருதி வெங்கட் உள்ளிட்டோரின் நடிப்பும் வட்டார மொழியும் கதைக்கு பலம்.
‘உண்மை நடக்கும்; பொய் பறக்கும்’, ‘ரொம்ப நல்லவனும், ரொம்ப கெட்டவனும் ஒரே மாதிரி பேசுவாங்க; அவங்கள கண்டுபிடிக்கவே முடியாது’ வசனங்கள் ஈர்ப்பு. தொடரின் இறுதியில் பேசும் அறம் சார்ந்த வசனங்கள் வெறும் க்ரைம் - த்ரில்லருடன் முடிவதை தவிர்த்து பிரசாரமில்லாத மெசேஜையும் புகுத்துகின்றன. வெலோனி கதாபாத்திரத்தின் ஆழமான எழுத்தும், குற்றத்தின் பின்னணியை அடுக்கிய விதமும் மொத்த தொடரின் விறுவிறுப்பை கூட்டி அடுத்தடுத்த எபிசோடுகளுக்கு நகர்த்துகிறது. எங்கேஜிங்கான திரைக்கதையில் சில எபிசோடுகள் பொறுமையாக நகர்வது, பார்வையாளர்களை ‘பொய் ட்விஸ்ட்’ வழியே ஏமாற்ற அதிக நேரம் எடுத்துக்கொள்வது சோதிக்கவே செய்கிறது. வட்டார மொழியை சில இடங்களில் புரிந்துகொள்ள ஆங்கில சப்டைட்டில் தேவைப்படுகிறது.
இதையெல்லாம் தாண்டி தொடர் பேச முனையும் கருத்து அழுத்தமானது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் எளிதாக ஒரு பெண்ணை குற்றப்படுத்திவிட முடியும் என்பதையும், தனது டிஆர்பி, பரபரப்பு பசிக்காக வதந்திகளை உண்டு செறிக்கும் ஊடகங்களின் கோரமுகத்தையும், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, வழக்கை முடித்து கொடுக்க காவல் துறை மீதான அழுத்தம், சம்பந்தப்பட்டவரை பாதிக்கும் வதந்திகள் என பல்வேறு விஷயங்களை தொடர் பேசுகிறது.
இடையிடையே வரும் திருப்பங்களும் ரசிக்க வைக்கின்றன. ஒரு தனிப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை கேலிக்கூத்தாக்கி, பொய் பரப்பி இன்பம் காணும் சமூகத்தை சாடும் தொடரின் இறுதிக்காட்சி அழுத்தம் கூட்டியுள்ளது.
தொடரின் நீளம், பழங்குடியின மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கு, நாசர் கதாபாத்திரத்தின் குழப்பம், சுவாரஸ்யத்திற்காக கூட்டபட்ட தேவையில்லாத காட்சிகள் திரைக்கதை ஓட்டத்தை மட்டுப்படுத்துகின்றன. அதேபோல வெலோனிக்கு பதிலாக மற்றொரு பெண் பாதிக்கப்படும்போது அதை காவல் துறை கண்மூடி கடப்பதன் லாஜிக் புரியவில்லை. தவிர, கன்னியாகுமரியின் நிலமும், வனமும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவில் எழில் கூடியிருக்கின்றன. சைமன் கிங் பின்னணி இசை த்ரில்லருக்கான உலகத்தைக் கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
மொத்தத்தில் சில பிரச்சினைகள் இருந்தாலும் அதையெல்லாம் கடந்து வார இறுதி நாட்களில் பொறுமையுடன் பார்க்க தமிழின் மற்றொரு சுவாஸ்ரய வெப் சீரிஸ் ‘வதந்தி’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT